பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயான்தைனா

139

அயோடின்

கப்படுகிறது. அணுக்கள் எதிரான ஏற்றங்கொண்ட இரு பகுதிகளால் ஆனவை. இவ்விரு ஏற்றங்களும் சமமாக இருப்பதால் அணுவில் நிகர மின்னேற்றம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் ஓர் அணுவானது எலெக்ட்ரான்களை ஏற்றுலோ, இழந்தாலோ, மின்னேற்றங்கொண்டதாகிறது. இவ்வாறு அது அயானாகிறது. சாதாரணமாக எல்லா உலோகங்களும், ஹைடிரஜனும் எலெக்ட்ரான்களை இழந்து நேரயான்கள் ஆகும். அலோகங்களும், படிமூலங்கள் என்ற அணுத் தொகுதிகளும் பொதுவாக எலெக்ட்ரான்களை ஏற்று எதிரயான்கன் ஆகும்.

சில திரவங்களிலும், கரைவுகளிலும், நேரயான்களும், எதிரயான்களும் வெவ்வேறாகப் பிரிகின்றன. இவ்விளைவு அயானாதல் எனப்படும். இத்தகைய திரவங்கள் மின்சாரத்தைக் கடத்தி, மின்பகுப்பு (த.க.) என்ற விளைவைத் தோற்றுவிக்கும்.

வாயு மூலக்கூறுகளிலுள்ள சில எலெக்ட்ரான்களை விடுவித்தல், வாயுக்களை அயானாக்கல் எனப்படும். சுடரிலுள்ள வாயுக்களில் இவ்விளைவு நேரலாம். அல்லது புறவூதாக்கதிர்கள், எக்ஸ்-எலெக்ட்ரான்களாலோ, கதிர்களைப்போன்ற சக்தி வாய்ந்த கதிர்ப்புக்களாலோ மூலக்கூறுகளைத் தாக்கி இவ்விளைவை நிகழ்த்தலாம். சாதாரணமாக மின்சாரத்தைக் கடத்தாத வாயுவும் அயானானபின் அதைக் கடத்தும்.

அயான்தைனா (Ianthina) கடலில் வாழும் நத்தைச் சாதிகளில் சாமானியமானதொன்று. இது கடலின் மேற்பாகங்களில் மிதந்து சஞ்சரிப்பதற்கேற்றவாறு அமைந்திருக்கிறது. இதன் காலிலிருந்து ஊன் தசைபோன்ற பிசின் உண்டாகிறது. இதில் காற்றுக் குமிழிகள் புகுந்து கொள்ளுவதனால் நுரைபோல் ஆகிறது. இது முழுவதும் ஒரு தெப்பம்போன்ற

அயான்தைனா
தெப்பத்திற்கு அடியில் முட்டைப் பைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

மிதவையாகப் பயன்படுகிறது. இந்த இனம் பெருகுகின்ற பருவத்திலே பெண் அயான்தைனா தன் முட்டைப் பைகளை இதன் அடியில் ஒட்டித் தொங்கவைக்கும். இதன் கிளிஞ்சில் ஊதாநிறமாக இருக்கும். கடற்கரையிலே இந்தக் கிளிஞ்சில்கள் உள்ளிருக்கும் சதையோடும் மிதவையோடும் வந்து ஒதுங்குவதுண்டு. உதாரணம்: அயான்தைனா ரோசியோலோ. கே. வீ

அயிரை ஓர் ஆறு (சிலப். 28 : 145); ஒரு மலை (பதிற். 21) ; ஒருவகை மீன் (புறம்.67; ஐங். 164).

அயிரை (அசரை) (Lepidocephalichthys thermalis) மிகச் சிறிய மீன். 1-2 அங்குல மிருக்கும். குளங்களிலும் மணற்பாங்கான படுகையுள்ள ஆறுகளிலும் சாதாரணமாக மிகுதியாகவே காணலாம். இது சேற்றில் அல்லது மணலில் பகலில் புதைந்து கிடந்து, இரவில் இரை தேட வெளி வந்து நீந்தும். முகமும் வாலும் மட்டும் மணலுக்கு மேலே தெரியும்படியும், மற்றப் பாகமெல்லாம் மறைந்திருக்கும்படியும் படுத்திருப்பது இதற்கு வழக்கம். செவுளால் மூச்சுவிடுவதோடு அமையாமல், இது அடிக்கடி நீரின் மட்டத்திற்கு வந்து காற்றை உட்கொள்ளுகிறது. இதை நீரிலிருந்து எடுத்தாலும் வெகுநேரம் உயிரோடிருக்கக் கூடும். அக்டோபர் முதல் ஜனவரி வரையில் இது முட்டையிடும் காலம். மழைத் தண்ணீர்க் குட்டைகளில்கூட இதன் குஞ்சுகளை அக்காலங்களில் பார்க்கலாம். இது சிறிய மீனானாலும் நிரம்பச் சத்தான உணவு என்று கருதுகின்றனர்.

அயினி அக்பரி அக்பர் அவையிலிருந்த அபுல்பசல் (த.க.) என்னும் அறிஞரால் இயற்றப்பட்ட ஒரு நூல். அவர் இயற்றிய அக்பர்நாமா (த.க.) என்னும் நூல் அக்பருடைய குடும்பத்தைப் பற்றியும், பண்புகளைப் பற்றியும் விவரித்துக் கூறுவதுபோல, இந்நூல் அக்பருடைய ஆட்சி முறையையும், அவ்வரசன் ஆட்சியில் நாடு இருந்த நிலையையும் பற்றி விரிவாகக் கூறுகிறது. இது மூன்று பாகங்கள் அடங்கியது. நூலால் சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவின் அரசியல், சமூக நிலைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. வட இந்திய வரலாற்று ஆதார நூல்களில் ஒன்றாக இதைக் கருதலாம்.

அயூதியா (Ayuthia) கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து நான்கு நூற்றாண்டுகளாகச் சயாமின் தலைநகரமாயிருந்த ஊராகும். பின்னர் அது அழிக்கப்படவே பாங்காக் தலைநகராயிற்று. அயூதியாக் கலை என்பது, கலைவேலைப்பாட்டைவிடக் கைத்தொழில் வேலைப்பாடே மிகுதியாகக் காணப்படும் ஒரு கலை முறையாகும். அது பண்டைக் கலையாக இருந்தது; இப்போது நாடோடிக் கலையாகத் தாழ்ந்துளது. புத்தருடைய உருவச் சித்திரங்கள், ஜாதகக் கதைச் சித்திரங்கள் முதலியன சயாமிய ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அரக்குப் பூசிய பொருள்களில் ஓவியம் வரையும் கலை இணையற்றதாக இருக்கின்றது. பிற்காலத்திய அயூதியாக் கலைஞர்கள் தீச்சுடரையும் புராண மிருகங்களையும் தேவதைகளையும் விரும்பித்தீட்டி வந்தனர்.

அயோடின் (Iodine) : [குறியீடு I; அணுவெண் 53; அணுநிறை 126·92]. இது உப்பீனிகளில் கடைசித் தனிமம். கடற்பாசிகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, அதிலுள்ள காரங்களைப் பிரிப்பதில் ஈடுபட்டிருந்த கோர்ட்வா (Courtois) என்ற அறிஞர் இதை முதலில் கண்டறிந்தார். இதைத் தனியே பிரித்து, இது ஒரு தனிமம் எனக் காட்டிய பெருமை கே-லூசாக் என்னும் ரசாயன அறிஞரைச் சாரும்.

தோற்றம்: தனிநிலையிற் கிடைக்காத இது கடற்பாசிகளில் ஓரளவு உள்ளது. காலிச்சே (Caliche) என்ற வெடியுப்புக் கனியத்தில் இது சிறிதளவு உள்ளது. இக்கனியத்திலிருந்து இது பிரித்தெடுக்கப்படுகிறது.

தயாரிப்பு: காலிச்சேயிலிருந்து வெடியுப்பைப் பிரித்த பின்னர், எஞ்சும் திரவத்தைப் பன்முறை கழுவினால் இதிலுள்ள அயோடினின் அடர்வு அதிகமாகிறது. அயோடேட்டு வடிவில் உள்ள இதைக் கார்பன் டைசல் பைடைக் கொண்டு குறைத்துத் தனி நிலையிற் பெறலாம். கடற்பாசியிலிருந்து இதைப் பிரிக்கப் பாசிகளைச் சேகரித்து, உலர்த்தி, எரித்துப் பெறும் சாம்பலை நீரிற் கழுவினால் அதிலுள்ள மற்ற உப்புக்களிற் பெரும் பான்மையானவை படிகமாகப் பிரியும். எஞ்சியுள்ள