பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமீபா சீதபேதி

110

அமீர் குஸ்ரு

படக்கூடிய சாரம் ஒன்றும் இல்லை. இவற்றிற்கு ஆபத்துக்களால் சாவு ஏற்படுமே ஒழிய, இயற்கையான மரணம் என்பது இல்லை.

அமீபா சீதபேதி (Amoebiasis) அமீபா என்னும் ஒருவித ஓரணு வுயிரினத்தால் விளையும் நோய். இது உணவின் வழியாக மனித உடலுட் செல்லலாம். அல்லது அந்த நோயுள்ளவர்களின் மலத்திலுள்ள அமீபா மற்றவர்களுக்குப் பல வாயிலாக வந்து சேரலாம். சாதாரணமாக இந்த அமீபா, எச்சமயத்தில் அதற்குப் போதுமான அளவு, உணவு கிடைக்கவில்லையோ, அல்லது அதன் சூழ்நிலை அது உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இல்லையோ, அச்சமயத்தில் ஒரு முட்டை வடிவமான உருவாகி, தன்னைச் சுற்றிலும் அழுத்தமான ஓடு போன்ற உறையை உண்டாக்கி, அதற்குள் பொதிந்திருக்கும். இந்த விதமான உருவிற்குக் கூடு (Cyst) என்று பெயர். இந்தக் கூட்டின் மூலமாக நோய் எளிதாகப் பரவுகிறது. இது மலத்தோடு வெளிப்படும். அப்படி வெளிவந்திருக்கும்போது மலத்தில் ஈ உட்கார்ந்தால், கூடுகள் மலத்தோடு அதன் கால்களிலே ஒட்டிக்கொள்ளும். அந்த ஈ நமது உணவில் வந்து உட்காருமாயின், கூடுகள் அதில் சேரும். இத்தகைய உணவை உட்கொள்ளும் போது, அமீபாக்கூடும் நமது இரைப்பைக்குள் சென்றுவிடும். அங்கு அதன் மேலோடு கரைந்துவிடும். அதனுள்ளிருந்து நான்கு அமீபாக்கள் வெளியே வரும். வெளியே வந்ததும் குடலில் போய்ச் சேர்ந்து, அங்கே எளிதாகப் பெருகும். சாதாரணமாக இந்த அமீபா பெருங்குடல் வாயிலிலும் (Caecum), ஏறு குடலிலும் (Ascending colon) தங்கும். அப்படி அங்குத் தங்கிப் பெருகி, அதன் அருகில் இருக்கும் பாகங்களை அமீபா கரைத்துவிடுகின்றது. அப்படிக் கரைத்துவிட்டவுடன் குடலில் புண் ஏற்படுகிறது. புண் ஏற்படுவதால் இரத்தமும் சீதமும் மலத்தில் காணப்படுகிறது. பெருங்குடலின் தொடக்கத்தில் தோன்றிய நோய் பரவிச் சில சமயங்களில் குறுக்குக் குடலிலும் (Transverse colon), இறங்கு குடலிலும் (Descending colon) இந்தப் புண் காணும். ஆசனத்திற்கு அருகில் அமீபாவினால் புண் ஏற்பட்டிருந்தால் மலம் அடிக்கடி போகும். அதோடு வயிற்று வலியும் அதிகமாகும். குடலைப் பரீட்ட்சை செய்தால், அதிலே குத்தினது போல் புண்கள் காணப்படும். ஒரு புண்ணிற்கும் மற்றெரு புண்ணிற்கும் நடுவில் இருக்கும் குடலில் வேக்காளம் காணப்படாது. ஆனால் புண்ணின் ஓரத்தில் குடைந்திருக்கும். அதாவது மேலே பார்ப்பதற்குப் புண் சிறியதாகக் காணப்பட்டாலும் அதன் ஓரமாகப் பார்த்தால் அடியில் குடைவாகக் கரைந்து போயிருக்கும் (Undermined edges). இந்தப் புண்களின் மத்தியில் கறுப்பு மயிர்களைப்போல் காணப்படலாம். இதையே டயாக் மயிர் உரி (Dyke hairsloughs) என்று சொல்வது. இந்தப் புண்களின் அடிப்பாகங்களில் அமீபா காணப்படும். பெருங் குடலின் ஆரம்பத்திலேயே புண்ணிருப்பதால், இந்த நோயில் மலம் அடிக்கடி போவதில்லை. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறைதான் மலப் பிரவிருத்தியாகும். இதில் மலம் அதிகமாகவும், சீதமும் இரத்தமும் குறைவாகவும் காணப்படும். சீதம் இருக்கும் பாகத்தை எடுத்துப் பரீட்சை செய்தால், அதிலே அமீபா காணப்படும்.

இந்த நோயுள்ளவர்களுக்குச் சில சமயங்களில் மலமே போகாமல் மலச்சிக்கலும் ஏற்படலாம். இந்த மலச்சிக்கல், குடலில் அமீபா இருப்பதால் உண்டானது என்று கண்டுபிடிப்பது கஷ்டம். தகுந்த முறையில் சிகிச்சை செய்யாவிட்டால், இந்த அமீபாவானது குடலின் சுவரைத் துளைத்துக்கொண்டு போய், அதற்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வருமாயின் குடலில் துவாரம் உண்டாவதால் அதிர்ச்சி (Shock) ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஆகலாம். அல்லது குடலின் சுவர்களிலே வெகு தூரம் போய் விடுவதால், எவ்வளவு சிகிச்சை செய்தும் வியாதி குணமாகாமல் இருந்து வரும். இந்த அமீபா குடலிலிருந்து இரத்தத்தின் வழியாக உடம்பின் பல பாகங்களுக்குச் சென்று, அந்தப் பாகங்களிலும் வியாதி ஏற்படக் காரணமாகிறது. சாதாரணமாகக் கள், சாராயம் முதலிய போதை வஸ்துக்கள் சாப்பிடுகிறவர்களுக்குக் கல்லீரலில் (Liver) பலம் குறைந்திருக்கும். அங்கே இந்த அமீபா வந்து சேருமாயின், ஈரலில் கட்டிகள் ஏற்படலாம். ஈரலினுடைய பலம் குறையாவிட்டால் கட்டிகள் ஏற்படுவதில்லை. ஆனால் ஈரலில் வேக்காளம் ஏற்பட்டுத் தானாகவே குணமடையும். இம்மாதிரியாகக் கட்டிகள், மண்ணீரல் (Spleen), நுரையீரல், மூளை, விதை ஆகியவற்றிலும் காணலாம். சில சமயங்களில் தோலிலேயும் உண்டாகும்.

நோய்க்குறி : மலம் நாலைந்து முறை ஒரு நாளைக்குப் போகிறது, அதோடு இரத்தமும் சீதமும் போகிறது, துர் நாற்றமும் அதிகமாகக் காணப்படுகிறது என்றால், அது அமீபாவினால் ஏற்பட்ட சீதபேதி என்று அறிய வேண்டும். மலத்தைப் பரிசோதித்து அமீபாவைக் கண்டுபிடிக்க வேண்டும். சாதாரணப் பரீட்சையில் மலத்திலே இது காணப்படாவிடினும், உப்புப் பேதிமருந்து கொடுத்துத் தண்ணீராகப் போகும் மலத்தைப் பாட்சை செய்தால், அதிலே பெரும்பாலும் அகப்படும்.

சிகிச்சை : நோய் கண்டவுடன் நோயாளியைப் படுக்கையிலேயே வைத்திருக்க வேண்டும். எமெட்டின் (Emetine) என்னும் மருந்தை ஊசிபோடவேண்டும். ஆனால் இதில் சில அசௌகரியங்கள் உண்டு. நோயாளிக்குப் பலக்குறைவும் அசதியும் ஏற்படலாம். ஊசிபோட்ட இடத்தில். வலி அதிகமாக இருக்கலாம். நோயாளிக்குத் தாங்கக் கூடிய சக்தி இருந்தால் அயூரியோமைசின் அல்லது தெராமைசின் என்ற மருந்துகளை உபயோகப்படுத்தலாம். சிரத்தையுடன் சிகிச்சை செய்து, நோயைத் தொடக்கத்திலேயே கண்டிக்க வேண்டும். நோய் முழுவதும் செவ்வையாகும் வரையில் உணவில் காரம் இருக்கக் கூடாது. நோய் ஆரம்பத்தில் கஞ்சியை உணவாகக் கொடுப்பதே நல்லது. ரெ. சு.

அமீர் அலி (1849-1928) பேர் பெற்ற இந்தியச் சட்டவியல் அறிஞர். பிரிவி கவுன்சில் நீதிபதியாக நியமனம் பெற்ற முதல் இந்தியர் (1909). முகம்மது நபி வமிசத்தினர் என்பர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். உயர் நீதிமன்றத்தின் முதல் முஸ்லிம் நீதிபதி. இஸ்லாம் குறித்து இவர் எழுதிய நூல்கள் சிறந்தவை. அவை ஆங்கில இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர். 1904லிருந்து இவர் இங்கிலாந்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

அமீர் குஸ்ரு (?- 1325) : இவர் அல்லாவுதீன் கில்ஜி, சியாசுதீன் துக்ளக் முதலிய முகம்மதிய மன்னர்கள் காலத்தில் டெல்லி சுல்தானுடைய அவைப்புலவராக இருந்த ஓர் அறிஞர். இவர் இயற்றியுள்ள துக்ளக் நாமா என்னும் நூலில் அக்காலத்திய மன்னர்களைப் பற்றிய வரலாறு காணப்படுகிறது. கியாசுதீனைப் பற்றி இந்நூல் புகழ்ந்து கூறுகின்றது. இவர் ஒரு முறை