பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

90

அந்தமானியர்


அந்தகக்கவி வீரராகவ முதலியார் : இவர் பிறவியிலேயே கண்ணிழந்தவர் ; காஞ்சிபுரத்துக்கருகிலுள்ள பூதூரிலே சைவ வேளாளர் மரபில் தோன்றிய வடுகநாத முதலியார் என்பவரின் மகனார்; காஞ்சியிலே கலை பயின்றவர். இவருக்கு யாழ்ப் பயிற்சியும் உண்டுபோலும். இவர் நினைவாற்றல் மிக்கவர் என்பதைக் 'கவிவீர ராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத் தமிழையுமே' எனப் பரராச சிங்கன் என்னும் அரசன் புகழ்வதால் அறியலாம். இவர் சிறந்த கவிஞர். இவர் செய்யுட்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் உடையவை.

இவர் சோழ நாடு சுற்றிய பின்னர், ஈழ நாட்டிற்குச் சென்றார். அப்போது அங்கே பரராச சிங்கன் அரசாண்டு வந்தான். அவன் இவர் புலமையைப் பாராட்டி யானையும் வள நாடும் பொன்னும் அளித்தான்.

இவர் பாடிய நூல்கள் : திருவாரூர் உலா, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றப் புராணம், சேயூர்க் கலம்பகம், சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா. இவர், மற்றும் சீட்டுக் கவிகளும் பலருக்கு விடுத்துள்ளார்; பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார். இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டென்பர்.

இவரியற்றிய நூல்களில் திருவாரூர் உலா நிறைந்த பொருளும் இனிமையும் உடையது. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் சொற்சுவை மிகுந்தது.

திருவாரூர் உலா திருவாரூர்ப் பெருமான் திருவிளையாடல், திருவாரூர் வரலாறு முதலியவை கூறப்பட்டிருப்பதுடன், மடக்கு, சிலேடை ஆகிய சொல்லணிகளும், தொனிப் பொருள்கள் போன்ற சிறப்புக்களும் உடையது ; இனிய நடையினது; பெண்களின் பருவ இயல்புகள் சுவை பெறக் கூறப்படுவது.

அந்தமான் தீவுகள் வங்காளக் குடாக் கடலில் உள்ள தீவுகள். இக்கூட்டத்தில் 204 தீவுகள் உள்ளன; சென்னையிலிருந்து 740 மைல் தொலைவில் உள்ளன; சென்னையிலிருந்து பினாங்கு செல்லும் கடல் மார்க்கத்தில் உள்ளன. தெற்கு வடக்கில் இத்தீவுகளின் மொத்த நீளம் 219 மைல். இவை பெரிய தீவுகள்

அந்தமான் தீவுகள்

என்றும், சிறிய தீவுகள் என்றும் இரு பகுதியாகவுள்ளன. இத்தீவுகளில் மலைகளும் காடுகளும அடர்ந்துள்ளன. இம்மலைகளில் சாடில் உச்சி (12,400 அடி) மிக வுயரமானது. போர்ட் பிளேர், கார்ன்வாலிஸ், எல்பின்ஸ்டன் என்பவை முக்கியமான துறைமுகங்கள். போர்ட் பிளேரில் ஒரு வானவியல் நிலையம் நிறுவப்பட் டுள்ளது.

இத்தீவுகளில் காடுகள் அடர்ந்திருப்பதால், வேலைக்கான தேக்கு முதலிய பலவகை மரங்களும், தென்னையும், விறகுக்காகும் ஏராளமான மரங்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியாகின்றன. ஒருவகைப் பன்றியும், எலிகளும், வௌவால்களும் இத்தீவுகளில் மிகுதியும் காணப்படுகின்றன. இங்குக் கிடைக்கும் மீன்களும் ஆமைகளும் வங்காளத்தில் விலையாகின்றன.

இத்தீவுகளில் வசிக்கும் மக்கள் மிகமிகப் பண்டைய மக்களினத்தைச் சார்ந்தவர்கள் ; சராசரி 4 அடி உயரமுள்ளவர்கள். 1789-ல் காப்டன் பிளேர் என்பவன் வங்காள அரசாங்கத்திடம் உத்தரவு பெற்று, இத்தீவில் ஒரு குடியேற்றம் அமைத்தான். 1858-லிருந்து ஆங்கில ஆட்சி இத்தீவுகளைக் கொடுங் குற்றவாளிகளுக்குரிய தீவாந்தரச் சிறையாக மாற்றி வைத்தது. இங்கிருந்த சதுப்பு நிலங்களால் வரும் பலவித நோய்களால் இத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டோரில் பலர் மடிந்தொழிந்தனர். மேயோ பிரபு என்னும் இந்திய வைசிராய் ஒருமுறை (1872) இங்குச் சென்றிருந்தபோது ஒரு கைதி அவ் வைசிராயைக் குத்திக் கொன்றுவிட்டான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது 1942-லிருந்து இத்தீவுகள் இந்திய சுதந்திர சர்க்கார் (அசாத் இந்து சர்க்கார்) ஆட்சியின் கீழ் இருந்தன; இப்போது இந்திய அரசியலமைப்பில் முதல் தபசில் ஈ பாகத்தில் குறிப்பிட்ட இராச்சியங்களில் ஒன்றாக இந்திய ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இங்கு அரசாங்கம் ஒரு பிரதம கமிஷனர் மூலம் நடத்தப் பெறுகிறது. இவருக்கு 5 அங்கத்தினர்கள் அடங்கிய ஆலோசனைச் சபையொன்றுண்டு. தலை நகரம் போர்ட் பிளேர். மொத்த மக் : 30,963 (1951).மொத்த நிலப்பரப்பு: 3,143 ச.மைல்.

அந்தமானியர் : முற்காலத்தில் அந்தமானியர் பத்துச் சாதியர்களாகப் பத்து இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் குடும்பங்களாகப் பிரிந்திருந்தனர். மேலும் அவர்கள் கடற்கரையில் வாழ்வோர், காட்டில் வாழ்வோர் என்று இரு பிரிவினராகவும் பேசப்படுவர். கடற்கரைக்காரர் கடலில் மீனும் ஆமையும் பிடிப்பர். காட்டுக்காரர் வேட்டையாடுவர்; உப்பங் கழிகளில் மீன் பிடிப்பர்.

காட்டு மக்கள் பெரும்பாலும் இருந்த இடத்திலேயே இருப்பவர்கள். கடற்கரை மக்களோ, அடிக்கடி இடம் மாறுவார்கள். ஆயினும் தலைமையிடம் ஒன்றிருக்கும். யாரேனும் இறந்து போனால், இவர்கள் உடனே வேறிடம் சென்று, இரண்டு மூன்று மாதங்கள் இருந்துவிட்டுத் திரும்புவர் ; வேட்டையாடச் செல்லும்போது, போகும் இடங்களில் தழைகளால் குடிசைகள் கட்டிக் கொள்வர்.

அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வர். ஆண்மகன் வேட்டையாடியோ, மீன் பிடித்தோ மாமிச உணவு தேடுவான். பெண் மகள், காய் கனிகளையும் விறகையும் நீரையும் சேகரிப்பாள். முதலில் அவர்களிடம் நாய்கள் கிடையா. நாய்கள் வந்தபின் வேட்டையாடுதல் எளிதாயிற்று.

அவர்களிடம் தனிச் சொத்துரிமை காணப்பட்டாலும் பொதுவாக அவர்களுடைய பொருளாதார அமைப்புப் பொதுவுடைமையை ஆதாரமாக வுடையது. அவர்கள் வேட்டையாடும் காடு முழுவதும் சமூக முழுவதற்குமே சொந்தம். தனி ஒருவனுக்குச் சொந்தமாயிருப்பன, மரங்கள், வேட்டையாடிய மிருகங்கள், அவனாகச் செய்த ஆயுதங்கள் ஆகியனவே. பெண்ணுக்கும் இது போன்ற உரிமை உண்டு. மனைவியின் சொத்தில் கண-