பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

123

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

செய்யும். ஒவ்வோர் உறுப்பையும் மற்ற இரண்டும் கண்காணிப்பில் வைத்திருந்து, அதன் வரம்பு கடவாமல் காக்கும். குடி உரிமைகளைப் பாதுகாக்க இவ்வித அதிகாரப் பிரிவினை அவசியம் என்பது அமெரிக்க அரசியல் சட்டத்தை அமைத்தவர்களின் நம்பிக்கை.

ஜனாதிபதி (President) : ஜனாதிபதி நிருவாகத் தலைவர். இவர் நான்கு ஆண்டு பதவி வகிக்கிறார். இவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை 21 வயதுவந்த எல்லாக் குடிகளுக்கும் உண்டு. வாக்காளர்கள் ஒரு தேர்தல் சபையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அச்சபை ஜனாதிபதியை நியமிக்கும். 35 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கக் குடிகளே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடலாம்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிகவும் விரிவானவை. நாட்டுச் சைனியங்களுக்கு இவர் பிரதானத் தலைவர். அமெரிக்கத் தூதர்கள், மந்திரிகள், உச்சநீதி மன்ற நீதிபதிகள் முதலிய உயர் உத்தியோகஸ்தர்கள் அனைவரையும் இவர் நியமிக்கிறார். செனெட் சபை இவர் செய்யும் நியமனங்களை ஆமோதிக்க வேண்டும். உச்சநீதி மன்ற நீதிபதிகளைத் தவிரப் பிற உத்தியோகஸ்தர்களை வேலையிலிருந்து இவர் நீக்கலாம். குற்றவாளிகளை மன்னிக்கும் சிறப்புரிமை இவருக்கு உண்டு.

கூட்டாட்சி நிருவாகம் இராச்சிய இலாகா (Depart: ment of State), பாதுகாப்பு, உள்நாடு, வியாபாரம், தொழில், விவசாயம் முதலிய பத்து இலாகாக்களை உடையது. இவற்றின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒரு மந்திரி சபையாக இருந்து வருகின்றனர். 'காபினெட்' என்று இச்சபையைக் குறிப்பது வழக்கம். ஆனால் பிரிட்டன், பிரான்சு போன்ற பார்லிமென்டு அரசாங்க முறையைப் பின்பற்றும் நாடுகளில் மந்திரி சபைகளுக்குள்ள நிருவாக அதிகாரங்கள் இச்சபைக்கில்லை. ஜனாதிபதி இச் சபையாரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் வீதி கிடையாது. அவர்களுடைய ஆலோசனையைக் கேட்கவேண்டும் என்றுகூட நிபந்தனை இல்லை. நிருவாகத் தனிப்பொறுப்பு ஜனாதிபதியைச் சேர்ந்தது. அவருடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஆலோசனையாளர்கள், நடந்து கொள்ளவேண்டும்.

சென்ற நூற்றைம்பது ஆண்டுகளில் ஜனாதிபதியின் அதிகாரம் வளர்ச்சியடைந்துள்ளது. யுத்த காலங்களில் ஜனாதிபதி சர்வாதிகாரியாக விளங்குகிறார். அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்த காலத்தில் ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லின்கனும், முதல் உலக யுத்த காலத்தில் ஜனாதிபதியாயிருந்த வில்சனும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் ஜனாதிபதியாயிருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டும் யுத்த காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு ஒரு வரம்பில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியிலும் அவருடைய அதிகாரம் வேண்டிய அளவுக்குப் பெருகுவதை ரூஸ்வெல்ட்டின் ஜனாதிபத்திய காலத்தில் காணலாம். மற்றைக் காலங்களில் நிருவாகம் தவிரச் சட்டங்கள் செய்வதிலும் ஜனாதிபதி முக்கியமான பாகத்தை வகிக்கிறார். ஜனாதிபதியைச் சர்வாதிகாரி என்று கூற முடியாது. எனினும் காங்கிரசின் ஒத்துழைப்பும், உச்சநீதி மன்றத்தின் ஆமோதிப்பும் இல்லாமல் நீண்டகாலம் எவ்விதமான அதிகாரத்தையும் செலுத்த இயலாது.

காங்கிரசு கூட்டாட்சியின் சட்டசபை, செனெட், பிரதிநிதிகள் சபை என்னும் இரண்டு சபை கொண்டது.

செனெட் (Senate) உயர் சபை. இராச்சியங்களுக்கு இதில் சமமான பிரதிநிதித்துவம் உண்டு. பெரிதாயினும், சிறிதாயினும் ஒவ்வொரு இராச்சியமும் இச்சபைக்கு இரண்டு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளது. இச்சபையின் மொத்த அங்கத்தினர்கள் 96 பேர். இவர்களுள் 'மூன்றில் ஒரு பங்கினரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இராச்சியமெல்லாம் ஒரே தொகுதி. ஒவ்வோர் அங்கத்தினரும் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கிறார்.

அமெரிக்க அரசியல் சட்டத்தில் செனெட் மிக முக்கியமான நிலைமை வகிக்கிறது. நிதி சம்பந்தமான மசோதாக்கள் தவிர, மற்ற எல்லா மசோதாக்களையும் நிறைவேற்றுவதில் கீழ்ச்சபையோடு சமமான அதிகாரம் இதற்கு உண்டு. நிதி சம்பந்தமான மசோதாக்களையும் திருத்தும் உரிமையை இச்சபை பெற்றிருக்கிறது. நிருவாகத்திலும் இச்சபைக்கு ஓரளவு பங்குண்டு. ஜனாதிபதி பிற தேசங்களுடன் செய்யும் உடன்படிக்கைகளையும், பல உத்தியோகங்களுக்குச் செய்யும் நியமனங்களையும் இச்சபை மூன்றில் இரு பங்கு வாக்குக்களுடன் ஆமோதிக்க வேண்டும், மேலும் ஜனாதிபதியையும் பிற உயர்ந்த உத்தியோகஸ்தர்களையும் விசாரிக்கும் ஓர் உயர் நீதி சபையாகவும் இருந்து வருகிறது.

பிரதிநிதிகள் சபை (House of Representatives) : இது 435 அங்கத்தினர்களைக் கொண்டது. சனத்தொகைக்குத் தக்கவாறு இராச்சியங்களுக்கு இதில் ஸ்தானங்கள் உண்டு. ஒவ்வோர் அங்கத்தினரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் தொகுதிகளாக நாடு முழுவதும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இராச்சியச் சட்டசபை அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள வாக்காளர்கள் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள், சாதி, நிறம், பணடைய அடிமை நிலை முதலிய எக்காரணம் பற்றியும் யாருக்கும் வாக்குரிமையை மறுக்கக் கூடாது என்று அரசியல் சட்டத்தில் கண்டுள்ளது. எனினும் தெற்கு இராச்சியங்களில் பல சாக்குகளை வைத்துக்கொண்டு ஒரு கோடி நீக்ரோ சாதியினருக்கு வாக்குரிமை இல்லாமல் செய்திருக்கின்றனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வாக்குரிமையுண்டு. பிரதிநிதிகளாக விரும்புவோர் 25 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கக் குடிகளாக இருக்கவேண்டும். மேலும் தங்கள் தேர்தல் தொகுதிகளில் வாழ்பவர்களாயும் இருக்கவேண்டும். பிரதிநிதிகள் சபைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

அரசியல் அமைப்பின்படி காங்கிரசு ஆண்டிற்கு ஒரு முறையாவது கூடவேண்டும். சட்டசபைகள், ஆண்டில் ஒன்பது மாதங்கள்வரை நீடித்திருப்பது வழக்கம். மேல் சபைத் தலைவர் உபஜனாதிபதி ; கீழ்ச்சபையின் தலைவர் அச்சபையார் தேர்ந்தெடுக்கும் ஒரு சபாநாயகர் (Speaker). இரு சபைகளிலும் பிரேரேபிக்கப்படும் மசோதாக்களைப் பரிசீலனை செய்யப் பல கமிட்டிகள் உண்டு. கமிட்டிகள் பரிசீலனை செய்து சிபார்சுகளோடு அனுப்பும் மசோதாக்களையே சட்ட சபைகள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு மசோதாவும் மும்முறை ஆலோசிக்கப்படும். இரண்டு சபைகளும் ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பெற்றபின் சட்டங்களாகும். ஜனாதிபதி இவ்வாறு நிறைவேறிய மசோதாவிற்குத் தம் சம்மதத்தை மறுத்தால், சட்ட சபைகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குக்களால் மறுபடியும் அம்மசோதாவை நிறைவேற்றினால் ஜனாதிபதியின் சம்மதமின்றியே அது சட்டமாகும். ஜனாதிபதியின் சம்மதத்தை மீறிக் காங்சிரசு இவ்வாறு சட்டங்களைச் செய்வது அசாதாரணம். காங்கிரசில் அங்கத்தினர்களுக்கும் முழு வாக்குரிமை-