பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

119

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

லாகக் கொண்டிருந்தனர். வடக்கேயிருந்த குடியேற்றங்கள் சிறிய அளவில் சாகுபடி செய்து வந்தன ; தென் குடியேற்றங்கள், புகையிலை, அவுரி, நெல் முதலியன சாகுபடி செய்வதற்கான பெரிய பண்ணைகள் ஏற்படுத்தி வந்தன. வடக்கே ஒரு பண்ணையின் பரப்பு சராசரி 100 ஏக்கர் ; தெற்கே 5,000 ஏக்கர். நெய்தல், தூற்றல், செருப்புத் தைத்தல், இரும்பு உருக்குதல், மரம் வெட்டல், காகிதம் செய்தல், கண்ணாடி செய்தல் முதலிய அடிப்படைக் கைத்தொழில்கள் அக்காலத்தில் குடியேறியவர்கள் செய்துவந்த தொழில்கள். அவர்களின் எண்ணிக்கைக் குறைவால் தொழிலாளிப் பஞ்சம் இருந்து வந்தது. ஆகையால் அடிமைகளை இறக்குமதி செய்யும் பழக்கம் ஏற்பட்டது. இவ்வடிமை - வியாபாரத்தில் ஸ்பானிய, போர்ச்சுகேசிய வியாபாரிகளோடு ஆங்கில நாட்டு டிரேக், ராலி முதலியவர்கள் போட்டியிட்டனர். போக்குவரத்துச் சாதனக் குறைவால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்த பெரிய ஆறுகளையும் ஏரிகளையுமே அவர்கள் போக்குவரத்துச் சாதனங்களாகக் கொள்ளவேண்டியிருந்தது. மீன், மரம், புகையிலை, அரிசி, மிருகங்களின் மென்மயிர் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன ; கம்பளம், இரும்பு, சாராயம், பழம், மற்றும் பல செய்தொழிற் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பெரும்பான்மை வியாபாரம் இங்கிலாந்தோடுதான் நடைபெற்றது. ஆனால் இங்கிலாந்தின் காப்புவரிக் கொள்கைகள் குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே மனவருத்தத்தையுண்டாக்கின, 1624 லிருந்து குடியேற்ற நாடுகளுக்கு வியாபாரச் சுதந்திரம் இருந்தபோதிலும், பிற்காலத்தில் இங்கிலாந்து குடியேற்ற நாடுகளின் வியாபாரத்தைப் பாதிக்கக்கூடிய பல சட்டங்களை யியற்றிற்று. 1624-ல் ஒரு சட்டம் குடியேற்ற நாட்டுப் புகையிலை முழுவதும் இங்கிலாந்திற்கே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்று விதித்தது. இன்னும் பல சட்டங்கள் குடியேற்ற நாட்டு வியாபாரத்தைப் பெரிதும் பாதித்தன. இங்கிலாந்தில் தொழிற் புரட்சிக்குப் பிறகு இங்கு இச்சட்டங்கள் மிகவும் வன்மையோடு அமல் செய்யப்பட்டன.

சுதந்திரப் போர் : குடியேறியவர்கள் இவ்வகையான இடையூறுகளைப் பொருட்படுத்தவில்லை. சுதந்திரத்தை விரும்பிக் கடல்கடந்து வந்து, புது நாடுகளிற் குடியேறியவர்களா யிருந்ததும், பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உண்டாகும் சட்டங்களை மீறுவதற்குப் போதிய வசதி இருந்த்தும், பிரெஞ்சு செவ்விந்தியப் போட்டிகளும் அவர்கள் அவ்விடையூறுகளைப் பொருட்படுத்தாதற்குக் காரணங்களாகும். ஆனால் ஏழாண்டுப் போரின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சி வடஅமெரிக்காவில் நன்கு ஊன்றிக்கொண்டு, குடியேற்ற மக்களிடமிருந்து நாட்டின் தற்காப்புச் செலவில் ஒரு பகுதியை வரியாக வசூல் செய்ய விரும்பியது அவர்களுடைய ஆத்திரத்தைக் கிளப்பியது. சில பொருள்கள் இங்கிலாந்திற்கே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும், பிரெஞ்சு மேற்கிந்திய நாடுகளோடு வியாபாரம் செய்யவே கூடாது என்றும் 1764-ல் சட்டம் ஏற்பட்டது; வரி வசூல் செய்வதற்காகவே முத்திரைச் சட்டம் ஒன்று 1765-ல் இயற்றப்பட்டது. 1766-ல் இச்சட்டம் மாற்றப்பட்டதாயினும், பிரிட்டிஷ் பார்லிமென்டிற்குக் குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக்கும் உரிமையுண்டு என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. மக்களின் தீவிரக் கிளர்ச்சியால் தேயிலை ஒன்றைத் தவிர மற்றப் பொருள்கள் மீது விதித்திருந்த வரிகள் நீக்கப்பட்டன. ஆயினும் பார்லிமென்டின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கெனவே தேயிலை வரி நீக்கப்படாமலிருந்தது. குடியேற்றக்காரர்களுடைய கோரிக்கை பூர்த்தி செய்ய இங்கிலாந்து விரும்பினும், அவர்கள் மேலும் மேலும் கிளர்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டது ; அமெரிக்கப் பொருளாதார வாழ்க்கை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வந்தது. அரசாங்கம் பலாத்காரத்தைக் கையாண்டபோது குடியேறியவர்கள் பிரிட்டிஷ் சரக்குகளைப் பகிஷ்காரம் செய்யத் தொடங்கினர். 'போஸ்ட்டன் தேநீர் விருந்து' அமெரிக்க-பிரிட்டிஷ் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ; போரின் முடிவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தோன்றின.

சுதந்திரத்திற்குப் பின் : அரசியல் கநந்திரம் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளித்தது. மற்ற நாடுகளோடு நேச உறவு ஏற்பட்டதால் வியாபாரமும் வாணிபமும் தழைத்தன; விவசாயமும் கைத்தொழிலும் முன்னேறின. 1808க்குப் பிறகே அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறத் தொடங்கின. இதற்குப் பிரிட்டிஷ் யுத்தமும், நெப்போலியப் போர்களும் முக்கிய காரணங்கள் எனலாம். கைத்தொழிலில் சுயதேவைப் பூர்த்தி நிலையும், மக்கள் தொகை வளர்ச்சியும், நகரங்களின் பெருக்கமும், வரவரத் தோன்றலாயின. 1790-ல் 39 இலட்சமாயிருந்த மக்கள் தொகை 1810-ல் 72 இலட்சமாக வளர்ந்து விட்டது.

1784க்கும் 1820க்கும் இடையே வரி வசூலுக்காகவும் பொதுக் கடனைத் தீர்ப்பதற்கும் நில விற்பனை மேற்கொள்ளப்பட்டது. 1820க்குப் பிறகு நாட்டு முன்னேற்றத்தைக் கருதிய விவசாயக் கொள்கை ஏற்பட்டது. வட குடியேற்றங்களில் விவசாயம் உயர்தரமான முறையில் நடைபெற்றது. சொந்தப் பண்ணைகளும் கூலிக்காரர்களைக்கொண்டு நடத்தப்பெறும் பண்ணைகளும் அங்கு அதிகம். தென் குடியேற்றங்களில் அடிமைகளைக்கொண்டு நடத்தப்படும் பெரிய பண்ணைகள் இருந்தன. இங்குக் கரும்பு, புகையிலை, பருத்தி, நெல் முதலியன பயிராக்கப்பட்டன. விவசாயக் கூட்டுறவு சங்கங்களும் எந்திரச் சாதனங்களும் அமெரிக்க வேளாண்மையில் பெருத்த மாறுதல்களை யுண்டாக்கின. கைத்தொழிலில் முன்னேற்றமடைந்த ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து கச்சாப் பொருள்களையும் உணவுப்பொருள்களையும் மேலும் எதிர்நோக்கத் தொடங்கிற்று. அமெரிக்காவில் கைத்தொழிற் புரட்சி சுதந்திரப் போருக்குப் பிறகு ஆரம்பித்தது. அந்நாட்டின் அளவற்ற கச்சாப் பொருள் வசதி அமெரிக்காவைக் கைத்தொழில் நாடுகளின் முன்னணிக்குக் கொண்டுவந்து விட்டது. மிகை வரிகளும், தடைசெய்யும் பழக்க வழக்கங்களும் இல்லாமையோடு, வேறு கைத்தொழில் - நாடுகளினுடைய போட்டியின்மையும் வாணிபக் காப்புக் கொள்கையும் சேர்ந்து, அமெரிக்காவின் கைத்தொழில் முன்னேற்றத்துக்கு உதவின. கைத்தொழில் முன்னேற்றமடைந்த வடஇராச்சியங்கள் காப்பு வரிக் கொள்கையை விரும்பின; விவசாய முன்னேற்றமடைந்த தென்னாடுகள் காப்புக் கொள்கையை எதிர்த்தன. இக்கொள்கை வேறுபாடு உள்நாட்டு யுத்தம் முடியும்வரை இருந்து வந்தது.

சுதந்திரம் அடைந்த பிறகு கூட்டாட்சி அரசாங்கமும், இராச்சிய அரசாங்கங்களும், உள்நாட்டுப் போக்குவரத்துச் சாதனங்களை விருத்தி செய்தன. சாலைகள் கட்டப்பட்டன; கால்வாய்கள் வெட்டப்பட்டன. 1823-ல் ஈரி கால்வாய் கட்டி முடிந்தது. 1826-ல் முதல் ரெயில்வே அமைக்கப்பட்டது; 1860-ல் அ ஐ. நாடுகளில் 30,626 மைல் ரெயில்வேயும் 25 இலட்சம் டன் நிறையுள்ள கப்பல்களும் இருந்தன.