பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

127

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

சென்ற ஐம்பது ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பல இராச்சியங்களில் கட்சிகளுடைய அமைப்பு, நடைமுறை, சட்டசபைக்கும் பல உத்தியோகங்களுக்கும் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவோரைத் தேர்ந்தெடுக்கும் முறை முதலியவற்றைப்பற்றி இராச்சியச் சட்டசபைகள் பல சட்டங்களை இயற்றி, நிபந்தனைகளையும் விதிகளையும் செய்துள்ளன. தேர்தல் செலவுகள், கட்சி நிதிகளுக்குப் பணம் சேர்த்தல், தேர்தல்களை ஒழுங்காக நடத்துதல் முதலியவை குறித்தும் சட்டங்கள் செய்துள்ளன. இவ்வகைச் சீர்திருத்தங்களின் பயனாக, அரசியல் கட்சிகளை ஒரு சிலர் கைப்பற்றி ஆள்வது கடினமான காரியமாகியுள்ளது. அரசியல் கட்சிகளை அவற்றின் அங்கத்தினர்கள் ஜனநாயக வழிகளில் நடத்துவது சாத்தியமாகியுள்ளது. நா. ஸ்ரீ. கல்வி : கல்வி தருவது அறிவு வளர்ப்பதற்காக மட்டுமன்று, சமுதாய நலம் தேடுவதற்காகவுமாகும் என்பதே அமெரிக்கர்களுடைய குறிக்கோள். அத்தகைய நோக்கத்துடன் தரும் கல்வியே சுதந்திரத்தைப் பாதுகாக்கவல்லது என்று அமெரிக்கச் சுதந்திர சமுதாயத்தை அமைத்தவர்களுள் ஒருவரான ஜெபர்சன் கூறினார்.

ஆயினும் அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் கல்வி பற்றிய குறிப்பே கிடையாது. அதற்குக் காரணம் பாடசாலைகளை ஏற்படுத்துவதும், நிருவகிப்பதும் அமெரிக்க ஐக்கியத்தில் சேர்ந்துள்ள நாடுகளின் பொறுப்பாக எண்ணப்படுவதேயாகும். ஆகவே 48 இராச்சியங்களும் தனித்தனியே கட்டாயக் கல்விச் சட்டம் இயற்றிக்கொண்டு, பாடசாலைகளை அமைத்து, நிறம், மதம், பால் முதலிய வேறுபாடு எதுவுமின்றி ஆரம்பக் கல்வி அளித்து வருகின்றன. இந்தப் பாடசாலைகளுக்கான செலவை நாட்டு அரசாங்கமோ அல்லது தலத் தாபனங்களோ செய்து வருகின்றன.

ஆதியில் கிழக்குக்கரையில் மட்டுமே குடியேற்ற நாடுகள் அமைந்திருந்தன. பின்னரே மேற்குக்கரை வரையிலும் நாடுகள் உண்டாயின. இந்த நாடுகளில் குடியேறிய மக்கள் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். அத்துடன் இவர்களுள் கிழக்குக்கரை மக்கள் கைத்தொழிலிலும் தென்பகுதிமக்கள் வேளாண்மையிலும் ஈடுபட்டவர்கள். இவ்வாறு பல்வேறு நாட்டவராகவும், பல்வேறு தொழிலுடையவராகவுமிருந்த போதிலும் இவர்களை ஒரே சமுதாயத்தினராகச் செய்தது கல்வியேயாகும்.

இப்பொழுது அமெரிக்காவிலுள்ள வயது வந்தவர் 820 இலட்சம் பேரில் 16 இலட்சம் பேரே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். மற்றவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஆரம்பக் கல்வியும், மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் உயர்நிலைக் கல்வியும் பெற்றவர். ஒரு கோடிப் பேர் கல்லூரிக் கல்வி பெற்றவராவர்.

அமெரிக்காவிலுள்ள பாடசாலைகள் பலதிறப்பட்டன. அவை அனைத்தும் ஒரேவிதமான முறையில் அமைந்துள்ளனவல்ல. சில அரசாங்கம் நடத்தும் இலவசப் பள்ளிகள் ; சில தலத் தாபனப் பாடசாலைகள் ; சில பொது மக்கள் நிறுவியுள்ளவை.

ஆயினும் அமெரிக்கா தரும் கல்வியில் ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி என நான்கு நிலைகள் காணப்படுகின்றன. அமெரிக்கக் குழந்தைகள் ஆறாவது வயதில் படிக்கத் தொடங்கி, ஆரம்பப் பாடசாலையிலும், உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றபின், கல்லூரிக் கல்வி பயில்கின்றனர். கல்லூரிக் கல்வி முடிந்தபின், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற தொழில்களுக்கு வேண்டிய கல்வியைக் கற்கின்றனர்.

இத்தகைய பள்ளிகள் தவிர, குழந்தைகளுக்காகக் குழந்தைப் பள்ளிகளும், தொழிற் பள்ளிகள் போன்ற பலவகையான பள்ளிகளும் உள. மக்களிடம் பெற்ற வரியைக் கொண்டு நடைபெறும் பாடசாலைகளில் மத போதனை கூடாது என்று எல்லா நாடுகளும் சட்டம் இயற்றி யிருக்கின்றன.

அமெரிக்கக் கல்வி முறையில் அறிஞர்களிடையே இரண்டுவிதமான அடிநிலைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. மக்கள் தம் வாழ்வின் புதுப் புதுத் துறைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் புதுப் புதுப் பாடத்திட்டங்கள் அமைத்தல் அவசியம் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதைவிட, விஷயங்களை ஆராய்ந்து முடிவு செய்யக்கூடிய சிந்தனா சக்திப் பயிற்சி அளித்தலே முக்கியம் என்று மற்ற அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர்கள் முன்னேற்ற வாதிகள் என்று அழைக்கப்படுவர். இந்த இரண்டு கருத்துக்களும் முரண்பட்டனவாக இருப்பினும், அவை இரண்டும் அமெரிக்கக் கல்வி முறையில் ஒருவாறு இணைந்தே காணப்படுகின்றன.

அமெரிக்காவில் எங்குப் பார்த்தாலும் பொதுப் பாடசாலைகள் உள. சிறுவர்கள் கட்டாயமாகப் பதினாறு வயது வரையில் பாடசாலைகளில் படித்தாக வேண்டும். கல்வி இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. அதனால் அங்கு எழுத்தறிவின்மை என்பது பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

அமெரிக்காவில் குழந்தைகள் மூன்று வயதளவில் குழந்தைப் பள்ளிகளில் பலர் ஒன்று சேர்ந்தும், ஒரே விளையாட்டுப் பொருளைப் பலர் பொதுவாக வைத்துக் கொண்டும் விளையாடக் கற்கிறார்கள். ஐந்து வயதில் குழந்தைத் தோட்டப் பள்ளியில் சேர்கிறார்கள். அங்கும் விளையாட்டே பிரதானம். அடுத்த ஆண்டில் ஆரம்பக் கல்வி பெறத் தொடங்குகிறார்கள்.

குழந்தைகள் செயல் மூலமே கல்வி பெறுகிறார்கள். இதுவே முன்னேற்ற முறைக் கல்வி எனப்பெறும். எல்லாப் பாடசாலைகளிலும் இந்த அமிசம் காணப்படினும், எழுதப் படிக்கவும் கற்றுக் கொடுக்கிறார்கள். அத்துடன் பிறர் உரிமைகளை மதித்து நடக்கவும், பொறுப்பு ஏற்றுக்கொள்ளவும், மற்ற மாணவர்களுடன் ஒத்துழைக்கவும் மாணவர் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்காகத் தயார் செய்யப்பெறும் பத்திரிகைகள் வாயிலாக அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் நடைபெறும் செய்திகளையெல்லாம் அறிந்துகொள்கிறார்கள். சுயாட்சி முறையிலும் பயிற்சி பெறுகின்றனர்.

அமெரிக்கக் கல்வி நிபுணர்களின் குறிக்கோள் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெறவேண்டும் என்பதேயாகும். சிறுவர்கள் ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்விபெற்ற பின்னர், மூன்று ஆண்டுகள் நடுநிலைப் பள்ளியிலும், மூன்று ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயிலுகின்றனர்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடிந்த பின்னர், சிலர் கலைகளோ தொழிலோ கற்பிக்கும் ஆரம்பக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்துத் தங்கள் கல்வியை முடித்துக்கொள்கிறார்கள். மிகுந்த திறமையுடைய மாணவர்கள் உயர்நிலைக் கல்லூரியிலோ, அல்லது பல்கலைக் கழகத்திலோ சேர்கின்றனர். பெரும்பாலும் கல்லூரிகள் அனைத்திலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே கல்வி பெறுகின்றனர். நான்கு ஆண்டுகள்

படித்தபின் பட்டம் பெறுகிறார்கள்.