உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


மலையும், மலையைச் சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்பெயர் பெறும். குறிஞ்சித் திணை பற்றிய பாக்கள் இருபத்தொன்பதும் குறிஞ்சி நிலத்து ஆண் மகன், ஒரு பெண்ணைக் காண்பதுமுதல், மணம் செய்து கொள்வதுவரை நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுகின்றன.

ஆற்றுப் பாய்ச்சலால் வளம் பெறும் வயலும் வயலைச் சார்ந்த நிலமும் மருதம் என அழைக்கப்பெறும். மருதத்திணை பற்றிய பாக்கள் முப்பத்தைந்தும், மணந்து மனையறம் மேற்கொண்ட ஆண்மகன், மனைவியை மறந்து, பரத்தை வீடு சென்று வாழ்வதும். அதனால் அவன் மனைவி வருந்துவதும், அவன் மீண்டு வந்தக்கால் அவனோடு அவள் ஊடி நிற்பதும் போன்ற நிகழ்ச்சிகள் பேசப்படுகின்றன.

காடும், காட்டைச் சேர்ந்த நிலமும் முல்லை நிலம் எனக்கூறப்பெறும். முல்லைத்திணை பற்றிய பாக்கள் பதினேழும், குலமுறைப்படிக் கொல்லேறு தழுவுதல் போன்ற ஆயர் வாழ்க்கையை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

கடலும் கடலைச் சார்ந்த நிலமும் நெய்தல் என அழைக்கப் பெறும். நெய்தல் திணை பற்றிய பாக்கள் முப்பத்து மூன்றும், பொருள் தேடிப் போயிருக்கும் கணவனை நினைந்து வருந்தி வாய்விட்டுப் புலம்பியவாறே, அவன் ஊர்ந்துவரும் கலத்தை எதிர்நோக்கி, கடற்கரையில் ஞாயிறு மறையும் அந்திப் பொழுதில் மனைவி காத்துக் கிடக்கும் ஒழுக்கத்தை விளம்புகின்றன.

இங்ஙனம் ஐந்து திணைகளையும் உள்ளடக்கி அமைந்த பாக்களைக் கொண்ட சிற்றிலக்கிய நூலான 'கலித்தொகையினை உரையுடன் பூம்புகார் பதிப்பகம் வெளியிடுகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் படித்து பயன் கொள்ளட்டும்.

- பூம்புகார் பதிப்பத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/5&oldid=1668167" இலிருந்து மீள்விக்கப்பட்டது