பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயர்லாந்து

136

அயர்லாந்து

வரலாறு : இந்நாட்டின் தொடக்க வரலாற்றைப்பற்றி நமக்கு அதிகமான விவரங்கள் தெரியவில்லை. இங்கு முதலில் வாழ்ந்துவந்த மக்கள் 'கெல்ட்' இனத்தைச் சேர்ந்தவர்கள். 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் அவர்களிடைப் பரவியது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்தைக் கடல் வழியாகப் பலமுறை தாக்கிவந்த டேனர்கள் அயர்லாந்தையும் தாக்கி, அங்கிருந்த அரசர்களுடன் சண்டையிட்டார்கள். 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவ்வரசர்கள் ஒன்று சேர்ந்து, கிளோன்டார்ப் (Clontarf) போரில் டேனர்களை முறியடித்தனர். கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் இடையில் அயர்லாந்து அரசர்களுக்குள் தகராறு ஏற்படவே, அச்சமயம் இங்கிலாந்தை ஆண்டுவந்த 11-ம் ஹென்ரியின் உதவியை அவர்களில் சிலர் நாடினர். ஹென்ரி தமது பிரபுக்களில் விரும்பியவர் போய் உதவி செய்யட்டுமென்று கூறிவிட்டார். அவர்களில் முக்கிய மானவர் ரிச்சர்டு டீ கிளேர் என்பவர். அயர்லாந்தில் அவ அதிகாரம் பரவவே, 11-ம் ஹென்ரி அந்நாட்டில் தம் பிரபுக்களே சுயேச்சை பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சி, அயர்லாந்துக்கு ஒருமுறை சென்று, தம்மையே அயர்லாந்தின் தலைவராக அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு ஆங்கிலேயப் பிரபுக்கள் ஆதிக்கம் அயர்லாந்தின் கிழக்கு இடைப்பகுதியில் சில சதுர மைல்களுக்கே பரவியிருந்தது. அப்பிரதேசத்தை 'எல்லை' (The pale) எனக் குறிப்பிட்டு வந்தார்கள். டியூடர் அரசர் VII-ம் ஹென்ரி அயர்லாந்துக்கு அனுப்பிய பிரதிநிதியான சர் எட்வர்டு பாய்னிங்க்ஸ் என்பவர் அயர்லாந்து பார்லிமென்டைக் கூட்டினார் ; சில சட்டங்கள் மூலம் அது தானாகவே இங்கிலீஷ் பார்லிமென்டின் தலைமைக்குப் பணிந்தது. VIII-ம் ஹென்ரி கட்டுக்கடங்காத 'கில்டேர்' என்ற ஒரு ஐரிஷ் பிரபு வமிசத்தவர்களைப் பிடித்துவரச் செய்து, அவர்களைத் தூக்கிலிட்டார். இங்கிலாந்தின் சமயச் சீர்திருத்த மாறுதல்களையும் அயர்லாந்தில் புகுத்தினார். எலிசபெத் ஆட்சியின்போது அயர்லாந்து மக்களும் அவர்கள் தலைவர்களும் மூன்று முறை கலகம் செய்தனர். கடைசிக் கலகம் டைரோன் பிரபுவின் தலைமையில் நடைபெற்றது. அயர்லாந்து மக்களின் கத்தோலிக்க சமயப் பற்றையும், தேசிய உணர்ச்சியையும் வெளிக்காட்டிய இக்கலகம் 1603-ல் ஆங்கிலப் படை வலிமையால் அடக்கப்பட்டது.

1641-ல் பெரியதோர் ஐரிஷ் கலகம் தோன்றி ஆங்கிலேய அரசர் 1-ம் சார்லஸுக்கும் அவருடைய பார்லிமென்டுக்கும் ஏற்கனவே இருந்த மனக்கசப்பை அதிகமாக்கியது. சார்லஸின் இராணி கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவள். அயர்லாந்து மக்களும் கத்தோலிக்க சமயப் பற்றுடையவர்களாகையால் சார்லஸுக்கும் இக்கலகத்துக்கும் சம்பந்தமிருக்க வேண்டுமென்று பார்லிமென்டு தலைவர்கள் முடிவு கட்டினார்கள். இது இங்கிலாந்தின் உள்நாட்டுப் போருக்கு ஓரளவு வழிகோலிய நிகழ்ச்சி. 1-ம் சார்லஸின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் நிறுவப்பட்ட புது அரசாங்கத்தை அயர்லாந்து மக்கள் எதிர்த்ததால் ராணுவத் தலைவர் கிராம்வெல் 1649-50-ல் அயர்லாந்துக்குத் தமது படைகளுடன் சென்று, வெக்ஸ்போர்ட், டிராயிடா (Wexford, Drogheda) முதலிய இடங்களில் பல அயர்லாந்து வீரர்களைக் கொன்று, அயர்லாந்து மக்கள் நிலங்களையும் பெருவாரியாகப் பறிமுதல் செய்து ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். பொதுவாக, அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் பகை நீடித்ததற்குக் காரணங்கள் சமய வேறுபாடு, நிலப்பறிமுதலால் விளைந்த அநீதி, ஆங்கிலேய சாதியினரின் அதிகாரச் செருக்கு முதலியவையாம்.

1688 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புரட்சிக்குப்பின் முடி துறந்த 11-ம் ஜேம்ஸ் தீவிர கத்தோலிக்கரானபடியால் அவருக்கு அயர்லாந்தில் ஆதரவு கிடைத்தது. இங்கிலாந்தின் புதிய அரசர் III-ஆம் வில்லியம் ஒரு படையுடன் அயர்லாந்துக்குப் போய் பாயின் போரில் (Battle of the B 'yne 1690) ஜேம்ஸை முறியடித்தார். சில மாதங்களில் அயர்லாந்து மக்கள் எதிர்ப்பும் ஓய்ந்தது. அயர்லாந்து மக்களிடம் பொறுமை காட்டப்படுமென்று ஆங்கிலேய அரசாங்கம் உறுதி கூறியிருந்தது. ஆயினும் 18ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் வசித்துவந்த பெரும்பாலோரான கத்தோலிக்கர்கள் பல வழிகளில் ஒடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வோட்டுரிமை இல்லை ; உயர் தரக் கல்வி அளிக்கக் கூடாது. அவர்கள் நிலச்சுவான் தார்களாக இருக்க முடியாது. அயர்லாந்தின் தொழில் வளர்ச்சிக்கும் எவ்வளவோ தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் அயர்லாந்து மக்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் பல இடங்களுக்குச் சென்று பிழைத்தனர்.

அமெரிக்கச் சுதந்திரப் போர் நிகழ்ந்தபோது ஆங்கிலேய அரசாங்கம் அயர்லாந்து மக்களுக்குச் சில சலுகைகளைக் காட்டியது. ஆயினும் பிரெஞ்சுப் புரட்சியினால் அயர்லாந்திலும் தீவிர அரசியல் கொள்கைகள் பரவவே, பிரிட்டன் அடக்குமுறையைக் கையாண்டது. 1798-ல் அயர்லாந்தில் பெருங் தேசியக் கலகம் ஏற்பட்டது. ஈவு இரக்கமின்றி, அது ஆங்கிலேயர் படை பலத்தால் நசுக்கப்பட்டது. இச்சமயம் திரட்டப்பட்டிருந்த படைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிரிட்டன் அயர்லாந்து பார்லிமென்டை 1801-ல் ஒரு ஐக்கியச் சட்டம் இயற்றச் செய்தது. அதன்படி பிரிட்டிஷ் பார்லிமென்டில் பிரபுக்கள் சபைக்கு 4 பிஷப்புக்களையும், 28 மற்றப் பிரபுக்களையும், காமன்ஸ் சபைக்கு 100 அங்கத்தினர்களையும் அயர்லாந்து அனுப்ப வேண்டியது. அயர்லாந்துக்குத் தனிப் பார்லிமென்டு இல்லை. இரு நாடுகளுக்குமிடையே தடையிலா வாணிபம் அனுமதிக்கப்பட்டது. கத்தோலிக்கர்களுக்கு 'விடுதலை' அளிப்போமென்று பிரிட்டன் வாக்களித்தது ; ஆனால் அதை நிறைவேற்றவில்லை, தொடக்கத்திலிருந்தே அயர்லாந்து மக்கள் இந்தக் கட்டாய ஐக்கியத்தை வெறுத்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டானியல் ஓ கானெல் என்ற அயர்லாந்து தலைவர் தம் நாட்டு மக்களின் விடுதலைக்காக மிகவும் பாடுபட்டார். பார்லிமென்டுக்கு அயர்லாந்தின் அங்கத்தினர்களிலொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கத்தோலிக்கர் என்ற காரணத்தால் அவர் அச்சபையில் உட்கார முடியவில்லை. கத்தோலிக்கர்களுக்குக் குடி உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமென்றும், ஆங்கிலத் திருச்சபை அயர்லாந்துக்கு அதிகாரத்தோடுகூடிய திருச்சபையாயிருப்பது நியாயமில்லையென்றும், 1801 ஆம் ஆண்டின் ஐக்கியச் சட்டத்தை நீக்க வேண்டுமென்றும் அவர் பல கிளர்ச்சிகள் செய்தார். முதல் கிளர்ச்சி 1829-ல் வெற்றியடைந்தது; கத்தோலிக்கர் பிராட்டெஸ்டென்டுகளுடன் சமஉரிமை பெற்றார்கள். ஆனால் அவருடைய மற்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை. இந்நூற்றாண்டின் பிற்பத்தியில் கிளாட்ஸ்டன் பலமுறை பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தார். அப்பொழுது அயர்லாந்து தலைவர் பார்னெல் ஒரு நிலச்சங்கத்தை ஏற்படுத்தி, அயர்லாந்து விவசாயி-