பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கு, கொட்டகை அமைப்பு

147

அரங்கு, கொட்டகை அமைப்பு

வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசையொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன.

இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது.

ஆர்கெஸ்ட்ராவைக் கொண்ட பழங்கால அரங்கு

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீளமாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம்.

பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும்

ரோமானிய அரங்கு

பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந்தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவுகளைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங்கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாடகக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம்.

இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச்சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலிலிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங்களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயிலுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடைபெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட்டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்களில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன.

இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்திலிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்கவாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக்கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன.

இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாடகக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், 'தியேட்டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப்படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களிலும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி 'குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத்தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக்கப்பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப்பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண்மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்றமுள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின.

பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற்குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரிதாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன.

பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர்களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்-