பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயர்லாந்து

137

அயர்லாந்து

களின் குறைகளை நீக்க முயன்றார். ஆனால் துன்புறுத்து முறைகளைக் கையாள அவர் தயங்கவில்லை. கிளாட்ஸ்டன் சட்ட விரோதமான நடவடிக்கைகளை அடக்கும்படி நேர்ந்தது. ஆயினும் அயர்லாந்து மக்களின் நன்மைக்காகவும் பல சட்டங்களை இயற்றினார். அயர்லாந்தில் பிராட்டெஸ்டென்டு திருச்சபைக்கு அரசாங்கச் சலுகை நின்றது (1867). விவசாயிகள் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகைகளை நிதானித்து நிருணயிக்க நில நீதிமன்றங்களை அவர் ஏற்படுத்தினார் (1881). மற்றும் சில சட்டங்கள் நிலப்பிரச்சினையை இறுதியாகத் தீர்க்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டன. மிராசுதார்கள் நிலங்களை விற்க விரும்பினால் அங்கு வேலை செய்யும் அயர்லாந்துக் குடியானவர்கள் அவைகளை வாங்கிக்கொள்ளலாம் என்பதும் அதற்கென அரசாங்கமே குறைந்த வட்டியில் குடியானவர்களுக்குக் கடன் கொடுத்துதவும் என்பதுமே அவற்றின் சாரம். 1886-ல் அயர்லாந்துக்குச் சுயாட்சி அளித்துவிட கிளாட்ஸ்டன் நிச்சயித்தார். பார்லிமென்டு அவர் மசோதாவை மறுத்தது. அவர் கட்சி இதனால் பிளவுபட்டது. 1893-ல் மீண்டும் ஒரு 'ஐரிஷ் சுயாட்சி மசோதாவைப்' பார்லிமென்டுக்குக் கொணர்ந்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அயர்லாந்து தலைவர்கள் சின்பேன் (Sinfein} எனும் தேசியத் தாபனத்தை நிறுவி, நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு துறைகளில் சீர்ப்படுத்தி உய்ப்பிக்க உழைத்தனர். 1911-ல் இங்கிலாந்து பிரதமர் ஆஸ்க்வித் மற்றொரு ”சுயாட்சி மசோதாவை”ப் பார்லிமென்டுக்குச் சமர்ப்பித்தும் பயனில்லை. அயர்லாந்திலும் புரட்சி மனப்பான்மை வளர்ந்தது. பிரிட்டனின் தொடர்பை நீக்கிக் கொள்ளப் பலர் ஆய்த்தம் செய்தனர். அயர்லாந்தின் வடபகுதியில் பிரிட்டிஷார் சந்ததியில் தோன்றிய பிராட்டெஸ்டென்டு வகுப்பினர் பிரிட்டனுடனுள்ள தொடர்பு போகக்கூடாதென்று கருதினார்கள். உள் நாட்டுப் போர் மூண்டுவிடும் போலிருக்கையில் முதல் உலக யுத்தம் தொடங்கிவிட்டது.

யுத்தத்தின்போது அயர்லாந்தில் குடியரசு குறிக்கோளை விரும்பியவர்கள் பெருங்கிளர்ச்சி செய்து, பிரிட்டனுக்கு நெருக்கடியை மிகுவித்தனர். இவர்களில் முக்கியமான தலைவர் ஈமன் டெவலேரா. 1918 லிருந்து 1920 வரை பிரிட்டன் அடக்குமுறைகள் அனுசரித்தது. கடைசியாக, சமரச வழியைப் பின்பற்றி, பேச்சு வார்த்தைகள் நடத்தி, 1921 டிசம்பர் மாதத்தில் அயர்லாந்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி வடபகுதி தனது பார்லிமென்டை வைத்துக்கொண்டு பிரிட்டனுடன் இணைந்திருந்தது. அயர்லாந்தின் மற்றப் பிரதேசங்கள் ஐரிஷ் சுதந்திர அரசாங்கம் என்ற பெயருடன் குடியேற்ற அந்தஸ்து பெற்றன. இதுவும் ஐரிஷ் தீவிரவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு அவர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வந்து, கடைசியில் 1932-ல் புதுத் திட்டத்தை ஒப்புக்கொண்டார்கள். அவ்வாண்டு டெவலேரா அயர்லாந்தின் பிரதம மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டு, பிரிட்டனுடன் சச்சரவுகளைத் தொடர்ந்து நடத்தினார். அவர் கட்சியின் நோக்கம் பிரிட்டனுடன் சம்பந்தமே கூடாது, அயர்லாந்து ஒரு குடியரசாகத் திகழ வேண்டுமென்பது. 1932-ல் ஆங்கில அரசருக்கு அயர்லாந்து பார்லிமென்டு அங்கத்தினர்கள் விசுவாசப் பிரமாணம் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள். 1932-ல் பிரிவிகவுன்சிலுக்கு அயர்லாந்து அப்பீல்கள் போவது நின்றது. 1936-ல் கவர்னர் ஜெனரல் பதவி, மறைந்தது. 1937-ல் அயர்லாந்தின் பார்லிமென்டு ஒரு புது அரசியல் திட்டத்தை வகுத்து, அயர்லாந்து இனிப் பூரண சுதந்திரம் பெற்ற ஜனநாயக அரசாங்கம் என்று சட்டபூர்வமாகக் கூறிக்கொண்டது.

1932 முதல் 1948 தொடக்கம் வரை டெவலேரா பிரதம மந்திரியாக இருந்தார். இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளெல்லாம் பிரிட்டன் கட்சியில் சேர்ந்து சண்டையிட்டன. ஆனால் அயர்லாந்து சுதந்திர அரசாங்கம் மாத்திரம் நடுநிலைமை வகித்துத் தனிப்பட்டு நின்றது. ஜூன் 1946-ல் டெவலேரா அயர்லாந்து பார்லிமென்டில் அதிகார முறையில் தமது நாட்டின் அந்தஸ்தைப் பின்வரு மாறு விளக்கினார்: “ஏரே (அயர்லாந்து) பூரண சுதந்திரக் குடியரசு. அது பிரிட்டனுடனும் பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டுத் தொகுதியுடனும் பிற அயல்நாடுகளுடன் உள்ள தொடர்பே போன்ற தொடர்புடையது.” ஸ்ரீ. தோ.

அரசியலமைப்பு : 1921ஆம் ஆண்டுப் புரட்சியின் விளைவாக இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையின்படி தென் அயர்லாந்து, ஐரிஷ் சுதந்திர இராச்சியம் என்ற முழுச் சுதந்திரமுள்ள நாடாயிற்று. 1937-ல் பொதுமக்களால் குடியொப்பத்தில் (Referendum) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புதிய அரசியல் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் திட்டமே சிற்சில மாறுதல்களுடன் தற்போதைய ஐரிஷ் அரசியலுக்கு அடிப்படை. இதன்படி தென் அயர்லாந்து சுதந்திர இராச்சிய அந்தஸ்துடன் கூடிய ஜனநாயகக் குடியரசாயிற்று. இந்த அரசியல் திட்டம் நிருவாகத் தொகுதி, சட்டமியற்றும் தொகுதி, நீதித்தொகுதி என்ற மூன்று உறுப்புக்கள் அடங்கியது.

நீருவாக முறை பிரிட்டிஷ் காமன்வெல்த் தேசங்களில் வழங்கும் பார்லிமென்ட் மந்திரிசபை முறையைப் பின்பற்றியதே. நிருவாகத் தலைவருக்கு ஜனாதிபதி என்று பெயர். இவர் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் மக்கள் அனைவரும் வாக்குரிமை அளிப்பதன் மூலம் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் ஏழு ஆண்டு பதவியிலிருப்பார். அரசியலமைப்பின்படி எல்லா நிருவாக சம்பந்தமான நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பேரால்தான் நடைபெறவேண்டி யிருந்தாலும், உண்மையில் நிருவாக அதிகாரம் முழுவதையும் மந்திரி சபையே செலுத்துகிறது. ஜனாதிபதிக்கு இரண்டொரு தனி அதிகாரங்கள் உண்டு. பார்லிமென்டில் இயற்றப்பட்ட எந்தச் சட்டமாவது அரசியல் திட்டத்து ஷரத்துகளுக்கு முரணாக இருக்கிறதென்று அவருக்குத் தோன்றினால், அவர் அந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பி, அம்மன்றத்தின் கருத்தைத் தெரிந்துகொள்ளலாம். மேற்சபையின் பெரும்பான்மையோரும், கீழ்ச்சபையின் மூன்றில் ஒரு பாகம் அங்கத்தினரும் பொது முதன்மை வாய்ந்த ஒருமசோதாவைச் சட்டமாக இயற்ற மறுத்தால், ஜனாதிபதி அப்பிரச்சினையைக் குடியொப்பத்திற்கு அனுப்பலாம். ஜனாதிபதிக்கு அவரது அலுவல்களில் உதவவும், ஆலோசனை கூறவும் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட ஒரு மந்திரிசபை உண்டு. பிரதம மந்திரி சட்டசபையில் பெரும்பான்மைக் கட்சியின் பிரதிநிதி. மந்திரிசபையின் தீர்மானத்தை ஜனாதிபதி சாதாரணமாகப் புறக்கணிக்கக் கூடாது. மந்திரிசபைதான் உண்மையில் எல்லா நிருவாக அதிகாரத்தையும் செலுத்துகிறது. ஜனாதிபதி சில குறிப்பிட்ட விஷயங்-