பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமீன் தீவுகள்

111

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

மொகலாயர்களால் சிறைப்படுத்தப்பட் டிருந்தார் ; அவர்களைப்பற்றி இவர் விவரித்துக் கூறியுள்ளது இவரது வருணனைத் திறனைக் காட்டுகிறது. இவர் ஏறத்தாழ 14 பாரசீகச் செய்யுள் நூல்களை இயற்றி யுள்ளார். இந்தியாவிலிருந்த பாரசீக மொழிப் புலவர் களில் இவரே தலைசிறந்தவர் எனலாம். தே. வெ. ம.

அமீன் தீவுகள் இலட்சத் தீவுகளில் வடக்குத் தொகுதியைச் சேர்ந்த ஐந்து தீவுகள், இவை கொங்கணக் கடற்கரையிலிருந்து மேற்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ளன. இவை கடலின் கீழுள்ள பவளத்திட்டு ஒன்றன்மேல் அமைந்துள்ளன. இத் தீவுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். மிகப் பெரும்பான்மையோர் பேசும் மொழி மலையாளம். தென்னைச் சாகுபடியும், நார் உற்பத்தியும் இங்கு நடைபெறும் முக்கியமான தொழில்கள். இவை தென் கன்னட மாவட்டத்தின் நிருவாகத்தில் உள்ளன. பரப்பு : 3 சதுர மைல். மக்: 7:043 (1951).

அமுக்கிரா (அசுவகந்தி) சற்றுப் பெரிய சிறு செடி, புதர். அகன்று அண்ட வடிவமான இலையுள்ளது. கொத்துக் கொத்தாகப் பூ இருக்கும். சிறிய

அமுக்கிராச் செடி

1. பூவின் பாகங்கள். 2. கனியின் குறுக்கு வெட்டு (சூல் ஒட்டைச் சுற்றி விதைகள்).

உருண்டையான தக்காளிபோன்ற சிவப்புக் கனி விடும். புல்லி வட்டம் வளர்ந்து ஒரு கூடுபோலக் கனியைச் சுற்றி மூடியிருக்கும். வேர் தடித்துச் சதையுள்ளதாக இருக்கும். பயிரிடாத இடங்களிலும் பாழிடங்களிலும் வயல் வரம்புகளிலும் இது முளைத்திருக்கும். இலையும், விதையும் முக்கியமாக வேரும் மருந்துக்குதவும். அசுவகந்தி லேகியம் புகழ்பெற்ற உடல் வன்மை தரு மருந்து.

குடும்பம் : சோலனேசீ (Solanaceae). இனம்: வைத்தானியா சோம்னிபெரா (Withania somnifera).

அமுதசுரபி மணிமேகலை என்னும் தமிழ் நூலில் சொல்லப்படுகிறது. தென்மதுரையில் கலா நியமத்துள்ள சிந்தாதேவியால் ஆபுத்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வத் தன்மையுள்ள பாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாத அன்னமுடையது. இதைக்கொண்டு ஆபுத்திரன் உயிர்களது பசிப்பிணியைப் போக்கி வந்தான். அவன், வாழ்வோர் யாருமில்லாத மணிபல்லவத் தீவில் சேர்ந்தபோது பிற உயிர்களைக் காக்கும் பாத்திரத்தைக் கொண்டு தன்னுயிரை மட்டும் காக்க விரும்பா தவனாய், அதைக் கோமுகி என்னும் பொய்கையில் விட்டு விட்டு உயிர் துறந்தான். அப்பால் அது அந்தத் தீவுக்கு வந்த மணிமேகலை கையில் சேர்ந்தது. அவள் காவிரிப்பூம்பட்டி னம் வந்து, துறவுக்கோலம் பூண்டு, அதைக் கையிலேந்தி, ஆதிரை என்னும் கற்பிற் சிறந்தவளிடம் முதலிற் பிச்சை ஏற்றனள். அவள், 'உலகமெங்கும் பசிப்பிணி நீங்குக' என அதில் பிச்சை இட்டனள். அதிலிருந்து ஒரு பிடி சோறு வாங்கியுண்டு, காயசண்டிகை என்னும் விஞ்சையர் பெண்ணொருத்தி தனக்கிருந்த தீராப் பசி நோய் தீர்ந்தனள். பின்னர் மணிமேகலை, உலகவறவி யென்னும் ஊரம்பலம் சேர்ந்து, பலருக்கும் பசிப்பிணியைப் போக்கி வந்தாள்.

பாரதக் கதையில், வனவாச காலத்திலே பாண்டவர்கள் தங்களோடிருந்த பன்னீராயிரம் பிராமணர்களுக்கு உணவு கொடுக்கும்படி, கதிரவனாற் கொடுக்கப் பட்ட அட்சய பாத்திரமும் இவ்வகையைச் சேர்ந்ததே.

அமெரிக்க இயற்கை விஞ்ஞானப் பொருட்காட்சிச் சாலை (American Museum of Natural History) நியூயார்க்கில் இருப்பது. உயிரியல் அறிவை வளர்த்தற்கென்று 1869-ல் நிறுவப் பெற்றது. பன்னிரண்டு விஞ்ஞானப் பகுதிகளுள்ளது. பெரிய நூல் நிலையமுண்டு. கல்விப் பகுதியும் வெளியீட்டுப் பகுதியும் உண்டு. ஹேடன் பிளானெட்டேரியம் (Hayden planetarium) என்னும் விண்பொருட் காட்சி நிலையமும் இதன் பார்வையில் நடைபெறுகிறது. இந்தச் சாலையில் பல அரிய பாசில்களும், பறவை, மீன் முதலியவைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இயற்கையாக வாழும் சூழ்நிலைகளில் இருப்பதேபோல் அமைக்கப் பெற்றிருக்கும் காட்சிகள் மிகச் சிறந்தவை. மனிதனுடைய பழஞ்சரிதையை யுணர்த்தும் காட்சிப் பொருள்களும் இருக்கின்றன.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் : இருப்பிடமும் பரப்பும் : இது உலகிலேயே ஒரு மிகப் பெரிய இராச்சியம் ; பரப்பு : 35,58,850 சதுர மைல்கள் ; வட அமெரிக்காக் கண்டத்தின் மித சீதோஷ்ண மண்டலத்தில் அமைந்துள்ளது ; வடக்கே கானடாவும்,

பிளாரிடா ஆறு

உதவி : அ. ஐ. நா. செய்தி இலாகா, சென்னை.

தெற்கே மெக்சிகோவும், லத்தீன் அமெரிக்காவும். கீழ்ப்புறம் அட்லான்டிக் சமுத்திரமும், மேல்புறம் பசிபிக் சமுத்திரமும் உள்ளன.