பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயர்லாந்து

138

அயான்

களில் பிரதம மந்திரியும்,ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர்களும் ஆகிய ஏழு அங்கத்தினர்கள் அடங்கிய 'கவுன்சில் ஆப் ஸ்டேட்' என்ற ஒரு சபையையும் ஆலோசனை கேட்கலாம். இந்தச் சபையின் ஆலோசனைப்படி ஜனாதிபதி நடந்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது. சட்டமியற்ற செனெட் என்ற மேற்சபை, டேல் என்ற கீழ்ச்சபை ஆகியவையடங்கிய ஒரு பார்லிமென்டு நிறுவப்பட்டிருக்கிறது. செனெட் சபை 60 அங்கத்தினர்க ளடங்கியது. இவர்களில் பதினோரங்கத்தினர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்; ஆறு அங்கத்தினர் இரண்டு பல்கலைக் கழகங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்; மற்ற 43 அங்கத்தினர் இலக்கியம், விஞ்ஞானம், கலை, கல்வி, சமூகத்தொண்டு, வாணிபம், விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் என்னும் இவைபோன்ற விஷயங்களில் விசேஷ அறிவுள்ளவராகவோ, அனுபவமுள்ளவராகவோ இருப்பவர்களை 5 பட்டியலாக (Panels) பிரித்து, அந்தந்த வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஐந்துக்குக் குறையாமல் பதினொன்றுக்கு மேற்படாமல் அங்கத்தினர் எடுக்கப்படவேண்டும். கீழ்ச்சபை அங்கத்தினர் சர்வஜனவோட்டு முறைப்படி விகிதப் பிரதிநிதித்துவ ஏற்பாட்டை யொட்டித் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மந்திரிசபை கீழ்ச்சபைக்குக் கூட்டுமுறையில் பொறுப்பாளியா யிருக்கவேண்டும். செலவு நிதி மசோதா இங்குத்தான் சமர்ப்பிக்கப்படலாம். மற்ற மசோதாக்கள் மேற்சபையிலோ கீழ்ச்சபையிலோ சமர்ப்பிக்கப்படலாம். கீழ்ச்சபையிலிருந்து மேற்சபைக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு மேற்சபை 90 நாட்கள்வரை தடை (Suspension veto) செய்து வரலாம். நிதி மசோதாக்களைத் தடைசெய்யவே முடியாது. ஆகையால் கீழ்ச்சபைக்குத்தான் முழு அதிகாரமும் என்பது நன்கு விளங்கும். நீதி வழங்குவதற்கு ஓர் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டிருக்கிறது. அரசியல் திட்டத்தில் கண்ட ஷரத்துக்கள் விவாதிக்கப்பட்டால் அந்தத் தகராறுகளை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அசல் அதிகாரம் உண்டு.

1940-1950 முடியப் புத்து ஆண்டுகளில் நிருவாக அதிகாரிகளும் சட்டசபையும் பொது மக்களுக்கு அரசியல் திட்டத்தில் உறுதியான பாதுகாப்பு அளித்திருந்த சில அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டார்களென்று வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டன. சில வழக்குகளில் ஆக்கிரமிப்பு இல்லையென்றும், மற்றும் சிலவற்றில் ஆக்கிரமிப்பு இருந்திருப்பதால் அந்த நடவடிக்கைகளெல்லாம் ரத்து செய்யப்பட வேண்டியவை யென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திய அரசியல் திட்டத்தில் நாலாவது பாகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் வேலை முறையில் அனுசரிக்கவேண்டிய கொள்கைகள் அயர்லாந்து அரசியல் திட்டத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

வட அயர்லாந்து அரசியலமைப்பு : 1920, 1922 அரசியல் அமைப்புச் சட்டப்படி வட அயர்லாந்து மக்கள் தமக்கெனத் தனி நிருவாகமும் சட்டசபையும் பெற்றனர். நிருவாக அதிகாரம் இங்கிலாந்து மன்னரின் சார்பாக ஒரு கவர்னரால் வகிக்கப்படுகிறது. இவர் ஆறாண்டு காலத்திற்குப் பதவியிலிருப்பார். இவருக்கு ஆலோசனை கூறப் பார்லிமென்டுக்குப் பொறுப்பான ஒரு மந்திரிசபை யுண்டு; பார்லிமென்டு 26 அங்கத்தினர்கள் கொண்ட செனெட்டும், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 அங்கத்தினர்களடங்கிய காமன்ஸ் சபையும் என இரண்டு சபைகளடங்கியது. செனெட்டு அங்கத்தினர்கள் எட்டாண்டு காலத்திற்குக் காமன்ஸ் சபை அங்கத்தினர்களால் ஒற்றை மாற்று வோட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். காமன்ஸ் சபையின் காலவரையறை 5 ஆண்டுகள். 1929 முதல் சபையின் பெரும்பாலான அங்கத்தினர்கள் ஒற்றை அங்கத்தினர் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இங்கிலாந்தின் காமன்ஸ் சபைக்கு வட அயர்லாந்து இன்றைக்கும் 13 அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. அயர்லாந்து பார்லிமென்டுக்குச் சாம்ராச்சியத்தைச் சார்ந்த விஷயங்கள், போர்ப் பிரகடனம் செய்தல், சமாதானப் பேச்சு நடவடிக்கை எடுத்தல், உடன்படிக்கை செய்தல், பட்டம் முதலிய கௌரவங்கள் அளித்தல் என்பவற்றைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் சட்டமியற்றவோ நிருவாகம் நடத்தவோ அதிகாரமுண்டு. வட அயர்லாந்து அரசியலமைப்பில் மேற்சபையைக் கீழ்ச்சபை தேர்ந்தெடுப்பது ஒரு சிறப்பான அமிசம். வீ. வெ.

அயவா (Iowa) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று. காலிபோர்னியாவுக்கும் மசசூசிட்ஸுக்கும் இடையிலுள்ளது. பரப்பு : 56,045 ச.மைல். முக்கிய ஆறுகள் டமாய்ன், அயவா. முக்கிய ஏரிகள் கிளியர், ஸ்பிரிட், ஸ்டார்ம். மரங்களைத் தொடர்ந்து வெட்டி வருவதால் காடுகள் அழிந்து வருகின்றன. தானியமும் கால்நடையும் மிகுதி. தேன் உண்டாக்குவதில் நான்காவது மாகாணமா யிருக்கிறது. இந்த இராச்சியத்தில் விவசாயமே முக்கியமானது. இராச்சியத்தின் பரப்பில் சுமார் மூன்றிலொரு பங்கில் தரையடியில் நிலக்கரி உள்ளது. ஒரு காலத்தில் காரீயச் சுரங்கங்கள் முக்கியமாக இருந்தன. மக்: 2,621,073 (1950). தலைநகரம் டமாய்ன். இந்த இராச்சியத்தின் முக்கிய கைத்தொழில் இறைச்சியை டப்பிகளில் அடைத்தல். உணவுச் செய்முறைத் தொழிலும் முக்கியமானது.

அயனம்: பூமி சூரியனைச் சுற்றி ஓர் ஆண்டில் ஒருமுறை வருவதால், பூமியிலுள்ளவர்க்குச் சூரியன் நட்சத்திர மண்டலங்களிடை நகர்ந்து செல்வதுபோல் தோன்றுகிறது. சூரியனின் இப்படிப்பட்ட ஆண்டுச் சஞ்சாரத்தில் தை மாதம் முதல் 6 மாதங்கள் வட துருவத்தை நோக்கி நிகர்வதும்,ஆடி முதல் 6 மாதங்கள் தெற்கே நோக்கிச் செல்வதும், பூமியின் சீதோஷ்ண நிலை வருடாந்தர மாறுதல்களடைவதும் பலரும் கண்டறிந்தவை. கடக ரேகையிலிருந்து தெற்கே திரும்பும் காலம் தட்சிணாயனம் என்றும், மகர ரேகையிலிருந்து வடக்கே திரும்பும் காலம் உத்தராயனம் என்றும் கூறுவர். அயன தினங்கள் சூரியன் வட, தென் சஞ்சாரத்தில் திசை மாறும் காலங்களாகும். மேனாட்டுப் பஞ்சாங்கப்படி தட்சிணாயன தினம் ஜூன் 21லும், உத்தராயன தினம் டிசம்பர் 22லும் ஏற்படுகின்றன. உத்தராயன தினத்தன்று பூமியின் வடபாகத்திலுள்ளவர்க்கு ஓர் ஆண்டில் மிக நீண்ட பகற்பொழுதும் தென்பாகத்திலுள்ளவர்க்கு மிகக்குறைந்த பகற்பொழுதும் இருக்கும். தட்சிணாயன தினத்தன்று பகற்பொழுது இதற்கு நேர்மாறாக இருக்கும்.

அயாச்சோ (Ajaccio) கார்சிக்காத் தீவின் தலைநகரம். நெப்போலியன் பிறப்பிடம். அவர் பிறந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. முத்துக் குளித்தல் முக்கியமான தொழில். அழகான மாதாகோயிலும் நல்ல துறைமுகமும் உள. மக் : சு. 37,000.

அயான் (Ion) :மின்னேற்றங்கொண்ட அணுவோ, அணுத்தொகுதியோ அயான் என்று அழைக்-