பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைதி

134

அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம்


அமைதி (Peace) என்பது போர், சண்டை அல்லது சச்சரவு இல்லாத நிலைமையைக் குறிக்கும். போரும் இன்றி, அமைதியும் இன்றி இருக்கக்கூடிய நிலையும் உண்டாகையால், உலகில் எப்போது அமைதி நிலவுகிறதென்று தெளிவாகச் சொல்ல முடியாது. உலகம் அறிய இராச்சிய உறவு முறியாமல் இருக்கும்வரை இரண்டு நாடுகளுக்கிடையே அமைதி நிலவுவதாகக் கொள்ளலாம். இரண்டு நாடுகளின் படைகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட்டிருக்கும்போது அந்நாடுகளுக்கிடையே அமைதி யில்லையென்றும் கூறலாம். இவ்வாறின்றி, வியாபாரப் போட்டியையும் ஒருவகைப் போராகக் கொள்வாருமுண்டு. பிரசாரமும் எதிர்ப் பிரசாரமும் ஒருவகையான போர்ச் சூழ்நிலையை உண்டாக்குகின்றனவாயினும், அமைதி குலைந்து போர் தொடங்கிவிட்டதாகக் கருதுவதற்கு இருநாட்டுப் படைகளுக்கிடையே கைகலப்பு நிகழவேண்டும். போர் நிகழாமல் அமைதி நிலவுவதற்குப் பல முறைகள் ஆராயப்பட்டு வந்துள்ளன. வல்லரசுகளுக்கிடையே ஒரு சமநிலை இருந்தால் ஒன்றையொன்று விஞ்ச முயலாதாகையால் இச்சமநிலை கெடாமல் பார்த்து வரவேண்டும் என்பது ஒரு பழைய முறை. சர்வதேச சங்கம், ஐ. நா. ஸ்தாபனம் முதலிய சங்கங்கள் வாயிலாகப் பல நாடுகள் சேர்ந்து போரைத் தடுக்க முற்படுவது ஒரு முறை. ஆயினும் அம்முறை இதுவரை பயனளிக்கவில்லை. ஐ. நா. ஸ்தாபனத்தில் காணப்படும் கருத்து வேறுபாடு அரசியல் உலகை இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறது.

அமைதியை நிலைநாட்டுவதற்கே போரை மேற்கொள்வதாகச் சொல்பவர்களும், அமைதிக்காகப் பிற ஆதார உரிமைகளை விட்டுக்கொடுத்தல் கோழைத்தனமும் கடமை தவறுதலுமாகும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆகையால் அமைதி பலமுறை குலைகிறது. 'எவ்வாறாயினும் அமைதி' என்பதைச் சிலர் 'வல்லரசுகளின் பேராசைக்கு இடங் கொடுப்பதற்குச் சமம்' என்று கருதுவதால் அவர்கள் அமைதியைவிட வேறு குறிக்கோள்களை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பது தெளிவு. அன்றியும் தேசிய ஆதிபத்தியக் கொள்கை என்பது தன்னாட்டைத் தன் கருத்துப்படி ஆளப் பூரண உரிமை ஒவ்வொரு நாட்டிற்கும் அளிப்பதேயாகையாலும், நாட்டிற்கு நாடு ஆட்சிக் கருத்துக்கள் மாறுவதாலும் இக்கருத்து வேறுபாடு போருக்கு அடிகோலுகிறது. 1899லும், 1907லும் ஹேகில் நடந்த அமைதி மாநாடுகள் போரை யொழித்து அமைதியை நிலைநாட்ட முயன்றன. ஆயினும் இன்னும் உலகில் போர்கள் நடந்து வருவதால், நிரந்தர அமைதிக்கான வழியொன்றும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது தெளிவு.

அமைதி: பூமிமீது வாயுமண்டல அழுத்தம் மிகுதியாயுள்ள சில இடங்களில் உயரத்தில் உள்ள காற்றுக் கீழிறங்கி நாற்புறமும் பரவுவதால் அவ்விடங்களில் அதிகக் காற்றின்றி அமைதியாக இருக்கும். இதைப் பூகோளவியலில் 'அமைதி' என்னும் சொல்லால் குறிப்பர். அமைதி கடக அமைதி, மகர அமைதி என இருவகைப்படும். கடகரேகைப் பிரதேசத்துக்கு மேலுள்ள காற்றுக் கீழே இறங்கி வடக்கேயும் தெற்கேயும் பரவுவதால் அங்கு உண்டாகும் அமைதி கடக அமைதி எனப்படும். இவ்வாறே மகரரேகைப் பிரதேசத்தில் உண்டாகும் அமைதி மகர அமைதி எனப்படும்.


அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம் (Constitutional Government) : கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில், அரசாங்க முறைகளைப் பற்றித் தாமியற்றிய அரசியல் என்னும் நூலில், 'பாலிடி' என்று அவர் அழைக்கும் சட்ட வரம்புக் குட்பட்ட மக்கள் ஆட்சியை மிகச் சிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ”மக்களாட்சி என்பது பலராட்சி; அதாவது கும்பலாட்சி; இதை ஆட்சியேயில்லாத நிலை என்று கூறலாம்; இக்குழப்பத்தினின்று அமைதியை நிலைநாட்டக்கூடிய வல்லான் ஒருவன் வந்து தனியாட்சியை நிறுவுவான் ; இவ்வாறாக மாறிமாறி வந்து கொண்டிருக்கும் அரசியல் ஏற்பாட்டை நிலைப்படுத்த, அமைப்பிற்குட்பட்ட அரசாங்கமே சிறந்தது” என்று அவர் கருதினார். எதிலும் தீவிரக் கொள்கைகளை மறுத்து, நடுநிலையையே போற்றிய அவ்வறிஞர் 'இவ்வரசாங்கம் நடுத்தர வகுப்பினர் ஆட்சியாகுமாதலின் அதுவே விரும்பத் தக்கது' என்றும் கூறுகிறார்.

அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம் எனின், சட்டத்திற்கு அடங்கி நடத்தப்படும் ஆட்சி என்பதே பொருள்; அதாவது அரசாங்கம், குடிமக்கள் ஆகிய இருபாலரும் ஒருநாளும் புறக்கணிக்காமல் மதித்து, அதற்கு அடங்கி ஒழுக வேண்டிய மேலான சட்டமோ, சம்பிரதாயமோ உண்டு. அதற்குட்பட்டு நிகழும் ஆட்சியே மிக உயர்ந்தது என்பது கருத்து. தனியொருவர் அல்லது சிலர் அல்லது பலர் என்னும் யாருடைய தனி இச்சைப்படியும் நடத்தப்படாமல் சமூகத்தின் பொது மரபான சட்டத்தின் எல்லைக்குள் நடத்தப்படும் ஆட்சியே சிறந்தது. வரம்பிற்கும் சட்டத்திற்கும் கட்டுப்படாத எதேச்சாதிகாரம் பொதுமக்களால் நடத்தப்பெறின், அது மற்ற எந்த ஆட்சிமுறையைக் காட்டிலும் இழிந்தது என்பதில் ஐயமில்லை.

அமைப்பிற்கு அடங்கிய முடியாட்சி என்னும் கருத்தைவிட, அமைப்பிற்கடங்கிய ஆட்சி ஓரளவு விரிவானது. முடியாட்சியைச் சில வரம்புகளுக்குட்படுத்த வேண்டும் என்னும் விருப்பம் ஒரு மன்னனிடம் ஏற்படும் அவநம்பிக்கையினால் தோன்றலாம்; எவ்வகை யாட்சியீலும் யாரும் வரம்புமீறி நடக்க இயலாதவாறு சம்பிரதாயங்கள் வளர்ந்து, சட்டங்கள் இயற்றப்படுவதால் இக்கோட்பாடு அதனினும் உயர்ந்ததொன்றாம். ஜனநாயகம் வரம்பு கடத்தலால் பெருந்தீமை விளையும் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உண்டு.

படைமானிய ஸ்தாபனங்கள் நிலவிவந்த இடைக்கால முறைகளைப் பின்பற்றியே அமைப்பிற்குட்பட்ட ஆட்சி மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வந்தது. இங்கிலாந்தில் இடையீடு இல்லாமல் அரசியல் அமைப்பு உறுதியுடன் சட்டத்தை ஒட்டியும் தாங்கியும் வளர்ந்து வந்துள்ளது. இதற்கும் பிரான்சில் புரட்சிவாயிலாக ஏற்பட்ட ஜனநாயக ஆட்சியின் பரிணாமத்திற்குமுள்ள வேறுபாடுகள் காணத்தக்கவை.

அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம் சம்பிரதாயங்களை அடியோடு தகர்க்கும் எந்த மாறுதல்களையும் மேற்கொள்ளாது; அவ்வப்போது பதவியில் இருப்பவர்களுடைய எண்ணத்தின்படி இயங்காமல், எல்லாவற்றிற்கும் மேம்பட்ட சட்டத்தையே பின்பற்றும். இதனால் அமைப்பாட்சி, தீவிர ஜனநாயகத்தினின்றும் வேறுபட்டது என்பது புலனாகும்.

சுதந்திரத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்துள்ள மக்களின் ஒருவகை நிலையான அரசியல் ஏற்பாடுகளைச் சட்டபூர்வமாக நிலைநாட்டி, அவ்வப்போது தேவையான மாறுதல்களைச் சட்டப்படியே செய்து கொள்வதற்கு வேண்டிய பொறுமையை யூட்டுவதே அமைப்பிற்குட்பட்ட அரசாங்கத்தின் தனிப்பண்பு. ரா. பா.