பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசி பேரறிக்கை

155

அரசியல்

ச. மைல். தாலூகாவின் மக்: 1.07,841 (1931) நகரத்தின் மக்: 6,611 (1931).

அரசி பேரறிக்கை: 1857-ல் தோன்றிய சிப்பாய்ப் போரை அடக்கியபின், பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசாங்கத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து தாமே மேற்கொள்ள முடிவு செய்தனர். கம்பெனியின் டைரக்டர்கள் அத்திட்டத்தை எதிர்த்து வாதித்தபோதிலும், இறுதியாக அரசாங்கத்தாரின் நோக்கந்தான் நிறைவேறியது. புதிய சட்டம் 1858 ஆகஸ்டு மாதம் பார்லிமென்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நவம்பர் 1ஆம் தேதி அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அவ்வேளையில் விக்டோரியா அரசியின் பேரறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. வைசிராய் கானிங் பிரபு அலகாபாத்தில் பெருங் கூட்டமொன்றைக் கூட்டுவித்து இப்பேரறிக்கையைப் பிரசுரித்தார்.

அவ்வறிக்கையில் இந்திய மக்களுக்குக் கீழ்வரும் உறுதிமொழிகள் கூறப்பட்டன : நீதிவழுவாது அரசாங்கத்தை ஒழுங்குபட நடத்துவது, மத விஷயத்தில் நடு நிலைமையை மேற்கொள்ளுவது, மேலும் போர் புரியவோ, இராச்சியத்தின் பரப்பைப் பெருக்கவோ நோக்கமின்றி, அரசாங்கத்தார் நாட்டு அரசர்களின் நிலையைச் சீர்குலைக்காமல் ஆதரிப்பது, அவர்களுக்குக் கம்பெனியார் அளித்திருக்கும் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் காப்பாற்றுவது, இந்தியக் குடிகளுக்கு மதம், வகுப்பு, இனம் இவ்வித வேற்றுமைகளைக் கருதாமல், அவர்களுடைய கல்வி, திறமை, உண்மையான நடத்தை முதலியவற்றை மட்டிலும் சீர்தூக்கி நாட்டு அலுவல்களில் நியமிப்பது, குடிகளின் நன்மையை நாடி இந்திய நாட்டின் கைத்தொழில்களைப் பெருக்குவது, பொது நன்மைக்கான பல நற்காரியங்களில் ஈடுபடுவது ஆகியவைகளாம். கே. க.

அரசியல் : மனிதர்கள் எல்லோரும் சமூக வாழ்க்கையினர். பலர் ஒன்றாகக் கூடிவாழும் பண்பு அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. மனிதன் நல்வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தவே இராச்சியம் தோன்றி வளர்ந்து வந்துள்ளது என்று கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இவ்வாறு மனிதனுடைய செயல்களையெல்லாம் சமூக முறையில் ஆராயும் இயல்கள் பலவற்றில் அரசியலும் ஒன்று. அரசியலானது இராச்சியத்தின் தன்மை, அரசாங்கத்தின் இயல்பு முதலியவற்றின் உண்மையைக் கண்டு கூறும். ஒரு சமூகம் நிலைபெற்றிருப்பது, அதன் இராச்சியத்தையும் அரசாங்கத்தையும் பொறுத்திருப்பதால், அரிஸ்டாட்டில் அரசியலைத் தலை சிறந்த அறிவுப் பகுதி (Master Science) என்றார். இவ்வியல் ஒரு சமூகத்துள் வாழும் மனிதனுடைய செயல்களின் வரம்பையும் தன்மையையும் அளந்து காட்டும். மனிதன் செயல்களில் பிறரால் கட்டுப்படுத்த முடியாதவை அவன் எண்ணங்களும் கற்பனைகளுமே; ஆதலால் அவற்றை நீக்கி, மனித சமூகத்தின் ஏனைய செயல்களை யெல்லாம் அரசியல் ஆராய்வதோடு. அரசாங்கத்தின் பலவேறு அமைப்புக்களையும் ஒப்பிட்டு ஆராய்கின்றது. அன்றியும் மனிதர்கள் அமைக்கும் எவ்வகைப்பட்ட குழுக்களையும் பற்றி அது ஆராய்கின்றது.

இவ்வரசியலைச் சமூகக்கலை என்று கூறுவதுண்டு. மக்கள் கூடிவாழும் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளும் பொதுச் செயல்களைப்பற்றி யாராயும் கலைகளைச் சமூகவியல் (Sociology) என்று பொதுப்பட ஒரு தொகைப் பெயரால் இக்காலத்தில் குறிக்கின்றனர்.

இச்சமூகவியல் பொருளாதாரம், அறநூல், தருக்கநூல், மானிடவியல், சட்டம், வரலாறு முதலிய பல தனி இயல்களின் தொகையாகும். இவ்வகை இயல்கள் பௌதிகம், ரசாயனம், கணிதம் முதலிய இயல்களின் தன்மையினின்றும் வேறுபட்டவை. பௌதிகம் முதலிய இயல்கள் உயிரில்லாப் பொருள்களைப்பற்றி யாராய்கின்றன ; அவ்வாராய்ச்சியை ஆய்வுக்களங்களில் நாம் திட்டமிட்ட கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் மனிதனது செயலைப்பற்றி ஆராய்பவர்களாதலால் ஓர் ஆய்வுக் களத்தில் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்த முடியாது. அன்றியும் எப்பொருளைப்பற்றி அவர்கள் ஆராய்கிறார்களோ, அப்பொருள் எக்காலத்திலும் 'ஒரு தன்மையாக மாறாமல் நிற்பதன்று.

சமூக இயலைச் சார்ந்த இயல்களுள் அரசியல் பொருளாதாரத்தையே மிகவும் ஒத்தும் சார்ந்தும் இருக்கிறது. அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் தற்காலத்தில் நெருங்கின தொடர்பும் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இக்காலத்தில் தேசியத்திட்டமிடல் (National planning) எங்கும் காணும் பொதுப் பழக்கமாயிருப்பதால் பொருளாதாரத்துறையும், அரசியல் துறையும் ஒன்றற்கு ஒன்று நெருங்கிய உறவு கொண்டுள்ளன. பொருளாதாரம் தன் முடிபுகளை அறநூல் வாயிலாகவே நிறுவுகின்றது. இல்லையேல், அம்முடிபுகள் பயனற்றவையாயும் குற்றமுடையவையாயும் முடியும். அறத்தின் காரணமாக உண்டாகும் பொருளையே பொருள் என்று கூறுவது தமிழிலும் மரபு என்பது இங்குக் கருதத்தக்கது. அறநூல் தனியொருவரின் ஒழுக்கங்களைப்பற்றிக் கூறுகின்றது. அரசியல் சமூகத்தின் ஒழுகலாற்றை ஆராய்கின்றது. ஆதலால் அரசியலுக்கும் அறநூலுக்கும் உள்ள தொடர்பும் விளங்கும். எவ்வகையாராய்ச்சிக்கும் தருக்க நூற்பயிற்சியின்றியமையாதாதலால் அரசியல் ஆராய்ச்சியும் தருக்கநூல் முறைகளைப் பின்பற்றியே அமையும் என்பதும் விளங்கும்.

அரசியல் துறையில் ஆராய்ச்சிக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் எல்லாம் வரலாற்றிலிருந்தே பெறப்படுபவை. வரலாற்றில் நாம் கண்கூடாகக் கண்ட விவரங்களையும், பிறர்கண்டு தொகுத்துவைத்த விவரங்களையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சியே அரசியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சியாம். ஆகையால் அரசியல் ஆராய்ச்சிக்கு நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான விவரங்கள் பண்டைய வரலாற்றில் பொதிந்து கிடப்பவை என்பது பெறப்படும்; ஆயினும் சிலர் கூறுவதுபோல வரலாறு எல்லாம் பண்டைய அரசியல் என்றோ, அரசியல் எல்லாம் தற்கால வரலாறு என்றோ நிச்சயமாகக் கூற இயலாது. ஆக்டன் பிரபு கூறியுள்ளபடி, வரலாறு என்னும் ஆற்றுப்பெருக்கு, ஆற்றுப்படுகையில் விட்டுச் செல்லும் பொன் துகள்களே அரசியல் ஆராய்ச்சி என்னும் கலையாம். வரலாற்றின் விவரங்களை ஒப்புநோக்கி ஆராய்ந்து நாம் காணும் உண்மைகளே அரசியல் ஆராய்ச்சிக்கு உதவுவனவாம்.

மனிதனுடைய வாழ்க்கை முறைகளையும், அவன் சமுதாய வாழ்வில் செய்துவந்துள்ள ஆய்வுகளின் முறைகளையும், அவனது நாகரிக வளர்ச்சியையும் தொகுத்து ஆராயும் இயலுக்கு மானிடவியல் (Anthropology) என்னும் பெயர் வழங்குகின்றது. மானிடவியல், மனிதன் சமூகத்தின் உறுப்பாயிருந்து ஆற்றும் செயல்களையெல்லாம் ஆராய்ந்து காணும் உண்மைகளில் பல அரசியல் வரம்புக்குட்பட்டவை யாதலால் அரசியலுக்கும்