பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோனியத் தீவுகள்

141

அர்த்தசாஸ்திரம்


அயோனியத் தீவுகள் ஆல்பேனியா நாடுகளின் மேலைக் கடற்கரையை அடுத்துள்ள பல தீவுகள். இவற்றில் செரிகோ, கார்ப்யூ, பேக்சாஸ், லெவ்காசி, இதக்கா, செபலோனியா, சான்டெ என ஏழு பெருந்தீவுகளும், பல சிறு தீவுகளும் உள்ளன. மொத்தப் பரப்பு : 752 ச. மைல் : மக் : 2,28,119 (1951). இத்தீவுகளில் பல மலைகள் உண்டு.

ஆதியில் ரோமானிய சாம்ராச்சியத்தின் பகுதியாயிருந்த இத்தீவுகள் பிற்காலத்தில் பலவேறு இராச்சியங்களின் உடைமையாயிருந்து, 1797-ல் நெப்போலியனால் கைப்பற்றப்பட்டன. 1815லிருந்து 1862 வரையில் பிரிட்டனுக்குச் சொந்தமாயிருந்த இவை பிறகு கிரீசோடு சேர்ந்துவிட்டன.

அயோனியா ஆசியாமைனரின் மேல்கரையோரமாயுள்ள ஒரு பழைய பகுதி ; இந்நாட்டில் 30 நூற்றாண்டுகளுக்குமுன் அயோனியர் என்னும் கிரேக்கர் சிலர் வந்து, குடியேறியதால் இப்பெயர் பெற்றது. அயோனியர் 12 சுதந்திர நகரங்களைப் பிணைத்து, ஒரு நாட்டுக் கூட்டத்தை ஸ்தாபித்தனர். கிரேக்கருடைய இலக்கியம், கலை, தத்துவம் முதலியவற்றிற்குப் பிறப்பிடமா யிருந்திருக்கிறது. மைலீடஸ், எபிசஸ், மாக்னீஷியா முதலிய இடங்களில் பண்டைய நகரங்களின் சிதைவுகள் பல காணக்கிடைக்கின்றன.

அர்ச்சுனன்: பாரத வீரர்களிற் சிறந்தவன்; பாண்டுவின் மகன் ; கிருஷ்ணனின் தோழன்; பகவத்கீதை கேட்டவன்; சிறந்த சிவபக்தன், வில் வீரரிற் சிறந்தவன் (பாரதம்).

அர்ட்டிகேசீ (Urticaceae) பெரும்பாலும் சிறு செடிகள்.பலவற்றின் சுணை (Stinging hair). பட்டால் கடுக்கும். புறத்தோல் அறைகளுக்குள் சிஸ்டோலித் (Cystolith) என்னும் அணுக்கற்கள் உண்டு. தண்டு பெரும்பாலும் நாருள்ளது. இலை மாறுபட்ட அல்லது எதிர் ஒழுங்குள்ளது. தனியிலை. இடையடிச்செதில் சாதாரணமாக உண்டு. பூக்கள் மிகச் சிறியவை. அநேகமாக ஒருபாலின. பூங்கொத்துச் சாதாரணமாக வளரா நுனி மஞ்சரி. சிலவற்றில் மஞ்சரித்தண்டு பெரிதாகி, அதன்மேல் பூக்களெல்லாம் நெருங்கியிருக்கும். ஆண் பூவில் இதழ் 4-5. கேசரம் அதே எண்ணிக்கை; இதழ்களுக்கு எதிரிலிருக்கும். மொக்கில் அவை உள்ளுக்கு வளைந்திருக்கும். பிறகு வெளியே வேசமாக வில்போலத் திரும்பி வெடிக்கும். பெண் பூவின் இதழ் ஆண் பூவின் இதழ் அத்தனையே இருக்கும். சூலறை ஓரறையுள்ளது. ஒரே சூல்முடி. ஒரே விதை; நிமிர்ந்திருப்பது. கனி அக்கீன் அல்லது உள்ளோட்டுச் சதைக்கனி. விதையில் முளைசூழ்தசை யுண்டு. இந்தக் குடும்பம் அயன மண்டலத்திலும் சமசீதோஷ்ண மண்டலத்தின் வெப்பமான பாகங்களிலும் உண்டு. தென்னிந்திய மலைகளில் இதைச் சேர்ந்த பல செடிகள் உண்டு:—
1. கைரார்டினியா (Girardinia) நீலகிரிக் காஞ்சொரி.
2. லப்போர்ட்டியா (Laportea) யானைக்காஞ்சொரி, ஒட்டுப்பலா, யானைச்சொரியன். (சாதாரணப் பூனைக்காஞ்சொரி டிராஜியா (Tragia) சாதி. யூபோர்பி யேசீ என்னும் ஆமணக்குக் குடும்பத்தைச் சேர்ந்தது).
3. இலாட்டோஸ்டெம்மா (Elastostemma).
4. பைலியா மைக்ரோபில்லா (Pilea microphylla) துப்பாக்கிச் செடி. இந்தச் செடி, தோட்டங்களிலே பாதை யோரங்களில் நடுவது. இதன் கேசரங்கள் முதிர்ந்திருக்கும்போது செடியை அசைத்தால் மகரந்தத் தூள் புகைபோல வெளியில் எறியப்படும்.

இந்தக் குடும்பம் அல்மேசீ (எல்ம்), மோரேசீ (முசுக்கட்டைச் செடி அத்தி, பலா), கன்னபேசீ (கஞ்சா) குடும்பங்களுக்கு மிக்க இயைபுடையது. இதில் சுமார் 40 சாதிகளும் 480 இனங்களும் உண்டு. சில இனங்களில் உட்பட்டையிலுள்ள நார் மிகவும் பயன்படுவது. ராமீ என்னும் நார் பேமெரியா நிவியா (Boehmeria nivea) செடியில் உண்டாவது. மயோஷியா (Maoutia) அர்ட்டிகா செடிகளிலும் நார் எடுக்கிறார்கள்.

அர்த்தகோளம் : பூமியை நேர் குறுக்கே வெட்டினால் இரு சமபாதிகளாகு மல்லவா? அவ்வொவ்வொரு பகுதியும் ஓர் அர்த்தகோளம் ஆகும். பூமத்தியரேகையை ஒட்டி வெட்டினால் ‘ வட அர்த்தகோளம்' என்றும். 'தென் அர்த்தகோளம்' என்றும் இருபகுதிகளாகப் பிரியும். வட அர்த்தகோளத்தில் வட அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா முதலிய பகுதிகளும், தென் அர்த்தகோளத்தில் தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பகுதிகளும் அடங்கி யிருக்கும். துருவத்திற்குத் துருவம். குறுக்கே (மேற்குத் தீர்க்கரேகை 20° பக்கமாக) வெட்டினால் கிழக்கு அர்த்தகோளம் என்றும் மேற்கு அர்த்தகோளம் என்றும் இரண்டாகப் பிரியும் ; மேற்கு அர்த்தகோளத்தில் பெரும்பாலும் இரு அமெரிக்காக் கண்டங்களும், கிழக்கு அர்த்தகோளத்தில் அட்லான்டிக் சமுத்திரத்துக்குக் கிழக்கேயும் பசிபிக் சமுத்திரத்திற்கு மேற்கேயும் உள்ள நில நீர்ப்பகுதிகளும் அடங்கினவாகக் கொள்ளப்படும். இவ்வாறு பிரித்துக் கூறுவது பூகோள மரபு.

அர்த்தசாஸ்திரம்: இந்தச் சாஸ்கிரத்தின் முக்கியக் கருத்து, குடிகளின் நலமே அரசனின் பொறுப்பு என்பதாம். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசனுக்கு அதிகாரம் இருக்கவேண்டும், அவனுடைய அதிகாரத்திற்கு மேன்மை கொடுக்கவேண்டும். அவனுடைய ஆணையைச் செலுத்த விரிவான அதிகார வர்க்கம் இருக்கவேண்டும். கௌடிலியர் எழுதியுள்ள அர்த்தசாஸ்திரத்திலிருந்து தெரிபவை : அரசன் ஒரு சாம்ராட். அரசாங்கம் ஒரு மண்டலி. இந்த மண்டலியைச் சுற்றியுள்ள ஏனைய இராச்சியங்களை அரசாங்கம் போர்செய்து வென்றோ, வஞ்சனையாகவோ அடிப்படுத்த வேண்டும். அரசியலானது அரசன் உட்பட எட்டு உறுப்புக்கள் உள்ளது. மந்திரிசபை, நாடு, அரண், படை, பண்டாரம் (செல்வம்), நட்பு, பகை என்பவை மற்ற ஏழும் ஆகும். அரசாங்கமானது நிலவரி, சுங்கம், இலாகிரி வரி, மானியம், பயிர், நாணயசாலை முதலியவற்றைக் கண்காணிக்கும் பல இலாகாக்களாக வகுக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு வெவ்வேறு அதிகாரிகள் இருந்தனர். பரத்தையர் இல்லங்களைக் கவனிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படையில் தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு பிரிவுகள் இருந்தன. தொழிலாளிக் குழுக்கள் இருந்தன. அவற்றிற்குச் சிரேணிகள் என்று பெயர். அவை தத்தம் தொழில்கள் முன்னேற்ற மடைவதற்கேற்ற சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருந்தன. இந்தியாவுக்கும், மத்திய ஆசியா, சீனம் முதலிய நாடுகளுக்கும் வாணிபப் போக்குவரத்து இருந்தது. தென் இந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் வியாபாரம் வலுத்திருந்தது. கூ. ரா. வே.

கௌடிலியர் அர்த்தசாஸ்திரம்

பண்டைக் காலத்துப் பாரத மக்களிடையில் பல்வேறு அர்த்தசாஸ்திரங்கள் வடமொழியில் பயின்று