உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


எதுவாயினும், கி.மு.504 கி.மு.306 இவ்விரு காலங்களில் ஒன்றாக இருக்கலாம். மிகக் குறைவாகக் கொள்ளினும், இதனைக் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சி எனலாம். இதுபற்றி வரும் செய்யுள் ஓரளவு மற்றப் பாக்களிலும் முற்பட்டதாதல் முறையே அன்றோ? இங்ஙனம் சில செய்யுட்கள் இக்கலித்தொகையில் கடைச் சங்கத்தனவாக இருக்கலாம் என்று கூறவும் இடந்தருகின்றன. சில, நடை வேறுபாட்டாலும் பிறவற்றாலும் பிற்காலத்தனவாகக் காண்கின்றன.

8. காலமுறைப்படி ஆராயினும், கலித்தொகை பாடியவராகக் கருதப்படும் புலவர் ஐவரும் (அவரே பாடியவர் எனக் கொள்ளினும்) வேறு வேறு காலத்தவர் ஆகின்றனர். எனவே, கலித்தொகைச் செய்யுட்கள் பத்துப்பாட்டைப் போலச் சில நூற்றாண்டுகளிற் செய்யப்பட்டவையாதல் வேண்டும்.

9. கலித்தொகை முழுவதிலும் எந்த அரசன் பெயரும் சுட்டப்படவில்லை. மூவேந்தருள் பாண்டியனே சுட்டப்படுகிறான்; வையை, கூடல் இவையே சுட்டப்படுகின்றன. ஏனைய தொகை நூல்களிற் கூறப்படும் வள்ளல்களோ, புலவரோ சுட்டப்படவில்லை. மேற்கோள் காட்டத்தகும் இடங்களில் 'வாரணவாசிப் பதம்' போன்ற வடநாட்டுச் செய்திகளும், பிற்காலப் புராணக்கதைகளும், தெய்வங்களுமே குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனைய அகப்பாட்டுக்களில் பெரும்பாலான செய்யுட்களில் வந்துள்ள தமிழ்ப் புலவர் பெயர்கள், வள்ளல்களின் பெயர்கள், அரசர்கள் பெயர்கள், போர்கள் முதலியன போன்ற தமிழகச் செய்திகளுட் சிலவேனும் 149 செய்யுட்களைக் கொண்ட கலித்தொகையில் பயின்று வராமை நன்கு கவனித்தற்குரியது. இத்தக்க ஒரு காரணம் கொண்டே கலித்தொகைச் செய்யுட்களுட் பெரும்பாலன கடைச்சங்க காலத்திற்குப் பின்னரே செய்யப்பட்டவை என வற்புறுத்திக் கூறலாம்.

10. கி.பி.மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழகம் 'களப்பிரர்’ படையெடுப்புக்கு உட்பட்டது; சோழரும் பாண்டியரும் முடியிழந்து சிற்றூர்களிற் புகுந்தனர்; அமயம் வாய்த்தபோது தம் ஆட்சியை நிலைநிறுத்தப் போரிட்டனர். தமிழகம் இம்மாறுபட்ட



1.Vide My "தமிழ் யாப்பிலக்கண நூல்கள்" In Sentamil Selvi Vol 15.P.320 and M.S.Ramaswamy Iyengar's studies in S.I. Jaimism 'P.39
2.K.N.S.Pillai's "The Chronology of the Early Tamils" P.225
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/14&oldid=1680282" இலிருந்து மீள்விக்கப்பட்டது