பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிர்ச்சி

85

அதிர்ச்சிதாங்கி

பெறுவர். அதிகமானுக்கு உறவினர்போலும் (அகம். 301).

அதிர்ச்சி (Shock) என்பது உடலின் இயக்கத்தில் திடீரென்று உண்டாகும் தளர்ச்சியாகும். காயம், தீப்புண், இரைப்பையில் புண்ணுண்டாகித் தொளை ஏற்படுதல், குடல் முறுக்கிக்கொள்ளுதல் முதலியவற்றால் தோன்றலாம். சிறு குடலில் தடை ஏற்பட்டுக் கிருமிகளால் உண்டாகும் நச்சுப் பொருள்களோ அல்லது காயம்பட்ட இடத்தில் தசை அழுகி உண்டாகும் நச்சுப் பொருள்களோ அல்லது வபை அழற்சியால் ஏற்படும் பாக்டீரியாவின் நச்சுப்பொருள்களோ இரத்தத்தில் சேருவதால் இரத்தம் அளவு கடந்து குழாய்களினின்றும் வெளியேறிவிடுதல், மிகைப்பட்ட உள்ளக் கிளர்ச்சி, கடுமையானரண சிகிச்சை,பொறுக்கமுடியாத பிரசவ வேதனை, வெளிவராமல் கருப்பையில் தங்கிப் போன நஞ்சு, கருப்பையில் கருத்தரியாமல் சினைக் குழாயில் கருத்தரித்துக் குழாய் பிளந்துபோதல், உரத்த வெடிச்சத்தம் இவை போன்ற காரணங்களால் அதிர்ச்சி ஏற்படும். சில வேளைகளில் அதிர்ச்சி மிகுதியால் நோயாளி எதுவும் செய்ய முடியாதவராக உணர்ச் முழுவதையும் இழந்துவிடலாம் அந்த நிலைமையைச் செயலொடுக்கம் (Collapse) என்று கூறுவர்.

குறிகள் : மேற்கண்ட விளைவுகள் தோன்றும்போது முகுளமானது (Medulla oblongata) அளவு கடந்து தூண்டப்படுகிறது. நரம்புக் கேந்திரங்கள் தளர்கின்றன. தசைகள் வேலைசெய்ய முடியாமல் ஆய்விடுகின்றன. அதனால் மூச்சுத் தடுமாறுகிறது. இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் இரத்தம் வயிற்றிலுள்ள தமனிகளில் நிறைந்துவிடுகிறது. மூளைக்கு வேண்டிய இரத்தம் போய்ச் சேருவதில்லை. முகம் வெளுத்துவிடுகிறது. நாடி மெதுவாக ஓடுகிறது. கால் கைகள் குளிர்ந்து போகின்றன. தோலின் அருகிலுள்ள இரத்தக் குழாய்கள் விரிகின்றன. உடம்பு சூடாயிருக்கும். வேர்வை மிகுதியாகச் சுரக்கும். மற்றச் சுரப்புக்கள் குறையும். நோயாளி சோர்வு அடைவார். இரத்த அழுத்தம் குறைந்துகொண்டே போகும். வெப்பநிலை 95° பா. அல்லது 96° பா. ஆக இருக்கும். இரத்த அழுத்தத்தின் அளவைக்கொண்டு அதிர்ச்சியின் கடுமையை அறியலாம். இதயச் சுருங்கல் அழுத்தம் (Systolic Pressure) 50 மி.மீ. ஆக இருந்தால் நோயாளி பிழைப்பது அரிது.

மேற்கூறிய காரணங்களால் ஏற்படும் அதிர்ச்சியைப் பிரதம அதிர்ச்சி (Primary S.) என்றும், இருபத்து நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் உண்டாகும் அதிர்சியைத் துணை அதிர்ச்சி (Secondary S.) என்றும் கூறுவர். பிரதம அதிர்ச்சி, நரம்பு மண்டல வேறுபாட்டாலும், துணை அதிர்ச்சி, நச்சுப்பொருள்கள் இரத்தத்தில் சேர்வதாலும் உண்டாகின்றன. துணை அதிர்ச்சி உண்டாகும்போது இரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் மிகவும் குறைந்துபோகும் ; மூச்சுத் திணறும்; வேர்வை குளிர்ந்திருக்கும்; தோலின் அருகிலுள்ள இரத்தக் குழாய்கள் ஒடுங்கிவிடும் ; நோயாளி நினைவற்றுவிடுவார் ; உடனே சிகிச்சை செய்யாவிட்டால் இறந்துபோவார். துணை அதிர்ச்சி பெரும்பாலும் பெருங் காயங்களாலும் கடுமையான இரண சிகிச்சையாலும் ஏற்படும்.

சிகிச்சை : தலை தாழ்ந்த நிலையில் இருக்குமாறு நோயாளியைப் படுக்கவைக்க வேண்டும்; கால் கைகளுக்குச் சூடு வட்டவேண்டும் ; கம்பளி கொண்டு போர்த்திப் பாதங்கள் மீது சூடான நீர்கொண்ட புட்டிகளை வைக்கலாம். ஊக்கி மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அவற்றை உண்ணக்கூடிய நிலைமையில் இல்லாவிட்டால், ஈதரையோ (Ether), பிராந்தியையோ தோலுக்கடியில் ஊசி குத்திச் செலுத்த வேண்டும். வேர்வை கொட்டி, உடலிலுள்ள நீர் மிகுந்த அளவில் வெளியேறிவிட்டிருந்தால், உப்பு நீரை (Saline) ஊசிகுத்தி இரத்தக் குழாயுள் செலுத்த வேண்டும். வேலம்பிசின் (Gum acacia) 6% கரைசலை உப்பு நீரில் கலந்து ஊசிகுத்துவதால் நீர் வெளியேறுவது குறையும் என்று பேலிஸ் (Bayliss) கூறுகிறார். இரத்தம் வெளியேறியிருந்தால் புது இரத்தம் ஊட்டுவது தற்கால சிகிச்சை முறை ஆகும். பாக்டீரியா நஞ்சால் அதிர்ச்சி ஏற்பட்டிருந்தால், அதை நீக்கவேண்டும். உடம்பு முன் போல் வேலை செய்யத் தூண்டுவது அண்மையில் கையாளப்பெறும் முறைகளுள் ஒன்றாகும். அதற்காகக் குளுக்கோசைத் (Glucose) தக்க அளவு இன்சுலினுடன் உப்புநீரில் கலந்து, ஊசிகுத்தி, இரத்தக்குழாய் மூலம் உள்ளே செலுத்த வேண்டும். என். சே.

அதிர்ச்சிச் சிகிச்சை (Shock Treatment) அதிர்ச்சியை உண்டாக்கிச் சில பைத்தியக் கோளாறுகளைக் குணப்படுத்தலாம் என்று அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிர்ச்சியை உண்டாக்க மருந்துகளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் மின்சாரத்தினால் விளைவிக்கும் அதிர்ச்சியே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அதிர்ச்சிச் சிகிச்சை முறையை முதன் முதலில் தொடங்கியபொழுது இன்சுலினைப் பயன்படுத்தினர். ஆனால் அதிர்ச்சி உண்டாக்குவதற்கு வேண்டிய அளவு இன்சுலினைப் பயன்படுத்தியபோது சில நோயாளிகள் இறந்துவிட்டனர். மெட்ரசால் (Metrazol )என்னும் மருந்தைக் கொடுப்பதால் மரணம் ஏற்படுவது குறைந்தாலும், கடுமையான இழுப்பு (Fits) உண்டாகிறது. இக்காரணங்களால் இப்போது மின்சாரத்தையே அதிர்ச்சிச் சிகிச்சைக்குப் பயன் படுத்துகிறார்கள்.இதனால் எவ்வித ஆபத்தும் உண்டாவதில்லை. மின்சார அதிர்ச்சி உண்டாகும்போது நோயாளி உடனே நினைவிழந்துவிடுவார். சிறிது நேரம் இழுப்புக் காணும். அதன்பின் விழிக்கும்போது சிகிச்சை செய்த விஷயம் நினைவுக்குவராது. அப்போது உளநோய் மருத்துவர் அவருடன் பேசி அவருடைய மனக்கோளாற்றை நீக்கிவிடுவார்.மின்சார அதிர்ச்சிக்குப் பிறகு செய்யும் உளச் சிகிச்சையே மிகுந்த பயன் தருவதாயிருக்கிறது.

அதிர்ச்சிதாங்கி (Buffer) : அதிர்ச்சியை ஏற்று, அதை மெதுவாகத் தாங்கிநின்று, அதனால் சேதம் விளையாமல் தடுக்கும் சாதனம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. சாதாரணமாக இது ரெயில் வண்டிகளிலும், எஞ்சினிலும் பொருத்தப்படுகிறது. வண்டிகளையும், எஞ்சினையும் இணைக்கும் இடத்தில் முன்னும் பின்னும் அதிர்ச்சிதாங்கிகள் இருக்கும். இத்தகைய அதிர்ச்சி தாங்கியில் நீளவட்ட வடிவான தட்டு ஒன்று நீண்ட தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இத்தண்டு வண்டிக்குள் புகுமாறு அமைக்கப்பட்டிருக்கும். தண்டைச் சுற்றிலும் வலிவான சுருள் வில்லுகள் இருக்கும். வண்டிகள் மோதும்போது தண்டு சுமார் அரை அடிவரை உள்ளே நுழைந்து அதிர்ச்சியை ஏற்கும். சுருள் வில்லிற்குப் பதிலாக ரப்பர்க் கட்டையையும், காற்றின் அழுத்தத்தையும் பயன்படுத்தும் அதிர்ச்சிதாங்கிகளும்

உண்டு.