பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்வைதம்

77

அத்வைதம்

குருவின் சூத்திர பாஷியத்திற்கு ஒரு வியாக்கியானம் எழுதினார். அவர் எழுதியதில் முதல் ஐந்து பாதங்களுக்குள்ள வியாக்கியானமே அழியாமல் வந்திருக்கிறது. ஆகையால் அதற்குப் பஞ்சபாதிகை என்ற பெயர் ஏற்பட்டது. இதற்குப் பிரகாசாத்மன் என்பவர் பஞ்சபாதிகா விவரணம் என்ற ஒருரை வரைந்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு விவரணம் என்ற மரபு அத்வைதத்தில் தோன்றியது. விவரணக் கொள்கைகளைத் திரட்டி விவரணப் பிரமேய சங்கிரகம் என்ற நூலைப் பாரதீ தீர்த்த வித்யாரணியர் இயற்றினார். இவருடையதே பஞ்சதசீ என்னும் காவியமும். அத்வைதத்தில் சங்கரருக்குப்பின் வந்த மற்றொரு, மரபு பாமதி என்பது. இததற்கு மூல நூல் வாசஸ்பதி மிசிரர் சங்கரருடைய சூத்திர பாஷியத்திற்கு எழுதிய பாமதி என்னும் வியாக்கியானம். அமலானந்தர் எழுதிய கல்பதரு பாமதீயின் விளக்கம். இதற்கு உரை, அப்பைய தீட்சிதரின் கல்பதரு பரிமளம் என்பது. அத்வைத மதத்திலுள்ள பேதங்களை வகுத்துச் சித்தாந்தலேச சங்கிரகம் என்னும் நூலை அப்பையர் இயற்றினார். ஏனைய அத்வைத நூல்களின் முக்கியமான சில கிரந்தங்கள் : சர்வஞ்ஞாத்ம முனியின் சம்க்ஷேய சாரீரகம் : ஸ்ரீஹர்ஷரின் கன்டனகண்டகாத்யம் ; சித்சுகரின் தத்வப்பிரதீபிகை ; மதுசூதன சரஸ்வதியின் அத்வைதசித்தி ; தர்மராஜரின் வேதாந்த பரிபாஷை : சதானந்தரின் வேதாந்த சாரம். சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற மொழிகளிலும் வேதாந்த நூல்கள் உண்டு. இந்தியில் நிச்சலதாசர் எழுதிய விசார சாகரம், விருத்திப் பிரபாகரம் என்னும் நூல்களும், தமிழில் தாண்டவராய சுவாமிகள் எழுதிய கைவல்லிய நவநீதம் என்னும் நூலும் மக்களுக்கு மிகவும் உபயோகமுள்ளவை.

அத்வைத மதத்தில் ஆறு அளவைகள் அல்லது பிரமாணங்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. அவையாவன: பிரத்தியட்சம், அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி, சப்தம். (1) பிரத்தியட்சப் பிரமாணம் என்பது சாதாரணமாக இந்திரியங்களுக்கும் விஷயங்களுக்கும் உள்ள சேர்க்கை. இதனால் ஏற்படும் ஞானம் பிரத்தியட்ச ஞானம். உதாரணமாகக் கண்களுக்கும் ஒரு விஷயத்தின் உருவத்திற்கும் சம்பந்தம் உண்டாகும்போது காட்சி யேற்படுகின்றது. வெளியேயுள்ள பொருள்களை யறிவதற்குத்தான் இந்திரியங்களின் உதவி வேண்டும். நம் மனத்திலுள்ளவற்றை யுணர்வதற்கு மனமேதான் காரணம். இதற்கு மானதப் பிரத்தியட்சம் என்று பெயர். (2) அனுமானம் என்பது ஒரு குறியின் ஞானத்தின் வாயிலாக, அது எதைக் குறிக்கின்றதோ அதையறிவது. புகையைக் கண்டு, நெருப்பை அனுமானிக்கிறோம். குறிக்கு ஏது வென்றும், குறிக்கப்படும் பொருளுக்குச் சாத்தியம் என்றும் பெயர். இவ்விரண்டுக்கும் உள்ள சம்பந்தம் வியாப்தி, விரிவாகவுரைக்கப்படும் அனுமானத்திற்கு ஐந்து அவயவங்கள் உள்ளன. உதாரணமாக: குன்றில் நெருப்பு உள்ளது (பிரதிஞ்ஞை); அங்கே புகையிருப்பதால் (ஏது); எங்கெங்குப் புகையுளதோ அங்கங்கு நெருப்புளது, அடுக்களையிலுள்ளதுபோல (உதாரணம்); நெருப்பால் வியாபிக்கப்பட்ட புகை குன்றில் உளது (உபாயம்); ஆகையால் குன்றில் நெருப்புளது (நிகமனம்). (3) உபமானம் என்பது இரண்டு பொருள்களை ஒப்பிட்டுப் பார்ப்பது. இதனால் ஏற்படும் ஞானம் உபமிதி. கவயம் என்ற விலங்கு பசுவைப் போன்றது என்று ஒருவன் கேள்வியினால் தெரிந்துகொள்கிறான். பின்னர் வனத்திற்குச் சென்று கவயத்தைப் பார்க்கிறான். அப்பொழுது தான் காணும் விலங்கைப் போலுள்ளது பசு என்று உணர்கிறான். இது உபமிதி ஞானம். (4) அர்த்தா பத்தி என்பது, ஒரு விஷயம் நேரிடையாக விளங்கவில்லையானால், அதை விளக்கக் கூடிய ஒன்றைக் கற்பிப்பது. ஒருவன் பகற்பொழுதிலே சாப்பிடுவதில்லை; ஆனால் இளைக்காமல் இருக்கிறான். இவ்விரண்டையும் பொருத்துவதற்காக "அவன் இரவில் உண்கின்றான்" என்று ஊகிக்கின்றோம். (5) அனுபலப்தி என்பது ஒரு பொருளின் இன்மையை உணர்வது. "தரைமீது குடம் இல்லை" என்று குடத்தின் இன்மையை அனுபலப்தி மூலம் அறிகின்றோம். (6) சப்தம் என்பது கேள்விஞானம். பதங்களின் சேர்க்கைகளாகிய வாக்கியங்களினின்று அறிவு ஏற்படுகின்றது. சப்தப் பிரமாணம் மற்றப் பிரமாணங்களைவிட முக்கியமானது ; ஏனெனில், ஆத்ம ஞானம் உபநிஷத வாக்கியங்களிலிருந்துதான் ஏற்படவேண்டும். மீமாம்சகர்கள் வேதங்களின் தாற்பரியம் கர்மம் என்று வாதிக்கின்றார்கள். ஏனென்றால், அவர்களுடைய கொள்கைப்படி, செயலை யொட்டியே ஒரு வாக்கியத்திலுள்ள பதங்கள் பொருளைத் தெளிவுறுத்துகின்றன. வேதாந்திகளோ என்றால், செயலோடு சம்பந்தப்படாத ஒரு பொருளையும் வாக்கியத்தினின்று அறியலாம் என்கிறார்கள், மிகவும் ஒளி பெற்றவன் சந்திரன் என்றபோது சந்திரனின் சொரூபத்தையுணர்கிறோம் ; இங்குச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை. உபநிஷதங்கள் ஆத்ம-பிரம்ம வஸ்துவை இவ்வாறே உணர்த்துகின்றன.

அறிவது என்ற வியவகாரத்தில் நான்கு அமிசங்கள் உள்ளன. (1) அறிபவன் (2) அறியப்படும் பொருள் (3) அறியும் வழி (4) அறிவு. இந்நான்கும் ஒரே ஆத்ம வஸ்துவின் பேதங்கள் என்பது அத்வைதத்தின் கொள்கை. ஆத்ம சைதன்னியம் அந்தக்கரணத்தில் பிரதிபலித்து, அறிபவன் (பிரமாதா) என்ற பெயரையடைகின்றது. அறியப்படும் பொருளிலும் அதே சைதன்னியம் உள்ளது (விஷயம்). அஞ்ஞானத்தால் இவ்விரண்டும் வேறாகக் காணப்படுகின்றன. பிரமாணவியவகாரத்தால் இவ்விரண்டிற்கும் சம்பந்தம் ஏற்படுகின்றது. இதை ஏற்படுத்தும் கருவி விருத்தி யென்னும் மனத்தின் பரிணாமம். விருத்தியிலும் (பிரமாணம்) சைதன்னியம் விளங்குகின்றது. விருத்தியின் வியாபாரத்தினால் ஞானம் (பிரமிதி) உதிக்கின்றது. இதுவும் ஆத்ம சைதன்னியமே. இவ்வாறு பிரமாண வியவகாரத்தை ஆராய்ந்தாலும்கூட "ஆத்மா வொன்றே உளது ; அதன் சொரூபம் ஞானம்" என்பது விளங்கும்.

இனி, உண்மை எது, பொய் எது என்று விசாரிப்போம். உண்மை யென்பது ஞானத்தின் தன்மை ; ஒரு ஞானம் பொய்யாவது ஞானத்தின் வெளியேயுள்ள சில சந்தர்ப்பங்களினால் ஆகும். இதை சமஸ்கிருதத்தில் "ப்ராமாண்யம் ஸ்வத: அப்ராமாண்யம் பரத" என்பார்கள். பொய்ஞ்ஞானம் என்பதே அஞ்ஞானம். முத்துச்சிப்பியை வெள்ளியென்று மதிப்பது அஞ்ஞானத்தால். அஞ்ஞானத்தின் விஷயத்தில் சொரூபத்தைப் பற்றிய விவாதம் இந்திய தரிசனங்களிடையேயுண்டு. (1) பௌத்த மதத்தின் ஒரு சாராரான சூனியவாதிகள், இல்லாதது தோன்றுகின்றது என்று கூறுகிறார்கள் (அஸத்க்யாதி), (2) பௌத்த மதத்தின் மற்றொரு சாராரான விஞ்ஞான வாதிகள் உள்ளே விஞ்ஞான ரூபமாயுள்ள பொருள் தவறாக வெளியே தோன்றுகின்றது என்கிறார்கள் (ஆத்மக்யாதி). (3) மீமாம்சை மதத்தின் ஒரு சாராரான பிராபாகரர்களும் சாங்கியர்களும் இவ்வாறு உரைக்கின்றனர். "இது வெள்ளி" என்று சொல்லும்போது, இது என்ற ஞானமும், வெள்ளியென்ற ஞானமும் தனித்தனியே உண்மைதான். இது