பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பர் மாகாளம்

99

அம்பெலிபெரீ

டப் படுகிறான் (திவாகரம்). இவனைப் பாடிய புலவர் கல்லாடனார் (புறம். 385).

அம்பர் மாகாளம் தஞ்சாவூர் ஜில்லாவில் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்கு 2¾ மைல் தொலைவில் உள்ளது. இதற்குக் கோயில் திருமாகாளம் என்பதும் பெயர். இதற்கு முக்கால் மைல் தொலைவில் அம்பர் என்னும் தலம் இருக்கிறது. இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான சோமாசிமாற நாயனார் வேள்வி செய்த மண்டபம் இருக்கிறது. அம்பன், அம்பாசூரன் என்னும் அரக்கர்களைக் கொன்ற பாவம் தீரக் காளி இங்குப் பூசை செய்தாள் என்பது ஐதீகம். வெளிச் சுற்றில் தென் பக்கத்தில் காளி கோயில் இருக்கிறது. மகாகாள ரிஷி என்பவரும் இங்குப் பூசை செய்தனர். கோவிலில் சோமாசிமாற நாயனார், அவர் மனைவியார், சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் ஆகிய இவர்களது உருவச் சிலைகள் இருக்கின்றன. சுவாமி பெயர் மாகாள நாதர். அம்மை அச்சந்தீர்த்த நாயகி. சோமாசிமாற நாயனார் வேள்வி விழா வைகாசி ஆயிலிய நாளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அம்பலவாணக் கவிராயர் (1) சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ள சதுரகிரி அறப்பளீசுரர்மீது அறப்பளீசுர சதகமெனும் அற நூல் பாடியவர் ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மகனார். காலம் 18 ஆம் நூற்றாண்டு.
(2) அம்பலவாணக் கவிராயர் மருதூரிலிருந்த கவிஞர் ; ஆதித்தபுரி புராணம் பாடிய்வர்.

அம்பலவாண தேசிகர் அதிசய மாலை, உபதேச வெண்பா, உபாய நிட்டை வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப்பஃறொடை, சிவாச்சிரமத் தெளிவு, தசகாரியம், நமச்சிவாயமாலை, நிட்டைவிளக்கம் என்னும் பண்டார சாத்திரங்கள் பத்தையும், பாஷண்டநிராகரணம், அனுபோக வெண்பா, பூப்பிள்ளையட்டவணை என்னும் நூல்களையும் இயற்றியவர். திருவாவடுதுறை மடத்தலைவர். 15 ஆம் நூற்றாண்டினர்.

அம்பலவாண நாவலர் (20 ஆம் நூ.) யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை யென்னும் ஊரினர். அப்பைய தீட்சிதர் செய்த பிரமதர்க்க ஸ்தவம் என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

அம்பலவாண பண்டிதர் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்னும் ஊரினர் ; 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தவர். தந்தையார் கோப்பாய் அருளம்பல முதலியார் ஆவர்; சிறந்த வாக்கு வன்மையும் கல்விச்சிறப்பும் உடையவர்; சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களாற் பாராட்டப் பெற்றவர். சேனாதிராயர் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா என்னும் நூல்களை ஆராய்ந்து அச்சிட்டவர்.

அம்பா சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மலைமிக்க தாலூகாவாகும். இதிலுள்ள பொதியின் மலையிலே தாமிரபருணியும், அதன் உபநதிகளும் உற்பத்தியாகின்றன. தாலூகாப்பட்டணமாகிய அம்பாசமுத்திரத்தைச் சூழ்ந்துள்ள வயல்களே மாவட்டத்தில் மிகச் செழிப்பானவை. முக்கியமான கைத்தொழில் நெசவு. பக்கத்திலுள்ள பத்தமடை கிராமம் மெல்லிய கோரைப்பாய்க்குப் பேர் போனது; புகைவண்டி நிலையம் உள்ளது. பாபநாசத் தலத்துக்குச் செல்லும் யாத்திரிகர் இங்கு இறங்கியே போவர். இங்கு நல்ல கருங்கல் கிடைக்கிறது. பெரிய தூண்கள் செய்து அயலூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. நகர மக் : 20,356 (1951).

அம்பாலா கிழக்குப் பஞ்சாப் இராச்சியத்தில் ஒரு நகரம் ; நெடுங் காலமாக ஆங்கிலப் படைக்குத் தண்டாக இருந்து வந்தது ; பல பெரிய கட்டடங்களுடையது. இப்போது இந்திய விமானப்படைப் பயிற்சிக் கழகம் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இங்கு உண்டு. மக்: 1.04.835 (1941).

அம்பாய்னா (Amboina) கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள மொலுக்காசில் ஒரு மாவட்டமும் அதன் தலை நகரமும் ஆகும். இம்மாவட்டம் அம்பாய்னா, சபாருவா, செராம் போன்ற சில தீவுகளால் ஆனது. பரப்பு 75,820 ச. மைல், மக்: சு. 4 லட்சம். இலவங்கம், சாதிக்காய் முதலிய பொருள்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன.அம்பாய்னாநகரம் ஒருநல்ல துறைமுகம். 1521-ல் இத்தீவுகளில் போர்ச்சுக்கேசியர் குடியேறினர். 1600-ல் டச்சுக்காரர் இவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். 1615-ல் ஆங்கிலேயரும் அம்பாய்னாத் தீவின் மறு முனையில் குடியேறினர். டச்சுக்காரர் இவர்களைச் சுதேசிகளைக் கலகஞ் செய்யத் தூண்டினர் என்று குற்றம் சாட்டி, 1623-ல் கொன்றுவிட்டனர். 1942-ல் ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் வந்த இப் பிரதேசம் யுத்தத்தின் முடிவில் மீண்டும் டச்சு ஆதிக்கத்தின்கீழ் வந்தது. 1950-ல் தோனீசியக் குடியரசு நிறுவப்பட்ட போது அம்பாய்னா அதன் ஆளுகையின்கீழ் வந்தது.

அம்பிகாபதி (12 ஆம் நூ.) கம்பரின் புதல்வர் ; சிறந்த கவிஞர் ; குலோத்துங்கன் அவைக்களப் புலவராக இருந்தார் என்றும், கம்பராமாயணத்துக்குச் “சம்பநாடன்” எனத் தொடங்கும் சிறப்புப்பாயிரங் கொடுத்தவர் என்றும், அம்பிகாபதிகோவை பாடியவர் என்றும், தமிழில் அணியிலக்கணம் செய்த தண்டியின் தந்தை யென்றும் கூறுவர்.

அம்பிகை பாகர் யாழ்ப்பாணத்தில் இணுவில் பிறந்தவர்; இணுவையந்தாதி இயற்றியவர்.

அம்பிரியா (Ambria) : இத்தாலியில் ஒரு மாகாணம். இங்கு வாழும் அம்பிரியர் ஒருவகைப் பண்டைச் சாதியினர். இவர்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஐரோப்பாவில் வசித்து வந்தனர் என்று கருத இடமுண்டு. இங்கே மக்கள் முன்பு பேசி வந்த மொழிக்கு அம்பிரிய மொழி என்பது பெயர். இது ஆஸ்கன் மொழிக்கு நெருங்கிய தொடர்புடையது. இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடமாயினும் செழிப்பாக இருக்கிறது. இங்கு எஃகு, சணல் முதலிய தொழிற் சாலைகள் பல உள்ளன. பரப்பு : 3,281 ச. மைல் ; மக் : 8.02,415 (1951).

அம்பெலிபெரீ (Umbelliferae) கொத்துமல்லிக் குடும்பம் : இந்திய நாட்டில் இக் குடும்பத்தைச் சேர்ந்த பல செடிகள் சம்பாரங்களாகப் பயிர் செய்யப்படுகின்றன. கொத்துமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், சதகுப்பை, ஓமம், கேக்கு விதை, பெருங்காயம் முதலியவை இந்த வகுப்புச் செடிகள். மஞ்சள் முள்ளங்கி (Carrot) இதே குடும்பத்தைச் சேர்ந்தது. இதைச்சேர்ந்த பல காட்டுச் செடிகள் மலைகளில் வளர்கின்றன. மிக வுயர்ந்த மலைகளில் ஆல்பைன் தாவரங்களாகச் சில வளர்கின்றன.

இது மிகவும் பெரிய குடும்பம் ; முக்கியமானது. செடி வழக்கமாக வளரும் பாங்கும் அதன் கனிகளும் இந்தக்-