பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
95



கத்தை வளர்க்கும் வழிவகைகளைக் காண்பதில் அவன் ஆர்வமிக்கிருந்தான்; ஒரு தொழிலின் வளர்ச்சி, அத் தொழிலின் மீது, அரசியலார் விதிக்கும் வரிகளைப் பொறுத்திருக்கும் என்ற வாணிக அறிவு வாய்க்கப் பெற்றவன் அவ்வளவர் கோன். வரி அதிகமாயின், தொழில் வளராது குன்றிவிடும்; அது குறைவாயின், வளர்ந்து பெருகும் என்பதை அறிந்திருந்தான். சோணாட்டுக் கடற்றுறைகளில், கலங்களில் ஏற்றி வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருள்களும், வெளி நாட்டிலிருந்து தமிழகத்துப் பேரூர்களின் வாணிக நிலையங்களில் விற்பனையாதற் பொருட்டுக் கலங்களில் வந்த பொருள்களும் மலையெனக் குவிந்து கிடக்கும்; அப்பொருள்கள் அனைத்திற்கும், இதற்கு இவ்வளவு வரி என விதித்து, அதிற் சிறிதும் குறையாமல் வாங்கும் வரி முறையைச் சோழர் குல மன்னர்கள், கரிகாலன் காலத்திலிருந்தே மேற் கொண்டு வந்துள்ளனர். கடல் வாணிகப் பொருள்கள் மீது விதிக்கும் அவ்வரிக்குச் சுங்கம் என்பது பெயர்; அச் சுங்க வரியால் வாணிகத்தின் வளர்ச்சி ஓரளவு தடை யுற்றுளது என்பதைக் கண்டான் குலோத்துங்கன்; மேலும் சுங்க வருவாயை எதிர்நோக்க வேண்டா வகையில், சோணாட்டின் அரசியல் பண்டாரம், நிறைந்திருந்தது. அதையும் அறிந்திருந்தான் அவன், உடனே, வாணிகப் பொருள்கள் மீது, வழி வழியாக விதித்து வாங்கி வந்த சுங்க வரியை அகற்றி விட்டான்; ஆயிரம் ஆண்டுகளாகத் தாங்கி வந்த ஒரு பெருஞ்சுமையை இறக்கிவிட்ட குலோத்துங்கனைச் சோணாட்டு வணிக மக்களும், ஆங்கு வந்து தொழில் புரியும் வெளிநாட்டு, வாணிக மக்களும், வாயார வாழ்த்தினார்கள்; சுங்கம் தவிர்த்த சோழன் எனப் பெயர் சூட்டிப் பாராட்டினார்கள் மக்கள்; தஞ்சை மாநகரைச் சார்ந்திருந்த கருந்திட்டைக் குடிக்குச் சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என்றும், சோணாட்டில் ஒடிய ஒரு ஆற்றிற்குச் சுங்கம் தவிர்த்த சோழப் பேராறு என்றும் பெருமைதரும் அவன் பெயரால்