உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் திணை

டலும் கடலைச் சேர்ந்த நிலமும் நெய்தல் நிலம் என அழைக்கப் பெறும். அந்நிலத்து மக்கள் பரதவர், கானவர், நுளையர் என்றும், மக்கள் தலைவன் சேர்ப்பன், துறைவன், கொண்கன் என்றும் அழைக்கப் பெறுவர், கடல்வாழ் மீனும், கழியில் விளையும் உப்பும், இவ்விரண்டையும் விற்றுப் பெறும் நெல்லும் உணவுப் பொருள்களாம். மீன் பிடித்தல், உப்புக் காய்ச்சல், வாணிகம் புரிதல் இவை தொழில்களாம். பொருள் தேடிப் போயிருக்கும் கணவனை நினைந்து வருந்தி வாய்விட்டுப் புலம்பியவாறே, அவன் ஊர்ந்து வரும் கலத்தை எதிர்நோக்கி, கடற்கரையில் ஞாயிறு மறையும் அந்திப் பொழுதில் மனைவி காத்துக் கிடப்பது நெய்தல் ஒழுக்கம் எனப்படும்.

பாடிய புலவர்
நல்லந்துவனார்

நெய்தற்கலியைப் பாடியவர் நல்லந்துவனாராவர். இவர் புலவராலும் போற்றத்தக்க புகழ் உடையவர். இவர் திருப்பரங் குன்றத்தைப் பாடிய சிறப்பை. ‘தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ என மதுரை மருதன் இளநாகனார் என்ற மருதக்கலியாசிரியர் இவரைப் பாராட்டியுள்ளார். கலித்தொகைக்கு உரை எழுதிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், “தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார்” எனக் கூறியிருப்பதும் காண்க. இவர், அந்துவன் என்றும், நல்லந்துவன் என்றும், ஆசிரியர் நல்லந்துவன் என்றும் அழைக்கப் பெறுவர். இவர் மதுரையைச் சேர்ந்தவர். நெய்தற்கலியைப் பாடியதோடு ஏனைய கலிப்பாக்களையும் வகைப்படுத்தித் தொகுத்து அளித்தவர் இவரே. தாம் பாடிய பரிபாடல் செய்யுள்களில், மதுரை, வைகை, பரங்குன்றம் என்ற இம்மூன்றையும் பாராட்டியுள்ளார். இவர் பாடிய பாக்கள் 40. நற்றிணையில் 1; பரிபாடலில் 4; கலித்தொகையில் 33; கலித்தொகைக் கடவுள் வாழ்த்து 1; அகநானூற்றில் 1.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/326&oldid=1824691" இலிருந்து மீள்விக்கப்பட்டது