பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்வைதம்

79

அத்வைதம்

அதை மறந்து, அங்குமிங்கும் தேடி அலைவானோ, அது போல நாம் ஆத்மாவைத் தேடுகிறோம். எவ்வாறு கழுத்திலுள்ள மாலையை யடைய வழி, அதைத் தெரிந்து கொள்வதோ, அவ்வாறே ஆத்மாவையடைய மார்க்கம் ஞானம். நிஷ்காமகருமத்தினால் மனம் சுத்தமடைகிறது; உபாசனையால் ஒருமுகப்படுகிறது. அப்பொழுது ஒருவன் ஞானமார்க்கத்திற்கு அதிகாரியாகிறான் ; வேதாந்த விசாரத்தில் ஈடுபடுகிறான்.

வேதாந்த விசாரத்தை யாரம்பிப்பதற்குமுன் நான்கு சாதனங்களை ஒருவர் பெறவேண்டும் என்று சங்கரர் கூறுகின்றார். (1) நித்தியானித்திய வஸ்து விவேகம் : அழியாதது ஆத்மா, அழியக்கூடியவை மற்றப்பொருள்கள் என்ற பகுத்தறிவு. (2) இஹாமுத்ரார்த்தபலபோக விராகம் : இந்த லோகத்திலும் பரலோகத்திலும் நாம் அடையக்கூடிய சுகத்தை நாடாதிருத்தல். (3) சமாதி சட்க சம்பத்து : சமம் முதலிய ஆறு குணங்கள், சமம் மனத்தை அடக்குதல் ; தமம் இந்திரியங்களைத் தத்தம் விஷயங்களிலிருந்து திருப்புவது ; உபரதி - திருப்பிய இந்திரியங்களை மறுபடியும் வெளிப்போகாது காத்தல் ; திதிட்சை-வெப்பம், குளிர் முதலிய இரட்டை யனுபவங்களைப் பொறுத்தல்; சமாதானம்- மனத்தை ஒரு நிலையில் வைப்பது; சிரத்தை - வேதாந்த போதனையில் ஆர்வம் கொள்ளுவது. (4) முமுட்சுத்துவம் : மோட்சத்தைப் பெறவேண்டும் என்ற இச்சை. இந்த நான்கு சாதனங்களையும் பெற்ற ஒருவன் வேதாந்த விசாரம் செய்ய வேண்டும். சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பவை ஞானமார்க்கத்தின் பகுதிகள். சிரவணம் என்பது வேதாந்த வாக்கியங்களின் அர்த்தத்தைக் குருவினிடமிருந்து கேட்பது. மனனம் என்பது கேட்ட பொருளைச் சிந்திப்பது. நிதித்தியாசனம் என்பது சிந்தித்துத் தெளிந்ததை இடைவிடாது தியானிப்பது. ஆத்ம சாட்சாத்காரம் பெற நேரிடையான சாதனம் சிரவணமா? தியானமா? என்ற விவாதமொன்று அத்வைதிகளிடையே உளது. விவரணப் பிரஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் சிரவணம் என்றும், பாமதீப் பிரஸ்தானத்தைப் பின்பற்றுபவர்கள் தியானம் அல்லது பிரசங்கியானம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இவ்விரு வகுப்பினரும், “சிரவணத்தினாலோ அல்லது பிரசங்கியானத்தினாலோ ஞானம் உதயமாகின்றது. இதுவே மோட்சத்திற்குச் சாதனம்” என்று ஒப்புக் கொள் கின்றனர்.

இந்தப் பிறப்பிலேயே நாம் மோட்சத்தைப் பெறலாம். அவ்வாறு மோட்ச மடைந்தவர்கள் ஜீவன் முக்தர்கள். மோட்சம் என்பது நம்முடைய சொரூபமானபடியால், அதை வேறு தேசத்திலோ வேறு காலத்திலோ அடைய வேண்டும் என்பதில்லை. மோட்சத்தை மறைத்து நிற்பது அஞ்ஞானமானபடியால், அஞ்ஞானத்தின் அழிவே மோட்சம். ஜீவன் முக்தர்கள் தேகம் தாங்கி ஜீவிப்பவர்கள் போல நம்முடைய அனுபவத்திற்குக் காணப்படுகிறார்கள். உண்மையில் அவர்களுக்குத் தேகமேயில்லை. அவர்கள் அவ்வாறு காணப்படுவது நம்மையும் முக்தர்களாக ஆக்குவதற்காக. அத்வைத அனுபவத்தைச் சங்கரர் உபதேச ஸாஹஸ்ரீயில் இவ்வாறு விளக்குகிறார் : ”ஞானமே உருவாயும், ஆகாயத்தைப் போல மேலான தாயும், எப்பொழுதும் ஒரே பிரகாசமாயும், பிறப்பற்றும், ஒன்றாகவும், அழிவற்றும், மலமற்றும், எங்கும் வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நான்— எப்பொழுதும் முக்தன் நான்”. டி. எம். பி. ம.

தமிழ் நூல்களில் அத்வைதம் : தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுந்தது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இங்கு அத்வைதக் கொள்கையைக் காண்கிறார்; காஞ்சித்திணைச் சூத்திரத்தில் 'வரும் பாங்கரும் சிறப்பின்' என்ற சொற்றொடர் துவைதமற்ற கைவல்ய மோட்ச நிலையையும் பாடாண் திணையில் வரும் கந்தழி என்பது மற்றொரு பற்றுக்கோடு வேண்டாது தன்னிற்றானே ஒளிரும் பிரமத்தையும் குறிப்பதாகக் கருதுகின்றார். 'மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்' என்று எழுத்ததிகாரம் கூறுவது, ”எழுத்துக்களில் அகரமாகின்றேன்” என்று கீதை கூறும் கருத்தே ஆம்.

கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தினைச் சுற்றிப் பிறந்த சங்க நூல்களிலும் அத்வைதக் கொள்கையை இந்த உரையாசிரியர் காண்கிறார். திருமுருகாற்றுப்படை பிரமோபதேசமாம், ”புலம் பிரிந்து உறையும் செலவு,” ”உலகத்து ஒருநீயாகத் தோன்ற” என்ற தொடர்களை அவர் வற்புறுத்துகின்றார். மதுரைக்காஞ்சியில் ‘நின்னொடு முன்நிலை எவனோ?' (ஆன்மாவாகிய நினக்கு உன்முன் நிற்கும் உலகப் பொருள்களோடு என்ன உறவு?), 'கெடுக நின் அவலம்' (நின் மாயை கெடுவதாக), 'கொன் ஒன்று' (பெரிதான அத்வைதம் பிரமம்), 'தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட' (பிரம வித்துக்கள் பிரமானுபவக் கொள்ளையை அனுபவித்த) என்று வருவன எல்லாம் வேதாந்தமே பேசுவனவாக உரை கூறுகிறார். பரிபாடலில் வரும் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் அத்வைத அனுபவத்தின் எதிரொலிகள் பல கொண்டு விளங்குகின்றன. ஆனால் அனைவரும் இந்த உரைகளை ஒப்புவதில்லை.

திருக்குறளின் முதற் குறள் அத்வைதமே பேசுகின்றது என்பது பற்றிய போராட்டம் சென்ற நூற்றாண்டில் எழுந்தது. துறவியலின் ஞானப் பகுதியில் அத்வைதிகள் தங்கள் கருத்தினைக் காண்பது அருமையன்று. சார்பு கெட ஒழுகுதல், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்டல், வாய்மை வேண்டல் (சோகம் பாவனை), இருள் (அவிச்சை) முதலிய குறிப்புக்கள் அதற்கு வாய்ப்பானவை. பொது நூலாகச் சிறந்தது எவருக்கும் இடங் கொடுப்பதில் வியப்பில்லை.

அனுபூதிமான்களின் காட்சி அத்வைதக் காட்சியே. அவர்கள் பாடலுக்குப் பொருள் கொள்வோரும் அத்வைதம் என்ற சொல்லுக்குப் பல்பொருள் கொள்வது போலப் பலவகையாகப் பொருள் கொள்வதும் இயல்பே. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச் செய்த நாலாயிரமும் பன்னிரு திருமுறைகளும் அனுபூதிப் பாடல்களாகும். உபநிடதம்போல, இவை தென்னாட்டின் திருமறைகள். சைவர்களும் வைணவர்களும் இவற்றைத் தங் கொள்கையின் ஆணிவேராகக் கொள்வதுபோல அத்வைதிகளும் கொள்கின்றனர். தத்துவ ராயர் தம்முடைய பரணிகளில் இவற்றைப் பொன்னே போல் போற்றிக் கையாள்வதனைக் காணலாம்; அவர் திரட்டிய பெருந்திரட்டில் அனுபூதிப்பணையில் இந்த அனுபூதிப் பாடல்களே நிறைந்திருக்கக் காணலாம்.

நச்சினார்க்கினியரும் திருவாசகப் பாடல்களை அத்வைதப் பாடல்கள் என எடுத்துக் காட்டுவார். ”எல்லாம் பிரமம்; எல்லாம் நான் ; எல்லாம் மித்தை” என்பவற்றில் எல்லாம் பிரமம் என்பது எங்கும் பேசப்படக் காணலாம். ”பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதை குண மாகாமே” என்பது எல்லாம் மித்தை என்பதனை வற்புறுத்துகின்றது என்பர் அத்வைதிகள். சிவமாக்கி எனையாண்ட, நீயலால் பிறிதுமற்றின்மை, ஒன்று நீ அல்லை அன்றி ஒன்றில்லை என்ற பகுதிகளையும் எடுத்-