பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்வைதம்

78

அத்வைதம்

என்பதை நேரிடையே பார்க்கிறோம். முன் பார்த்த வெள்ளியை நினைவு கூர்கின்றோம் (ஸ்மரிக்கிறோம்). தவறாக இவ்விரண்டையும் சேர்த்து, “இது வெள்ளி” யென்று நினைக்கிறோம். இதுவே அஞ்ஞானம் (அக்யாதி). (4) மீமாம்சை மதத்தின் மற்றொரு சாராரான பாட்டர்களும், நையாயிகர்களும் பொய்யென்பது ஒன்றை மற்றொன்றாக மதிப்பது என்று கருதுகிறார்கள். கடையிலுள்ள வெள்ளியை இங்கே காண்கிறோம். இதற்குக் காரணம் முத்துச் சிப்பிக்கும் வெள்ளிக்கும் உள்ள ஒப்பு, சாதிருசியம் (அன்யதாக்யாதி). (5) அத்வைதிகள் இவ்வாறு பகர்கின்றனர் :- பொய்யாகத் தோன்றும் வெள்ளி உள்ளதும் அன்று, இல்லாததும் அன்று. அது தோன்றுவதால் “அது இல்லை' என்று சொல்லிவிடலாகாது. முத்துச் சிப்பியின் உண்மை ஞானம் உதயமாகும்போது வெள்ளி மறைந்துவிடுவதால் அதை உள்ளது என்றும் கூற முடியாது. ஆகையால் அது அநிர்வசனீயம் (விவரிக்க முடியாதது) ; அவித்தையினால் உற்பத்தி செய்யப்பட்டது ; ஞானத்தினால் அழிவையடைவது (அநிர்வசனீயக்யாதி). க்யாதி என்பது பொய்யைப் பற்றிய வாதம்.

உண்மையின் இலக்கணம் 'என்றும் உள்ளது ; காலம் முதலிய அளவிற்கு உட்படாதது' என்பதாம். இவ் விலக்கணத்தின்படி பார்த்தால், பிரமம் அல்லது ஆத்மா வொன்றே உண்மை. இதற்குக் குணங்கள் இல்லை ; குறிகள் இல்லை. இது சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாதது. ஆகையால்தான் உபநிஷதங்கள் இது அன்று, இது அன்று (நேதி நேதி) என்று விலக்கல் வாயிலாகப் பிரமத்தின் சொரூபத்தைப் போதிக்கின்றன. இதுவே நிர்க்குணப் பிரமம். நம்முடைய புத்திக்குச் சகுணமாக (குணங்களோடு கூடியதாக)த் தோன்றுகிறது. இந்த நிலையில் பிரமம் உலகத்திற்குக் காரணம். சகுணப் பிரமம் அல்லது ஈசுவரன் உலகிற்கு நிலத்த காரணம் மாத்திரம் அல்ல ; உபதான காரணமும் அப்பொருளே. பிரமத்தினிடமிருந்து உலகம் பிறக்கின்றது ; பிறந்தபின் அதனிடத்தே கலக்கின்றது; இறுதியில் அதனுள்ளே அடங்குகின்றது. ஆனால் உலகம் பிறப்பதும், நிலைப்பதும், அடக்குவதும் வாஸ்தவம் அல்ல. பால் தயிராக எவ்வாறு மாறுகிறதோ, அவ்வாறு பிரமம் உலகாகப் பரிணமிப்பது கிடையாது. கயிற்றினிடத்தே பாம்பு தோன்றுவது போல, பிரமத்தை ஆதாரமாகக் கொண்டு உலகம் தோன்றுகிறது. இந்தக் கொள்கைக்கு விவர்த்த வாதம் என்று பெயர். அதாவது பிரபஞ்சம் மாயை அல்லது மித்யை (பொய்த் தோற்றம்) என்பதாம்.

உலகம் மாயை யென்று சொல்வதால் அத்வைதத்திற்கும் சூனியவாதத்திற்கும் வேறுபாடில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது தவறு. சூனிய வாதம் “உண்மை என்பது ஒன்றுமில்லை” என்று கூறுகின்றது. அத்வைதம் ”பிரமம் ஒன்றே உண்மை” என்று போதிக்கின்றது. ”பாம்பும் உண்மையன்று, கயிறும் உண்மையன்று. இல்லாதது வியவகாரத்தில் கயிறாகவும் பிரமத்தில் பாம்பாகவும் தோன்றுகிறது” —இது சூனியவாதம். "உண்மை பிரமம் ஒன்றே. இது வியவகாரத்தில் கயிறு முதலியனவாகவும் பிரமத்தில் பாம்பு முதலியனவாகவும் தோன்றுகிறது” -இது அத்வைதம். இத் தோற்றத்திற்குக் காரணம் மாயை. மாயை ஒரு பாவ பதார்த்தம், அதாவது அது ஞானத்தின் அபாவம் அன்று ; அது மித்யா ஞானம். மேலும், அது அனாதி, அதாவது ஆதியற்றது. காலம் மாலையின் காரியமானபடியால், மாயை எப்பொழுது தோன்றிற்று என்னும் கேள்விக்கு அர்த்தமில்லை. ஆகையால் மாயை அனாதி. ஆனால், அது நித்தியமன்று. நித்தியமான வஸ்து பிரமம் ஒன்றே, மாயை எவ்வியல்புடையது என்று வினவுங்கால் நாம் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. அது சத்தும் அன்று ; அசத்தும் அன்று. ஆகையால், அது அநிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. அது எத்தகையது என்று சொல்ல இயலாது. ஆனால், ஞானம் உதயமாகும்போது, எவ்வாறு சூரியன் முன் இருள் நிலைக்காதோ, அவ்வாறு மாயை நில்லாது மறைந்துவிடுகிறது.

அவித்யை அல்லது அஞ்ஞானத்தினால், ஜீவன் தான் வேறு, பிரமம் வேறு, என்று கருதுகிறான் ; தானல்லாதவற்றைத் தானாகப் பாவிக்கிறான். இதற்கு அத்தியாசம் என்று பெயர். ஆத்ம தருமங்களை அனாத்மாவிலும், அனாத்ம தருமங்களை ஆத்மாவிலும் ஏற்றி, ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது அத்தியாசம். இதனால்தான் ”நான் இது”, ”என்னுடையது இது” என்ற வியவகாரம் ஏற்படுகிறது. மகன், மனைவி முதலியவர்கள் இன்புற்றோ துன்புற்றோ இருந்தால், ஒருவன் ”நான் இன்புற்றுள்ளேன், நான் துன்புற்றுள்ளேன்” என்று கருதுகிறான். அதுபோலவே, தேகம், இந்திரியங்கள், மனம் முதலியவற்றின் தருமங்களை ஆத்மாவின்மீது ஆரோபிக்கிறோம். “நான் பருத்திருக்கிறேன், இளைத்திருக்கிறேன். நான் குருடு, செவிடு; நான் எண்ணுகிறேன், விரும்புகிறேன்” என்று தவறாக நாம் மதிக்கிறோம். உண்மை இதுவன்று. ஜீவாத்மாவின் வாஸ்தவ சொரூபம் பிரமம். இந்த உண்மையை தத் த்வம் அசி முதலிய மகாவாக்கியங்கள் போதிக்கின்றன.

இம் மகாவாக்கியங்கள் ஜீவனுக்கும் பிரமத்துக்கும் உள்ள அபேதத்தைப் போதிக்கின்றன. தத் த்வம் அசி என்ற வாக்கியத்திற்கு ”அது நீ, நீ அதுவாய் இருக்கின்றாய்” என்பது பொருள். இது வாச்சியப் பொருள் அன்று, லட்சியப் பொருள். வாச்சியம் என்பது ஒரு சொல்லுக்குள்ள நேரான பொருள். வாட்சியம் என்பது குறிப்புப் பொருள். சிங்கம் என்னும் சொல்லின் வாச்சியம் வனத்திலுள்ள ஒரு விலங்கு ; ஒரு மனிதனைக் குறிப்பிட்டு ”அவன் சிங்கம்” என்று சொன்னால், இங்கே சிங்கத்தின் சில குணங்களைப் பொருளாகக் கொள்ளவேண்டும். இலட்சியப் பொருள். தத் த்வம் என்ற பதங்களுக்கும் இலக்கணையால் பொருள் கொள்ள வேண்டும். தத் என்ற சொல்லுக்கு வாச்சியம், சர்வ சக்தி முதலிய குணங்கள் வாய்ந்த ஈசுவரன் ; த்வம் என்ற சொல்லுக்கு அற்ப சக்தி முதலிய குணங்கள் படைத்த ஜீவன். இவ்விரண்டிற்கும் அபேதம் இருக்க முடியாது. ஆகையால் தத் த்வம் என்ற இரண்டு பதங்களுக்கு லட்சியமான பிரமத்தைப் பொருளாகக் கொள்ளவேண்டும். இது மகா வாக்கியத்தின் அகண்டார்த்தம் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையைச் சாட்சாத்கரிப்பது மோட்சம்.

மோட்சத்தைப் பெறுவதற்கு வழி ஞானம். கருமம் சாதனமாகாது. கருமத்தினால் இல்லாத ஒரு பொருளை உற்பத்தி செய்யலாம் (உற்பத்தி); ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை யடையலாம் (பிராப்தி); ஒன்றை மற்றொன்றாக மாற்றலாம் (விகாரம்); மலினமாயுள்ள வொன்றைத் துடைத்துச் , சுத்தமாக்கலாம் (சம்ஸ்காரம்); ஆத்மா எப்பொழுதும் உள்ளது, எங்கும் உள்ளது; நிர்விகாரமாய், நித்திய சுத்தமாய் விளங்குவது. ஆகையால் அது கருமத்திற்கு விஷயமாகாது. அதையடைவது என்று சொல்வதுகூட ஔபசாரிகம். எவ்வாறு ஒருவன் தான் அணிந்த மாலை தன் கழுத்திலிருக்க,