பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதினே

88

அதீத மைக்ராஸ்கோப்பு

போல் மனத்தை உருக்குவதாக அமைந்திருப்பதால் அதனைக் குட்டித் திருவாசகம் என்பர். மாணிக்க வாசக சுவாமிகள் தம் அனுபவங்களையெல்லாம் தம் திருவாசகத்தில் செறித்திருப்பதுபோல, நம் ஆசிரியரும் இக்கருவை நூலிற் செறித்திருக்கிறார். இந்நூல்களில் சிவபிரானைப் பற்றிய பல கதைகளும், கருவைத் தலச் சிறப்புக்களும், வழிபாட்டு முறைகளும் காட்டப்பெற்றிருக்கின்றன. தம்முடைய பக்தியையும் சிவபிரானிடம் தாம் செய்யும் அடிமைத்திறத்தையும் இவற்றில் அவர் அமைத்திருக்கிறார். பாடல்கள் மிக எளியவை.

நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை ஒரு நீதி நூல்; 136 அடிகளையுடையது. இது 9 பகுதிகளையுடையதாய். உலகத்தார் அறிய வேண்டும் இன்றியமையா நீதிகளை, மிக எளிய சொற்களில், படிப்பவர் மனத்திலே ஊன்றுமாறு செறிவுடன் யாக்கப்பட்டுள்ளது. இந்நூலும், கொக்கோகம், இலிங்க புராணம் ஆகிய நூல்களும் இவருடையன என்று கூறுவாரும், பிறருடையன எனக் கூறுவாருமாக ஆராய்ச்சியாளர் இருதிறத்தினராய் இருக்கின்றனர். ரா. வி.

அதினே (Athene) : அறிவு, கலைகள், விஞ்ஞானம் ஆகியவற்றிற்குரிய கிரேக்கப் பெண் தேவதை. இவள் ஜூஸ் தலையிலிருந்து சர்வாயுதபாணியாய் எழுந்ததாகக் கூறுவர். இவளே மனிதர்க்குத் தலை சிறந்த வரமாக ஒலிவ மரத்தை உண்டாக்கியதால், இவள் பெயரை வைத்தே கிரேக்கத் தலைநகரத்துக்கு ஆதன்ஸ் என்று பெயரிட்டனர். இத்தேவதையை ரோமானியர்கள் மினர்வா என்று அழைப்பர்.

அதீத அகம் (Super Ego): சாதாரணமாக மனச்சான்று என்று கூறப்படுவதே அதீத அகம் என்று கூறலாம். இதுவே மனித இயல்பின் உயர்ந்த ஆன்ம அறப்பகுதி என்று கூறுவர். நாகரிகத்துக்கு இன்றியமையாத சமூக அமைப்பை உண்டாக்குவதற்கு ஒருவன் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஒரு தத்துவமாக அது இயங்குகின்றது. அது மனிதரிடம் மட்டுமே காணப்படுவது, விலங்குகளிடம் காணக்கிடையாது என்று கூறுவர். பெரும்பாலும், அதீத அகம் என்பது, பரம்பரைத் தத்துவமாக வராமல், பிறந்த பின்னரே புதிதாக உண்டாவது.

தடை ஏற்படாதவரை, குழந்தைகளுக்கு நல்லது தீயது என்ற வேறுபாடு தெரியாது. அதாவது, குழந்தையிடம் அகம் என்பது பிறக்கவில்லை என்று பிராயிடு (Freud) கூறுவர். குழந்தையுள்ளம் என்பது இன்பம் நாடும் செயல் வரிசை மட்டுமேயாகும். அதற்கு உளவியல் அறிஞர்கள் அது என்று பொருள்படும் இத் என்னும் லத்தீன் பெயரை அளித்துளர். வாழ்வு என்பது வெறும் இன்பம் நாடும் செயல்களாக மட்டும் இருக்க முடியாது என்று குழந்தை தன் பெற்றோர் நடவடிக்கைகளாலும் பிற அனுபவங்களாலும் விரைவில் தெரிந்துகொள்கிறது. இதை அறிந்ததும் அது தன் வாழ்க்கை முறையை நடத்துவதற்காகப் பயன்படுத்திவந்த இன்பத் தத்துவத்தை விட்டுவிட்டு உண்மைத் தத்துவத்தை மேற்கொள்ளத் தொடங்குகிறது. இவ்வாறு குழந்தை சமூக உறுப்பினன் ஆனதும், அதனுடைய ஆதி இத்தத்துவம், இன்பம் நாடும் பகுதி என்றும், சமூக அகம் என்னும் பகுதி என்றும் இரண்டாகப் பிரிகின்றது. உளவியலார், சில காலத்துக்கு முன் மனச்சான்று என்பதை அகம் என்பதைக் கொண்டு விளக்கிவந்தனர். ஆனால், பின்னால் நடைபெற்ற ஆராய்ச்சிகள், அகத்தைப் பிரித்து ஆராய்வதால் பொதுவாக மனச்சான்றின் பிறப்பும், சிறப்பாகக் குற்ற உணர்ச்சியின் பிறப்பும் தெளி வாக விளங்குவதில்லை என்பதைக் காட்டிற்று. பாவ உணர்ச்சி மேலிட்டபோதிலும், அதைக்கொண்டு அதன் பிறப்பிடம் அகமே என்று கூற முடியவில்லை. உதாரணமாக ஒரு குழந்தை தனது என்று கூறக்கூடிய ஒரு காரியத்தைச் செய்துவிடுகிறது. அப்பொழுது அதன் ஆளுமையில் ஒரு பகுதி அதன் அகத்தைத் துஷ்டத்தனமானது, தண்டிக்கப்பட வேண்டியது என்று கருதுகிறது. தவறு செய்தால் தந்தை எவ்வாறு கண்டிப்பரோ, அவ்வாறே இந்தப்பகுதியும் கண்டிக்கத் தொடங்குகிறது. இவ்வாறு தந்தைபோல் அகத்தைக் கண்டிக்கும் வேலையை மேற்கொள்ளும் இந்த ஆளுமைப் பகுதியே அதீத அகம் என்று பிராய்டு கூறுகிறார்.

இந்த அதீத அகம் என்பது ஈடிப்பஸ் மனக்கோட்டம் (Oedipus complex) என்பதன் விளைவு என்று பிராய்டு கூறுகிறார். ஈடிப்பஸ் என்பவன் கிரேக்க புராணத்தில் வரும் ஓரரசன். அவன் தன் தந்தை என்று அறியாது, அவனையே கொன்றுவிட்டுத் தன் தாயையே யாரென்று தெரியாமல் மணந்து கொண்டான். இம்மட்டிலேயே இந்தக் கதையை ஆதாரமாக வைத்து, பிராய்டு ஈடிப்பஸ் கோட்டம் என்று இதற்குப் பெயரிட்டார்; இத்தகைய மனக் கோட்டம் ஏற்படக்கூடிய நிலை எல்லா மக்களுக்கும் குழந்தைப் பருவத்தில் தோன்றுகிறது என்று கூறுகிறார்.

ஒவ்வொரு பையனும் தன் தாயின் அன்பைப் பெறத்தன் தந்தையுடன் போட்டி போடுகிறான். தாய் முதலில் அன்பு செய்த போதிலும், காதல் செய்ய இடங் கொடுப்பதில்லை. பையன் தாயிடம் அன்பு செலுத்துவதுடன் தந்தையைப் போல் நடக்கவே ஆசைப்படுகிறான். ஆனால் தந்தை தாயிடம் காதல் செய்வதுபோல் தான் செய்ய முடிவதில்லை. அதனால் தந்தையிடம் ஏற்பட்ட அன்பு வெறுப்பாக மாறுகிறது. அவன் தந்தையை ஒழித்துவிட விரும்புகிறான் ; ஆனால், தந்தை தாய் இருவரும் இடங் கொடாததால், தன்னுடைய ஆசையையும் கோபத்தையும் அடக்கிக்கொள்ள வேண்டியவனாகிறான்; இதன் பயனாக, “ தந்தை போல் ஆகவேண்டும் “ என்ற குறிக்கோளும், “தந்தையைக் கொன்று தாயை அடைதல் கூடாது “ என்ற குறிக்கோளும் உடைய அதீத அகம் ஆகிவிடுகிறான். இந்த அதீத அகம் நாளடைவில், இதைச் செய், இதைச் செய்யாதே என்று அகத்துக்குக் கட்டளையிட்டு வருகின்றது. சிறிது வளர்ந்ததும், பாடசாலை ஆசிரியர்களும் பிறரும் தந்தை இடத்தை அடைகிறார்கள், அதன் பயனாக, அதீத அகம் அற வாழ்க்கைத் தணிக்கை அதிகாரியான மனச்சான்றாக ஆகிவிடுகின்றது. மனச்சான்றின் விருப்பம் நிறைவேறாத பொழுது குற்ற உணர்ச்சி பிறக்கிறது. இதன் ஆற்றல் மிகுந்து இறுதியில் அகமானது பாவம் செய்துவிட்டதாக அஞ்சி, சாகும் நிலை உண்டாய் விடுவதுண்டு.

அதீத அகம், சமூகம் வகுக்கும் ஒழுக்க முறையை ஏற்றுக்கொண்டு, அகத்தை நல்வழிப்படுத்த முயல்கின்றது. ஆனால், அகமாகிற ஆளுமைப் பகுதி சமூகத்துடன் ஒத்துழைக்க விரும்புவதில்லை. அதனால், அகத்துக்கும் அதீத அகத்துக்கும் இடையில் பிணக்கு உண்டாகிறது. அதீத அகம் தவறு என்று கூறியதும், அகம் பயந்துபோய்த் தன்னுடைய ஆசைகளை அடக்கி விடுகிறது. அவ்வாறு அடக்குவதே பலவித உள்ளக் கோளாறுகளுக்குக் காரணமாக இருக்கின்றது. பெ.

அதீத மைக்ராஸ்கோப்பு (Ultra microscope) : போதிய அளவு ஒளி விழுந்தால், மிகச் சிறு துகளுங்கூட, மைக்ராஸ்கோப்பில் தெளிவாகத் தெரியும். ஆனால், சிறு துகளின்மேல் விழும் ஒளியை, அது நாற்புற-