பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியலமைப்புப் பற்றிய சட்டம்

158

அரசியலமைப்புப் பற்றிய சட்டம்

தன என்று தீர்ப்புக்கள் அளித்து அச்சட்டங்களை ரத்து செய்திருக்கிறது. ஓர் அரசியலமைப்புத் திட்டத்தின் தன்மை, அது இயற்றப்பட்ட காலத்தையும், மக்களின் மனோபாவத்தையும் பொறுத்திருக்கிறது. கால நிலைமையும் மக்களின் மனோபாவமும் மாறலாம். அப்பொழுது அரசியலமைப்பும் அரசியலமைப்பின் மாறுதல்களின் தக்கவாறு மாறவேண்டும். ஓர் அரசியலமைப்பின் மாறுதல்களின் முக்கியமான நோக்கங்கள் நால்வகையாகும். முதலாவது, அத்திட்டம் எளிதிலும் மனப் போக்குப் போனபடியும் மாற்றமுடியாதபடி யிருக்கவேண்டும். இரண்டாவது, மாறுதலுக்கு முன் பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்படவேண்டும். மூன்றாவது, கூட்டாட்சியின் அதிகாரம் எதுவும் ஓர் அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாக மாற்ற முடியாதபடி யிருக்கவேண்டும். நான்காவது, மக்களின் தனி உரிமைகளோ, அல்லது அடிப்படை உரிமைகளோ, அல்லது சிறுபான்மையோரின் உரிமைகளோ போதுமான அளவு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நான்கு நோக்கங்களையும் தனியாகவோ அல்லது சேர்த்தோ அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்புத் திட்டச் சீர்திருத்த முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டமென்பதுதான் அரசாங்கத்துக்கு அடிப்படை. ஆகையால் அத்திட்டம் மிக்க மதிப்புடன் பாராட்டப்படவேண்டும். அது மிகவும் புனிதமானது என்கிற உணர்ச்சியிருந்தால்தான் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் வலுவும் உறுதியும் ஏற்படும். வீ. வெ.

அரசியலமைப்புப் பற்றிய சட்டம் (Constitutional Law) சட்டங்கள் இல்லாமல் எந்தச் சமூகமும் வாழ முடியாது. குடிகள் ஒழுங்காக நடந்துகொள்வதற்காகவும், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மக்கள் சாதாரணமாக எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை ஊகிப்பதற்காகவும், தனிப்பட்டவர்களிடையே தோன்றும் தவிர்க்கமுடியாத வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காகவும் சட்டங்கள் தேவை. சட்டங்களைச் செய்து அமல் நடத்தவும், சமூகத்தை ஒருமைப்படுத்திக் காக்கவும் அரசாங்கம் அவசியமாகிறது. இத்தகைய அரசாங்கம் மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் ஒன்று சேர்க்கவும், அதற்கு முரண்படாமல் தடுக்கவும், பணிவிக்கவும் பூரண ஆதிபத்தியம் உடையதாக இருக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய இந்த ஆதிபத்திய அதிகாரத்தின் மூலத்தைப் பற்றிப் பல்வேறு கொள்கைகள் இருந்துவந்துள்ளன. இந்த அதிகாரம் அனைத்தும் கடவுளால் அளிக்கப்பட்டதென்று ஒரு கொள்கை இருந்தது. அரசனும் குடிகளும் செய்துகொண்ட உடன்படிக்கையின் விளைவே இந்த அதிகாரம் என்று சில அரசியல் அறிஞர்கள் கூறியதுண்டு. இந்த அதிகாரம் முழுவதும் குடிகளுக்கே சொந்தம்; குடிகளிடமிருந்தே. அரசாங்கம் இவ்வதிகாரத்தைப் பெறுகின்றது என்னும் கொள்கை இக்காலத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது. "இந்திய மக்களாகிய நாம் இந்த அமைப்புச் சட்டமூலமாக இந்த அரசியல் அமைப்பை ஏற்றுச் சட்டமாக ஆக்கி நமதாகச் செய்து கொள்கின்றோம்" என்பது இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையாகும்.

ஆயினும் அரசியல். அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது என்று கூறுவதற்கும், மக்களே ஆளுகின்றனர் என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு. உண்மையில் அரசாங்கத்தை ஒரு சிலரே நடத்த இயலும். எல்லோரும் சேர்ந்து ஒருங்கே ஆள முடியாது. ஆகையால் அரசாங்கத்தை நடத்தும் பல உறுப்புக்கள் எந்த எல்லைக்குள் இயங்கவேண்டும் என்று பொதுமக்கள் எண்ணப்படி வரையறுத்துக் கூறும் அடிப்படைச் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று வேண்டியிருக்கிறது.

அரசியலமைப்புப் பற்றிய சட்டம் என்பது, அரசாங்கத்தின் பல்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வேலைகளையும், அவ்வுறுப்புக்களிடையே இருக்கவேண்டிய தொடர்பையும், அவ்வுறுப்புக்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கவேண்டிய தொடர்பையும் நிருணயிக்கவும், ஒழுங்கு செய்யவும் தேவையான விதிகள் அடங்கிய சட்டம் எனலாம். அரசாங்கத்தின் அதிகாரங்கள் சட்டங்களைச் செய்தல், அரசியல் நிருவாகம் நடத்துதல், நீதி வழங்குதல் என மூன்று வகைப்படும்.

அரசியலமைப்புச் சட்டமானது 1. சட்டங்கள் இயற்றுவதற்கு வேண்டிய ஸ்தாபனங்கள். சட்டசபை உறுப்பினர் தேர்தல் நடத்தவேண்டிய முறை, சட்டங்கள் இயற்ற வேண்டிய முறை, சட்டங்கள் இயற்றவேண்டிய விஷயங்கள். 2. இராணுவ, போலீஸ் படைகளின் அமைப்பும், தொகையும், அரசியல் நிருவாகத்தின் அமைப்பு, அதன் பொறுப்பு, அது சட்டங்களை அமல் நடத்த வேண்டிய முறை. 3. நீதிக்குலத்தின் தரங்கள், வழக்குக்களைத் தீர்த்து வைக்க அதற்குள்ள அதிகாரம், அதன் தீர்ப்புக்களுக்குள்ள ஆணை, மரியாதை ஆகியவற்றைப் பற்றியது.

மேலும் அது இராச்சியத்தின் ஆதிபத்திய அதிகாரம் செல்லும் பிரதேசம், அப்பிரதேசத்தின் எல்லைகள், அத்துடன் சேர்த்தல் அல்லது நீக்குதல், அதன் குடிகளாவதற்குரிய தகுதிகள் ஆகியவற்றையும் வகுக்கும். இங்கிலாந்தில் அது அரச பரம்பரையையும் கூட வரையறுக்கின்றது. இந்தியாவில் அது அரசாங்க மொழி இதுவென்றும் வகுத்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா போன்ற சில நாடுகளில் அரசியல் அமைப்புப் பெரும்பாலும் எழுத்து மூலமாக அமைந்துளது. இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் பண்டைய பழக்கத்தை ஒட்டிப் பல பாகங்கள் எழுதாமலே இருந்துவருகின்றன. எழுதப்படாத அரசியல் அமைப்புள்ள நாடுகளில் சட்டசபைகள் சாதாரண முறையிற் சட்ட மியற்றி அரசியல் அமைப்பை மாற்ற முடியும். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள விசேடமானதும் சிக்கலானதுமான முறையைத் தழுவியே அரசியல் அமைப்பை மாற்ற முடியும். முந்திய வகை அரசியலமைப்புக்கள் நெகிழ்வுடையவை என்றும், பிந்திய வகை அரசியலமைப்புக்கள் நெகிழ்வற்றவை என்றும் கூறுவர்.

சில பழைய அரசியலமைப்புக்கள் தம் பழைய முறைகளையும் குறிக்கோள்களையும் விடாது தாங்குவதுபோல் புறத்தே தோன்றினும், தமது அகத்தே பெரிய, புதிய மாறுதல்களை ஏற்றுக்கொண்டிருக்கலாம். அண்மையில் தோன்றிய சில அரசியல் அமைப்புக்களில் தற்கால அரசியல் கருத்துக்கள் திட்டமான இடம் பெற்றுள்ளன. சில அரசியல் அமைப்புக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் விவரமாகக் கூறும்; மற்றுஞ் சில அமைப்புக்கள் பொதுவான தத்துவங்களை மட்டுமே கூறும். உதாரணமாக, இந்திய அரசியலமைப்பு 395 விதிகளும் பல சேர்க்கைகளும் கொண்ட நீண்ட சாசனம். ஆனால், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பில் 21 விதிகளும், சென்ற 175 ஆண்டுகளில் செய்யப்பட்ட