பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
25
 

அறிவு வேட்கைகளால் இந்த உலகம் புதுப்புது கண்டு பிடிப்புக்களை அனுபவித்துக் கொண்டே வந்தது எனலாம்.

அந்தந்த எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் வாதப்பிரதி வாதங்களையும் கூர்மையாகக் கவனித்து வரும் அறிவியல், விஞ்ஞானவியல், தர்கவியல், வரலாற்றியல் கலைஞர்களுக்குத்தான் அவற்றின் அருமையும், பெருமையும் புரியும் அதனால், அவர்கள் அவற்றை இவ்வளவு எளிதாக மறுத்துவிடமாட்டார்கள்.

7. அரிஸ்டாட்டில் தத்துவத்தை கலீலியோ வென்றார்,

எடுத்துக் காட்டுக்காக, அரிஸ்டாட்டில் தவறை எதிர்த்துக் கலீலியோ நிலை நாட்டிய விஞ்ஞான உண்மை என்ன என்பதற்கான ஒரு சம்பவத்தைப் பார்ப்போமா?

"ஓர் இடத்திலே இருந்து இரண்டு வெவ்வேறு கனப் பொருட்கள் ஒரே நேரத்தில் கீழே விழுந்தால், அல்லது விழச் செய்தால், அதிக கனமுள்ள பொருள் மற்ற இலேசான பொருளை விடச் சீக்கிரமே தரையில் விழும்." என்றும், "அவ்வாறு விழும் பொருளின் நேர வித்தியாசம், அந்தப்பொருள்களின் கனவேறுபாட்டைப் பொருத்தது" என்று, தலை சிறந்த தத்துவஞானியான அரிஸ்டாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆய்வு செய்து கூறி இருந்தார்.

அரிஸ்டாட்டிலின் இந்தக் கருத்தை எதிர்த்துக் கலீலியோ கணிதப் போர்க்களத்திலே எதிர்ப்புக் கொடி தூக்கிவிட்டார். இந்தக் கருத்தை ஏற்கமாட்டேன்; இது தவறான ஓர் ஆய்வு என்று பலமாகக் கண்டனம் செய்து அவர் பேசினார்; எழுதினார்!

கலீலியோ எழுப்பிய இந்தக் கண்டனக் குரல்களைக் கேட்ட கணித உலகம், சற்றுக்கண்களைத் திறந்து விழிப்புணர்வு பெற்றது! காரணம், கரடுமுரடானக் குரலாக இருந்தது கலீலியோவின் குரல்!