பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கு, கொட்டகை அமைப்பு

149

அரங்கு, கொட்டகை அமைப்பு

போதும், மற்றவர்கள் படம் பார்ப்பதைப் பாதிக்காத வகையில் ஆசனங்களை அமைக்க வேண்டியிருக்கும். கண்ணுக்கு நலந்தரும் வகையிலும் திரையின்மேல் விழாமலும் அதில் வெளிச்சம் இருக்கவேண்டும். மின்சார விளக்குக்களை மிக்க திறமையுடன் அமைத்து இதைச் செய்கிறார்கள். தட்ப வெப்ப நிலையால் கொட்டகையிலுள்ளோர் பாதிக்கப்படாதவாறு உள்ளிருக்கும் காற்றைப் பதப்படுத்துவதும் அவசியமாகும். எல்லா வசதிகளும் கொண்டு, பல ஆயிர மக்களைக் கொள்ளும் மிகப் பெரிய கொட்டகைகள் அமெரிக்காவில் உள்ளன. டெலிவிஷன், இணைப்பார்வைக் காட்சி போன்ற புதுமைகள் பரவினால் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறும் என எதிர்பார்க்கலாம்.

மெட்ரோ சினிமாக் கொட்டகை, பம்பாய்.
உதவி : மெட்ரோ சினிமா, பம்பாய்.

அரங்கு அமைப்பு: இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை மேல்நாடுகளில் நாடக அரங்கு மிக விரிவான காட்சித் திரைகளையும் மற்றச் சாதனங்களையும் கொண்டிருந்தது. நாடகக் காட்சிகளின் சிறப்பினாலேயே புகழ்பெற்ற நாடகங்கள் இருந்தன. ஆற்றையும், மலையையும், கோட்டை கொத்தளங்களையும், எரியும் நகரையும், உள்ளது உள்ளவாறே காட்ட அக்காலத்தில் அரும்பாடுபட்டார்கள்; நிறையச் செலவு செய்தார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஹென்ரி இர்விங் என்ற புகழ் பெற்ற ஆங்கில நடிகர் ஷேக்ஸ்பியரது நாடகங்களை நடித்துக் காட்டியபோது இயற்கைத் தோற்றத்தைக் காட்டும் இம்முறை உச்சநிலையை அடைந்தது எனலாம். அக்காலத்திய அரங்கு இதற்கேற்றவாறு அமைந்திருந்தது. நடிகர்கள் திடீரெனத் தோன்றவும், மறையவும், காட்சிகளை விரைவாக மாற்றவும் ஏற்றவாறு அரங்கில் பல கண்ணிகள் இருந்தன. காட்சித் திரைகளை மேலே இழுக்க ஏற்றவாறு உயரமான பரண் அமைக்கப்பட்டது. ஜப்பானில் பழங்காலத்திலிருந்து வழக்கத்திலுள்ள சுழலும் அரங்கு மேல்நாடுகளிலும் வழக்கத்திற்கு வந்தது. இதன் உதவியால் பல காட்சிகனை முன்னதாகவே தயாரித்து வைத்து, ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் மாற்றமுடிகிறது. வண்டியின் மேல் காட்சிகளைத் தயாரித்து, அவற்றை அரங்கிற்கு இழுத்துவரும் முறையும், அரங்கைக் கீழே தாழ்த்திக் காட்சியை மாற்றும் முறையும் வழக்கத்திற்கு வந்தன.

நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்கு எனக் கருதப்பட்ட அக்காலத்தில் இந்த உபகரணங்கள் அனைத்தும் தேவையாக இருந்தன. ஆனால் இப்சன், பெர்னார்டு ஷா, செகாவ் முதலிய தற்கால நாடகாசிரியர்கள் தோன்றி, இக்கருத்தை மாற்றி, உலகையும் மக்களையும், மனித உணர்ச்சிகளையும் அறிய முயலும் ஆராய்ச்சிக் கூடங்களில் நாடக அரங்கும் ஒன்று என்ற புதுமைக்கருத்தைத் தோற்றுவித்தார்கள். ஓவியத்தில் கண்டு மகிழ்வது போன்ற காட்சிகளை நாடக அரங்கில் விரும்பும் காலம் மறைந்தது.

லிவர்ப்பூவிலுள்ள இசையரங்கு மண்டபம்
உதவி : பிரிட்டிஷ் கவுன்சில்

கார்டன் கிரெயிக் (Gordon Craig) என்னும் அறிஞர் தோன்றி, ஆங்கில நாடக அரங்கின் அமைப்பில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவித்தார். நாடகக் காட்சிகளில் இயற்கையான தோற்றத்தைவிடக் கற்பனையே முக்கியமானது என இவர் முடிவு செய்து, திறமையான குறிப்புக்களால் நாடகம் காண்போரது கற்பனைக்கு வேலை கொடுத்தும், நடிகர்களை அரங்கில் அமைக்கும் வகையிலிருந்தும் ஒளியையும் நிழலையும் தக்கபடி மாற்றியமைத்தும், நாடக ஆசிரியனுடைய உள்ளக்கிடக்கைகளையும், நாடகத்தின் உணர்ச்சிகளையும் காண்போர் உணருமாறு செய்தார். பல்வேறு அளவுள்ள செங்கட்டிகள், படிகள், தூண்கள் போன்ற எளிய பொருள்களையும் அலங்காரம் எதுவும் இல்லாத திரைகளையும் கொண்டே இவர், தம் முடைய காட்சிகளை அமைத்தார். ஜெர்மனியில் இதே கருத்துகளை வெளியிட்ட அடால்பே அப்பியா (Adolphe Appia) என்னும் அறிஞரைத் தொடர்ந்து, மாக்ஸ் ரைன்ஹார்டு(Max Reinhardt)என்பவர் இம்மாறுதல் களை வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இதே சமயத்தில் ரஷ்ய நாட்டிய நாடக அரங்கில் நிகழ்ந்த மாறுதல் களும் இவற்றிற்கு வழிகாட்டிகளாக அமைந்தன. குறிப் புக்களால் காட்சிப்பொருள்களைக் காட்டும் முறை ஜப்பானியருக்குப் புதிதன்று. அவர்களுடைய நாடக முறையொன்றில் ஒருசிறு பூ, பூந்தோட்டத்தையும், நீண்ட மூங்கிற்கழி பாலத்தையும் குறிக்கும். மேனாடுகளில் நிகழ்ந்த இம்மாறுதல்கள் ஜப்பானிய முறையை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். தற்கால ஓவியச் சிற்பக் கலைகளில் தோன்றியுள்ள மரபுகள் அனைத்தும் நாடக அரங்கில் கையாளப்பட்டுள்ளன.

அற்புதமான காட்சியை உள்ளது உள்ளபடி காட்ட-