பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மை குத்தல்

103

அம்மை குத்தல்

(Measles)பெரியம்மைபோலக்கொடியதன்று. ஆயினும் பெருவாரியாக அதிக தீவிரமாகத் தொற்றக்கூடியது.

அம்மைகள் பொதுவாகச் சிறுவர்களைத் தொற்றும் குணமுடையன. விளையாட்டு அம்மையும், பெரிய அம்மையும் சாதாரணமாக ஒரு தடவைக்கு மேல் வருவதில்லை. ஆனால், தட்ட அம்மையோ ஒரு தடவைக்கு மேலாகவும் அடிக்கடியும் வரலாம்.

இந்த அம்மைகளைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. டி. எஸ். தி.

அம்மை குத்தல் (Vaccination) என்பது மாட்டு அம்மைப் பாலை மக்களுக்குக் குத்தி, அவர்களுக்குப் பெரியம்மை வாராமல் பாதுகாக்கும் முறையாகும். இவ்வாறு செய்தால் பொதுவாகப் பெரியம்மை போடுவதில்லை ; ஒரு வேளை போட்டாலும் இலேசாக வார்த்துத் தீங்கு செய்யாமல் போய்விடும். இந்த முறை, இந்தியா, அரேபியா போன்ற கீழ் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கையாளப்பட்டதாக வரலாற்று அறிஞர் கூறுகிறார்கள், அக்காலத்தில் மாட்டு அம்மைப் பாலைக்குத்தாமல், பெரியம்மைப் பாலையே குத்தினதாகத் தெரிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேரி வார்ட்லி மான்டேகு அம்மையார் துருக்கிக்குச் சென்றிருந்தபோது, இந்த முறையை அங்கே கற்றுக்கொண்டு, பிறகு இங்கிலாந்துக்கு வந்தார். அம்மை குத்தும் பழக்கத்தைச் சட்டன் என்பவர் மிகுதியாகப் பரவுமாறு செய்தார்.

ஆனால் பெரியம்மைப் பாலுக்குப் பதிலாக, மாட்டம்மைப் பாலை விஞ்ஞான முறையில் பயன்படுத்தும் முறையை வகுத்தவர் ஆங்கில வைத்தியர் எட்வர்டு ஜென்னர் (1749-1823). மாட்டம்மை போட்டவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை என்று அக்காலத்து மக்கள் நம்பி வந்தனர். இதன் உண்மையை ஜென்னர் சோதித்துப் பார்த்து, உண்மைதான் என்று 1796-ல் உறுதி செய்தார். மாட்டு அம்மை வார்த்திருந்த ஒரு பாற்காரப் பெண்ணின் அம்மைப் பாலை எடுத்து, ஒரு சிறு பையனுக்குக் குத்திப் பிறகு பல வாரங்கள் சென்ற பின்னர், பெரியம்மைப் பாலை எடுத்து, அவனுக்குக் குத்தியபொழுது, அவனுக்குப் பெரியம்மை வரவில்லை. தொடக்கத்தில் மற்ற வைத்தியர்கள் ஜென்னர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். பின்னர், ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் இம்முறை பரவலாயிற்று.

அப்போது மாட்டம்மை போட்ட மனிதனுடைய கையிலுள்ள புண்ணிலிருந்தே அம்மைப்பால் என்னும் வைரசை எடுத்து மற்றவர்களுக்குக் குத்திவந்தனர். ஆனால், இப்போது உடல் நலமாயுள்ள கன்றுகளினுடைய உடலில் மாட்டம்மை வைரசைக் குத்திப் புண் உண்டாக்கிப் பின்னர் அதனிடமிருந்து வைரசை எடுத்து மக்களுக்குக் குத்துகிறார்கள்.

முழங்கைக்கு மேல் தோலைக் கீறி, வைரஸ் குத்தப்படுகிறது. அந்த இடத்தில் நாலாவது நாள் சிவந்த கொப்புளம் உண்டாகும். அது பத்தாவது நாள் காய்ந்து வரும்போது, தோலை உரியாமலும் பிராண்டாமலுமிருந்தால், காய்ந்த பொருக்குத் தானாக இரண்டு வாரங்களில் கீழே விழுந்துவிடும். பிறாண்டினால், அதன் காரணமாகத் தொற்று விஷம் உண்டாய்விடும். இருபத்தொரு நாள் சென்றதும், தோல் உரிந்து விழுந்த இடம் தழும்பாக இருக்கும். சிலர்க்கு எட்டு நாள் சுரமும், தலைவலியும், மயக்கமும் உண்டாவதுண்டு. சிலர்க்கு அக்குளில் நெறி கட்டும். ஆயினும் பெரும்பான்மையோர்க்கு எவ்வித அபாயமும் உண்டாவதில்லை.

இவ்வாறு குத்திவைக்கும் அம்மைப் பால் இரத்தத்தில் சேர்ந்ததும், பெரியம்மை விஷத்தை எதிர்க்கக் கூடிய மாற்றுப் பொருள்கள் (Antibodies) உண்டாகின்றன. இவை உடம்பில் இருந்துகொண்டு பெரியம்மை வாராமல் பாதுகாத்து வரும். ஆனால் இவற்றின் ஆற்றல், ஆண்டுகள் ஆக ஆகக் குறைந்துவிடுவதால், ஏழு ஆண்டுகட்கு ஒரு முறை அம்மை குத்திக் கொள்வது நல்லது.

அம்மை குத்துவது பயனுடையதாக இருக்கவேண்டுமானால், அம்மைப் பால் (வைரஸ்) மற்ற நோய்க் கிருமிகள் இல்லாமல் தூயதாக இருக்கவேண்டும் ; அதை ஒழுங்காகச் சரியான முறையில் குத்தவேண்டும் ; அரை அங்குலத் தூரத்துக்கு ஒன்றாக நான்கு இடங்களில் குத்தவேண்டும்; நான்கு இடங்களும் சேர்ந்து, அரைச் சதுர அங்குலப் பரப்புடையதாயிருத்தல் வேண்டும், குத்தும் போது ஊசியை நன்றாகக் காய்ச்சிக் கிருமி நீக்கம் (Asepsis) செய்துகொள்ளவேண்டும் ; தழும்பு உண்டாகும்வரை தொற்று விஷம் உண்டாகாதவாறு பாதுகாக்க வேண்டும்.

அம்மை குத்தல், தீங்கு விளைவிக்கும் என்று,படித்தவர்களிலும்கூடச் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் அம்மை குத்துவதால், அக்கி, கிரந்தி, குஷ்டம், க்ஷயம் ஆகிய நோய் வருவதாகக் கூறுகிறார்கள் மாட்டு அம்மைப்பாலுடன் கிளிசிரின் சேர்த்துத் தூய்மை செய்யப்படுவதால், கிரந்தி, க்ஷயம், அக்கி ஆகியவை உண்டாவதில்லை. அத்துடன் குஷ்டமும் கிரந்தியும் மாடுகளுக்கு உண்டாவதில்லை. ஆயினும் சிலர்க்கு மூளை அழற்சி (Cerebrospinal meningitis) உண்டாகி, மரணம் நேரிடுவதுண்டு, ஆனால் இப்படி உண்டாவது 50 ஆயிரம் பேரில் ஒருவர்க்கேயாம். அதுவும் பருவம் அடைந்தவர்க்கே. அதனால் சிசுவாயிருக்கும்போதே அம்மை குத்தத் தொடங்கி, அடிக்கடி குத்தி வருதல் நல்லது. அதாவது மூன்றாவது மாதத்திலும், பிறகு ஐந்தாவது வயதிலும், பிறகு பதினைந்தாவது வயதிலும் குத்தலாம்.

இவ்வாறு கவனித்துக் குத்திவந்தால், எவ்வித அபாயமும் உண்டாகாமல், நன்மையே தரும் என்று வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் அரசாங்கத்தார் 1840-ல் செய்த சட்டத்தின்படி, மக்களுக்கு அம்மைப்பால் தருவதாயும், அவர்கள் விரும்பினால் குத்திக் கொள்ளலாம் என்பதாயும் கூறினர். அதன்பின் 1853-ல் கட்டாயமாக அம்மை குத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றினர். ஆயினும் 1898ஆம் ஆண்டுச் சட்டம் குழந்தைகளுக்குப் பிறந்து ஆறு திங்களாவதற்குள் அம்மை குத்தவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு அம்மை குத்தினால் தீங்கு உண்டாகும் என்று மனப் பூர்வமாக நம்புவதாகக் குழந்தை பிறந்து நான்கு திங்களாவதற்குள் மாஜிஸ்டிரேட்டுக்குத் திருப்தி உண்டாகுமாறு செய்துவிட்டால் அம்மை குத்த வேண்டியதில்லை என்றும் கூறிற்று. இப்போது ஆட்சியில் இருந்துவரும் 1948ஆம் ஆண்டுச் சட்டம் அம்மைகுத்தல் நல்லது என்று சிபாரிசு செய்தாலும், காட்டாயப் படுத்தவில்லை என்று கூறுகிறது.

சென்னை இராச்சியத்தில் அம்மை குத்தல் பற்றி ஆட்சியில் இருந்து வருவது 1919-ஆம் ஆண்டு நான்காவது சென்னைச் சட்டமும் அதுபற்றிய விதிகளும் ஆகும். அவற்றின் சாரம், குழந்தை பிறந்து ஆறு திங்களாவதற்குள், பெரியம்மை போட்டு, அதன் வாயிலாகப் பாதுகாப்பு ஏற்படாதிருந்தால், அம்மை குத்திக் கொள்ள வேண்டும். அம்மை குத்திக் கொள்வது ஏழு ஆண்டுகட்கு ஒரு முறை நடைபெற வேண்டும். குத்த