பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கு, கொட்டகை அமைப்பு

151

அரச மரம்

தின்போது காண்போர் உள்ள இடத்தின் ஒளியைக் குறைத்து, அனைவரது கருத்தையும் அரங்கில் நிலை பெறச் செய்ய முடிந்தது.

ஆனால் 1879-ல் எடிசன் என்னும் அறிஞர் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த பின்னரே பலதிறப்பட்ட

சுழலும் அரங்கைக்கொண்ட கொட்டகை
அ- அரங்குகள் ஆ- ஆசனங்கள்

விளக்குக்களின் ஒளியினால் அரங்கிற்கு ஒளி தரும் நவீன முறை வழக்கத்திற்கு வந்தது. பல ஆயிரம் மெழுகுவர்த்திகளின் ஒளியைத்தரும் சக்தி வாய்ந்த மின்சார விளக்கும், பரவளைவு வடிவான ஆடிகளும் கண்டுபிடிக்கப்பட்டபின், அரங்கில் ஏதாவது ஓர் இடத்தில் மட்டும் ஒளிதரும் விளக்குக்களை அமைக்க முடிந்தது. வெள்ள ஒளி (Flood light) விளக்குக்களைக் கொண்டு அரங்கின் சில பகுதிகளை மட்டும் பிரகாசமாக ஒளிரச் செய்கிறார்கள். வான வில்லையும், மேகங்களையும், கடலலைகளையும், வாண வேடிக்கைகளையும் அரங்கின் மேல் காண்பிப்பதற்கேற்ற சுழலும் விளக்குக்கள் பயனாகின்றன. பழங்காலத்திலிருந்து வழங்கும் கருவியான படவிளக்கினைத் தக்கபடி மாற்றியமைத்து, வெள்ளைத் திரையின் மேல் பலதிறப்பட்ட படங்கள் விழும்படி செய்து, சிக்கலான காட்சி அமைப்புக்களையும் காட்ட முடிகிறது. நிழற் படங்களையும், வானவெளியையும், தொலைவிலுள்ள காட்சிகளையும் காட்ட இம்முறை இணையற்றது. அரங்கிலும் கொட்டகையிலும் உள்ள விளக்குக்களைத் தேவையானவாறு கட்டுப்படுத்த, முன்னர் நெம்பு கோல்களும் வேறு எந்திரங்களும் பயனாயின. ஆனால் இப்போதோ ரேடியோக் குழல்களின் உதவியால் ஒரு பலகையிலுள்ள சில விசைகளைத் திருப்பி, இவ்வேலையை மிக எளிதாகவும் திருத்த மாகவும் செய்ய முடிகிறது. இத்தகைய சாதனங்களால் அரங்கின் ஒளியைக் கட்டுப்படுத்தும் முறை மேலும் வளர்ந்துள்ளது.

நூல்கள் : சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை; வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் நாடகவியல் ; S. Cheney, The Theatre, 3000 years of Drama, Acting & Stagecraft; E. Reynolds, Modern English Drama ; R. D. Mankad, Ancient Indian Theatre : Yajnik, Indian Theatre.

அரசகேசரி கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவர்; அரச மரபினர்; யாழ்ப்பாணத்து நல்லூரினர் ; ஆழ்வார் திருநகரி அட்டாவதானி இராமாநுச கவிராயரிடம் கல்வி பயின்றவர் ; வடநூல் இரகு வமிசத்தைத் தமிழில் செய்யுட்களாக இயற்றியவர்.

அரச மரம் அத்திச் சாதியைச் சேர்ந்த மிகப் பெரிதாக வளரும் மரம். பாலுள்ளது. இலை 4-7 அங்குல நீளம், 3-4 அங்குல அகலமிருக்கலாம். அதன் மேற்பரப்பு மயிர் முதலிய வளர்ச்சி ஏதுமின்றி வழுவழுப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும். நுனி மிகவும் நீண்டு குறுகிக்கொண்டே போய் முடியும். இலையின் பரப்பும் நுனியும் இவ்வாறிருப்பதால் இதன்மேல் விழும் மழைநீர் மிக விரைவில் வழிந்தோடி விடும். அரசின் பூங்கொத்தைத்தான் காய் என்றும் கனி என்றும் கூறுகிறோம். இதனுள் நுண்ணிய விதைபோன்றிருப்பவையே உண்மையான அரசங்கனிகளாகும். இது அத்தி மஞ்சரிபோன்றதே. உருண்டையாக அரையங்குல விட்டமுள்ளது. சாதாரணமாக இலைக்கக்கத் திற்கு இரண்டு வீதம் இருக்கும். பழுத்தால் கருமை கலந்த ஊதா நிறமாக இருக்கும். ஆண் பூக்கள் சிலவே ; ஒவ்வொரு பூவிலும் 3 இதழ்களும் ஒரு கேசரமும் உண்டு. பெண் பூவில் 5 இதழ்கள் உண்டு. பூச்சி முட்டையிடும் மலட்டுப் பூக்களே மிகுதியாக இருக்கும். பழத்தைப் பறவைகளும் வௌவால், அணில் முதலியவைகளும் தின்னும். மக்களும் உண்பதுண்டு. பறவை முதலி யவை எச்சமிடும்போது அரசங்கனிகள் (அக்கீன்கள்), பனை முதலிய மரங்கள் மீதும் கோயில், வீடு முதலியவற்றின்

அரச மரம்
(சிறு கிளை)
சொட்டு நுனியுள்ள இலைகள்
கணுச் சந்தில் அத்தி மஞ்சரி
இலையடிச் செதில் மூடிய நுனிக்குருத்து

சுவர்மீதும் விழுந்து முளைப்பதுண்டு. சிறிதாக இருக்கும்போது மரம் தொற்றுச் செடிபோல வளரும். அரச மரம் வேலைக்குதவாது. இதன் பட்டை மருந்தாகப் பயனாகும். இம் மரத்தைப் புண்ணிய மரமாக இந்துக்களும் பௌத்தரும் கருதி வழிபடுகிறார்கள்.