பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

164

அரசியற் கருத்துக்கள்

பட்ட அதிகாரங்களுக்கும் அடங்கியே மக்கள் வாழவேண்டும் என்பாரும் ஆக மூவகையினர் கருத்துக்களுக்கும் இடமேற்பட்டது.

பாடுவாவைச் சார்ந்த மார்சிலியஸ் (1270-1342) என்பவர் 1324-ல் டிபென்சார் பாசிஸ் (Defensor pacis) என்னும் நூல் ஒன்றை இயற்றினார். இந்நூலில் மார்சிலியஸ் திருச்சபைக்கு முழு அதிகாரம் உண்டு என்னும் கொள்கையை மறுத்து, இலௌகிக அதிகார எல்லையைக் குறுக்கி நிருணயிப்பதையே கருதினார். அச்சபைக்கு அதிகாரமே இல்லை என்று கூற ஒருவரும் துணியவில்லை. டான்டே (1265-1361) என்னும் இத்தாலிய அறிஞர் இயற்றிய டி. மானர்க்கியா (De Monarchia) என்னும் நூலிலும், இலௌகிக விஷயங்களில் சாம்ராச்சியத்திற்கு முழு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளதாயினும், அவ்வதிகாரம் இறைவனிடமிருந்தே நேரடியாகப் பெறப்படுவது என்றும், இந்த இலௌகிக அதிகாரத்திற்கு இணையாகப் போப்பாட்சிக்கு வைதிக விஷயங்களில் பூரண அதிகாரம் உண்டு என்றும் கூறப்பட்டுள்ளன.

இலௌகிக அதிகாரத்திற்கு ஒரு சின்னமாக விளங்கிய புனித ரோமானிய சாம்ராச்சியம் அழிவுற்ற பிறகு, ஒரு புதுப்பிரச்சினை பிறந்தது. போப்பாட்சிக்கும் சாம்ராச்சியத்திற்கும் இடையே தோன்றிய முரண்பாடு, போப்பாட்சிக்கும் பல சிறு தேசிய இராச்சியங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடாக மாறிற்று. அன்றியும் போப்பாட்சிக்கும் ஒவ்வொரு தேசிய ராச்சியத்திலுமிருந்த தனித்தனித் திருச்சபைகளுக்கும் இடையேயும் ஒரு முரண்பாடு தோன்றலாயிற்று. பல நாடுகளில் இருந்த திருச்சபைகளும் போப்பின் தனியதிகாரத்திற்குட்பட்டே இருந்தன. மதத்தினின்றுந் தள்ளுகை, அரசுரிமை நீக்கம் முதலிய முறைகளைக் கையாண்டு, போப் மன்னர்களை மருட்டி வந்தார்.தேசிய இராச்சியங்கள் தோன்றிய பிறகு திருச்சபைக்கு இவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பது மறுக்கப்பட்டது ; மன்னர்கள் தங்கள் அதிகாரத்தை இறைவனிடமிருந்து நேரடியாகப் பெற்றார்கள் என்னும் தெய்விக உரிமைக் கோட்பாடும் (Divine Right of Kings) உடன் தோன்றிற்று. அன்றியும், போப்பின் அதிகாரத்திற்குப் புறம்பான தேசியத் திருச்சபைகளும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதாவது அரசியல் துறையில் தேசியம் ஒரு கோட்பாடாக உருக்கொள்ளத் தொடங்கிற்று.

இடைக்கால அரசியற் கருத்துக்கள் பெரும்பாலும் சமயச்சார்பாகவே இருந்தன. சிசரோ, செனிக்கா என்னும் இரு அறிஞர்களுடைய கருத்துக்கள் இடைக்காலக் கருத்துக்களை யுருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன. சாலிஸ்பரியைச் சார்ந்த ஜான் என்பவர் 1159-ல் பாலிக்கிராட்டிகஸ் (Polycraticus) என்னும் நூல் ஒன்றை இயற்றினார். போப்பாட்சி கொண்டாடிய உரிமைகளின் சார்பாகக் கூறப்பட்ட கூற்றுக்களையெல்லாம் தொகுத்து இந்நூலில் அவர் கூறினார்.

1260-ல் இடைக்கால அரசியற் கருத்துத்துறையில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நேர்ந்தது; அதாவது அவ்வாண்டில் அரிஸ்டாட்டிலின் அரசியல் (Politics) என்னும் நூல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது. அச் சிறந்த நூல் அக்வைனஸ் (1227-1274) என்னும் அறிஞரின் நூலுக்குக் கருத்தூட்டியது. அரிஸ்டாட்டிலை நன்கு கற்ற அக்வைனஸ் இறையியற் களஞ்சியம் (Summa Theologica) என்னும் நூலை இயற்றினார். அந்நூலில் ஒழுங்கான ஆட்சிக்கும் கொடுங்கோலுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டிச் சட்டம். ஆள்பவனினும் உயர்ந்தது என்று கூறினார். ஆயினும் மனிதர்களால் இயற்றப்படும் சட்டங்கள் தெய்விகச் சட்டங்களினின்றும் தோன்றுபவை என்றும் அவர் கூறினார். அவர் கருத்துப்படி, எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஓர் இயற்கைச் சட்டம் உண்டு. ஆதிபத்தியம் இறுதியில் மக்களிடம் காணப்படுவதே யன்றி, ஆள்வோரிடமில்லை என்னும் கருத்தும் ஓரளவுக்கு அவருக்கு உண்டு என்றே காண்கிறது. ஆயினும் இக் காரணத்தைக் கொண்டு, சாலிஸ்பரி ஜான் கூறியது போல் கொடுங்கோலனைக் கொல்லுவதில் குற்றமில்லை என்று அவர் கருதவில்லை. அரிஸ்டாட்டிலின் நூலைக் கற்றிருந்ததால் போப்பின் தனியாட்சியை அவரால் ஆதரிக்க முடியவில்லை; ஆயினும் இராச்சியம் இலௌகிக நிலையிலேயே அமையும் ஒரு ஸ்தாபனம் என்னும் கருத்தையும் அவரால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இடைக்கால அரசியற் கோட்பாடுகளுக்கும் தற்கால அரசியற் கோட்பாடுகளுக்கும் இடையில் நீக்கோலா மாக்கியவெலி (1469-1527) என்னும் இத்தாலிய அறிஞருடைய கருத்துக்கள் இலங்குகின்றன. இவர் இயற்றிய முக்கியமான நூல் அரசன் (The Prince) என்பது. இந்நூலைக் கொடுங்கோலர்களின் வேதம் என்று சிலர் பழித்தனர். ஆயினும் தற்காலத்தில் இராச்சியத்திற்குப் பூரணமான இலௌகிகப் பண்புகளை ஏற்றிக் கூறியவர்களில் இவரே முதல்வர். இவர் கருத்துக்கள் அரசியல் துறையில் தேசியம் என்னும் கருத்து வளர்வதற்கு மிகவும் துணைபுரிந்தன. டைட்டஸ் லிவியசின் முதற்பத்துப் பகுதிகளைப்பற்றிய ஆராய்ச்சி (Discourses on the First Ten Books of Titus Livius) என்னும் நூலில், குடியரசு ஸ்தாபனங்களை மாக்கியவெலி பெரிதும் போற்றினார். ஆயினும் அவர் பூரண அதிகார இலௌகிக - அரசாங்கத்தால்தான் தேசிய ஐக்கியத்தை நிறுவ முடியும் என்று கருதினார். இக்கருத்தைக் கொண்டவர் போப்பாட்சியை எதிர்த்ததில் வியப்பில்லை. பயன்களை எய்த வழிகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று மாக்கியவெலி கூறும்போது, அறநெறியென்றும் மறநெறியென்றும் உள்ள வேறுபாட்டினை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அவர் அறநிலையே தேவையில்லாதது என்று கருதியதாகக் கூறமுடியாது. அவர் கூற்று அறத்தை மறுத்ததன்று ; அறத்தினின்றும் வேறுபட்டதேயாம். தனியொருவரின் ஒழுக்கங்கள் அறநிலைக்கு ஒத்திருக்க வேண்டும் என்பதே அவருடைய கருத்தும். அவர் கூற்றுக்கள் இராச்சியத்திற்குப் பொருந்துவனவே யன்றித் தனி வாழ்க்கையைக் கருதிக் கூறப்பட்டவையல்ல. " அரசனுடைய கடமை, வலிமை பொருந்திய இராச்சியத்தை நிறுவுவதேயன்றி, நல்ல இராச்சியத்தை நிறுவுவதன்று" என்பது அவர் கோட்பாடு. பிரபுக்கள் ஆட்சியும், கூலிப்படைகளும் விரும்பத்தகாதவை என்று அவர் கருதினார். தேசிய நன்மைக்கு விரோதமாகக் கூறப்படும் எந்தப் பற்றுக்களும், அறக்கோட்பாடுகளும் பயனற்றவை என்பது அவர் எண்ணம்.

மாக்கியவெலி சமயச் சீர்திருத்தக் கொள்கைகள் உருவாவதற்கு முன்பே தமது நூல்களை இயற்றிவிட்டார். அவரது கருத்துக்கள் முழுவதும் இலௌகிக முறையில் அமைந்தவை. சமயச் சீர்திருத்தம் ஏற்பட்டதும், தேசிய இராச்சியத்தைப்பற்றிச் சமயக் கருத்துக்களும் தோன்றலாயின.

ஆக்காமைச் சார்ந்த வில்லியம் (சு.1300-1349), கியூசாவைச் சார்ந்த நிக்கலஸ் (1401-1464) என்பவர்கள் போப்பின் அதிகாரத்தை மிக உயர்ந்ததாக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, எல்லாக் கிறிஸ்தவர்க-