பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 38

தோழியின் உதவியே தேவையில்லை. அவர்களுக்குள் காதல் அவ்வளவு முறுகி வளம் பெற்றுவிட்டது. அவனுக்காக அவள் உயிரைத் கூடத் தியாகம் செய்யத் தயாராயிருந்தாள். அவளுக்காக அவனும் உயிரைத் தியாகம் செய்யத் தயாராயிருந்தான். இப்படி இருக்குங்கால் அவன் பிரிய நேரிடுகிறது. அவனது பிரிவு அவளை மிகவும் வாட்டுகிறது. ஆனால் அவள் அதைப் பிறரிடம் கூறவில்லை. பிறரிடம் தன் பிரிவுத் துன்பத்தைக் கூறின், தலைவனுக்கு அதனாற்பழி ஏற்படக் கூடும் என்ற எண்ணமே அவளைத் தன் துன்பத்தை மறைக்கச் செய்யும் தியாகத்தைச் செய்யச் சொல்கிறது.

இங்ங்னம் தலைவி செய்த தியாகங்களை எல்லாம் தலைவன் திரும்பி வந்தபோது தோழி அவனிடங் கூறி இப்படிப்பட்ட தலைவியை நீவெகு விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். தோழி வாயிலாக வெளிப்படும் தலைவியின் தியாகச் செயல்களைப் பாருங்கள். "என்னுடைய தோழியாகிய தலைவி நீ பிரிந்த காலத்துத் தனக் கேற்பட்ட துன்பத்தினால் நீ செய்த அருளின்மையை என்னிடமும் கூறாது மறைத்து வைத்தாள். அவள் அங்ங்னம் மறைத்து வைத்தது. அக்கருணை யின்மையை யான் கேட்டுப் பிறரிடம் சொல்லவும் கூடும் என்று அஞ்சியே ஆகும். யான் நின்னைப் பிறர்முன் பழித்தலுக்கு அவள் நாணுகிறாள். என்னிடம் மட்டுமல்ல ஆயத்திலுள்ள ஒருவரும் அறியாதபடி மறைத்து வைத்தாள். ஏனெனில் ஆயத்தார், "நீ வன்கண்மையுடையை" என்று கூறுதலைக் கேட்டதற்கு நாணியே ஆகும். ஊரிலுள்ளார்க்கும் மறைத்தாள். இவைகள் தலைவியின் தியாகப் பண்பைக் குறிக்கின்றன. நின்பழியை மற்றவர் அறிதலையும் அவள்தான் நாணத் தக்கதாகக் கருதினாள் என்றால் அது தலைவி உன்பாற்கொண்ட நேயத்தால் எழுந்த தியாக வுணர்வேயாகும்". என்று தோழி தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்தும் போது கூறினாள். இக் காட்சியுள், தனக்குத் துன்பமெய்தும், காதல் காரணமாகத் தலைவனுக்காகத் தன் இன்பத்தைத் தியாகம் செய்யும் தலைவியைக் காண்கிறோம்.