பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59

அது பயன்படாமல் வீண் உழைப்பும் துரோகமும் ஆகிவிட்டதே என்ற கவலை இன்னோர் புறம், இவ்வாறு மனவேதனைகளின் உளைச்சலால் கலீலியோ நாளுக்கு நாள் நலம் குன்றியும், நலிந்தும், மெலிந்தும் மனம் சிறுகச் சிறுக நைந்தும் தன்னையே தான் வருத்திக் கொண்டும் நடமாடினார்!

அதனால், அவர் பார்வை இழந்து குருடரானார்; செவிகளும் செவிடாகின. 'உடலும், உள்ளமும்-நரம்பும் தோலுமானது!

இந்தச் சோக நிலையிலும், துயர வாழ்விலும் வானியல் துறையின் தொடர்பு விடாது ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார் என்றால்; அவரது அறிவியல் உணர்வுகளை நாம் எவ்வாறு பாராட்டுவது என்றே புரியவில்லை!

கலீலியோ முதன் முதலில் மாதா கோவிலில் கண்டு பிடித்த, நேரத்தைக் கணக்கிடும் கருவியைப் பற்றி, கண் இழந்த பின்பும், வாழ்வு கருகிய பிறகும்கூட, அவர் மென்மேலும் ஆராய்ந்து கொண்டே இருந்தார்.

அவர் கண்டறிந்த உண்மைகளைக் கொண்டே, பிற்கால உலகம்; கடிகாரம் என்னும் காலம் காட்டும் கருவியை உருவாக்கிக் கொண்டது.

வானியல், அறிவியல், உலகுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் யோக்யருக்கு, உண்மையே உருவானவருக்கு, உலகுக்கு பல சாதனைகளைச் சாதித்துக் காட்டி வழங்கியவருக்கு உலகம் கொடுத்த அன்பளிப்பு என்ன தெரியுமா?

அவரது வாழ்க்கை என்ற வளமான வேரை அருகம் புல்லைப் பிடுங்கி எறிவது போல, கிறித்துவக் குருக்களும், போப் பாண்டவரின் தலையாட்டிப் பொம்மைகளும், ஆமாம் சாமிகளும் சேர்ந்து அவர் வாழ்வின் வளத்தையே பிடுங்கி எறிந்து விட்டார்கள்!