பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

165

அரசியற் கருத்துக்கள்

ளுடைய மொத்தக் கருத்துக்களையும் அறிந்து தேரவேண்டும் என்றனர். இடைக்காலப் போப்பாட்சியிற் புகுந்த பிளவு (Schism) 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீர்ந்ததும் இக்கருத்துக்களும் வலிவிழந்தன. 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறிஞர்கள், "கருத்து வேறுபாடுகளுக்கு முடிவுகாணப் போப்பின் அதிகாரத்தைவிட உயர்ந்த கிறிஸ்தவப் பொது மக்களுடைய கருத்தை நாட வேண்டியதில்லை. சீர்திருத்தவாதிகளின் ஆன்மார்த்தக் கருத்துக்களே உண்மைக்கு வழிகாட்டி" என்று கருதினர்.

16 ஆம் நூற்றாண்டு: 16ஆம் நூற்றாண்டின் அரசியற் கொள்கை அந்நாளில் ஐரோப்பாவில் தோன்றிய சமயச் சீர்திருத்தத்தை ஒட்டியதே ஆகும். இவ்வியக்கத்தைத் துவக்கிய மார்ட்டின் லூதர் (1483-1546) மன்னர்களின் ஆதரவை நாடினதால், யாவரும் அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கவேண்டியது அவசியமென்று வற்புறுத்தினார். அத்துடன் நாட்டரசாங்கங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறையில் அரசியல் நடத்துவதுதான் முறையென்று கருதினார். பற்பல நாடுகளை இணைத்து, ஒரு சக்கரவர்த்தியின் ஆட்சியோ, போப்பின் அதிகாரமோ ஏற்படுத்துவது நல்லதன்று என்பது அவர் நோக்கம். மேலும், ஒவ்வொரு நாட்டிலும் திருச்சபையின் அதிகாரமும், அரசியல் ஆட்சியும் தனிப்பட்ட முறையிலே வேறுபட்டிருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். இவ்விதம் சில ஆழ்ந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தபோதிலும், மார்ட்டின் லூதருக்கு அரசியலில் ஈடுபாடு மிகுதி எனக் கூறமுடியாது. மதச் சீர்திருத்தமே அவரது முக்கிய நோக்கம். மேலும் அவர் கொள்கைகள் சில ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மக்கள் அரசாங்கத்திற்கு எக்காலத்திலும் அடிபணிந்து நடக்கவேண்டுமென்று முதலில் வற்புறுத்தினார். ஆனால் பின், கொடுங்கோல் மன்னனை எதிர்க்கலாமென்று கூறினார்.

லூதரின் மாணாக்கர் மெலாங்தான் என்பவர் அரசியல் கொள்கையில் தலைசிறந்த ஒரு இடம்பெற உரிமையுள்ளவர்; புகழ்பெற்ற பேரறிஞர். அரிஸ்டாட்டிலின் கொள்கையில் பற்றுடையவர். முக்கியமாக இயற்கைச் சட்டத்தைத் தழுவியே அரசியலையும், மத ஸ்தாபனங்களையும் நடத்த விரும்பினார். லூதரைப் போல் மன்னனாட்சியையும் தனிநாட்டு உரிமையையும் ஆதரித்தார். ஆனால் இறுதியில் பிரபுக்களாட்சியையும் போற்றினார்.

சமயச் சீர்திருத்தக் காலத்தில் ஐரோப்பாவில் பல தலைவர்கள் தோன்றினர். ஸ்விங்லி, கால்வின் என்பவர்கள் இவர்களுள் தலைசிறந்தவர்கள். ஸ்விங்லி (1484-1531), "அரசியலும் சமயமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அமைப்பில் இருக்கவேண்டுபவை" என்று கருதினார். சுவிட்ஸர்லாந்தில் நடப்பிலிருந்த குடியரசு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. அதுபோன்ற குடியரசைப் பரவச் செய்வதே அவர் குறிக்கோளாயிற்று. சமயச் சீர்திருத்தத்தில் மிகவும் ஈடுபட்டவர் கால்வின் (1509-64). இவரது போதனைகள் அரசியல் கொள்கைகளை மிகவும் பாதித்தன. நுண்ணிய வழக்கறிஞராகிய இப்பிரெஞ்சுத் தலைவர் திருச்சபைக்குப் புதிய அமைப்பு வகுத்தார். சட்டத்திற்கு அடிபணிந்து மக்கள் வாழவேண்டுமென்பதை நன்கு வற்புறுத்தினார். சமய வழியிலும் அரசியல் துறையிலும் நிபந்தனைக்குட்பட்ட வாழ்வின் பெருமையை எடுத்துக் காட்டினார். இவர் மதமும் அரசியலும் ஐக்கியப்பட்டு ஒன்றாக இருக்கவேண்டுமென்ற கருத்துடையவரல்லர்; இரண்டும் தனித்தனியாக அவ்வவற்றின் நிபந்தனைக்குள் அமையவேண்டுமென்ற கொள்கையைப் பின்பற்றினார். இவர் தாமே ஜெனீவாவில் ஒரு தேவப் பேராட்சியை அமைத்து, அந்நகர மக்களை அவ்வாட்சிக்குட்படச் செய்து, சிலகாலம் அங்கு வசித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். அரசியலமைப்புப் பற்றித் தனிப்பட்ட கருத்துக்களொன்றும் வற்புறுத்தவில்லையாயினும், பிரபுக்களாட்சிதான் அவருக்குப் பிடித்திருந்ததாகத் தெரிகிறது. அரசாங்கம் கொடுங்கோல் நடத்தத் துணிந்தால், அதைக் கண்டித்து அகற்ற மக்களுக்கு உரிமையுண்டென அவர் வாதாடினார். கால்வினின் கொள்கைகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் பின்பற்றப்பட்டன. சுதந்திர வளர்ச்சிக்கும் இவர் கொள்கைகள் மிகவும் ஊக்கமளித்தன. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோர் பல நாடுகளிலும் இவரது கருத்துக்களை மேற்கொண்டதால் அவர்களுடைய வீடுதலைக் கிணங்க, இவர் கொள்கைகளை அமைத்துக் கொண்டார். மேலும் கால்வின் திருச்சபையில் மக்களாட்சியை ஆதரித்தார். இக்கருத்து அரசாங்கத் துறையிலும் பரவியது.

16ஆம் நூற்றாண்டில் பொதுவுடைமைக் கருத்துக்கள் ஐரோப்பாவில் தலைதூக்கின. 'ஆனபாப்டிஸ்டுக்கள்' எனும் வகையினர், ஜெர்மனி, நெதர்லாந்து முதலிய நாடுகளில் இக்கொள்கையைக் கையாண்டு வந்தனர். அரசாங்கம் இவர்களை அடக்கிவிட்டமையால் மொரேவியாவில் குடிபுகுந்து, ஒரு நூற்றாண்டு வரையில் இவர்கள் தம் கருத்துப்படிப் பொதுவுடைமை அமைத்து ஆண்டு வந்தனர். மக்களின் பிரதிநிதிகளாக, முதியோர்களடங்கிய குழு ஒன்று ஆட்சி நடத்தியது. ஆங்கிலேயரான மோர் என்பவர் (1480-1535), பொதுவுடைமையை மேற்கொண்ட ஒரு புதுநாடு எவ்விதம் நடக்கலாமென்று தம் நூலில் எழுதினார்.

16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னனின் அதிகாரத்தைக் குறைக்கும் பொருட்டுச் சில கொள்கைகள் தோன்றின. இதற்கு டச்சு மக்களின் கிளர்ச்சி ஆதரவாயிருந்தது. இதன் பயனாகத் தேசிய சுதந்திரம், மதச்சுதந்திரம், தனி மனிதன் சுதந்திரம், இவைபற்றிய கொள்கைகள் தலையெடுத்தன. அரசாங்கத் துறையில் கூட்டுறவுக் கொள்கையை டச்சுக்காரர்கள் ஆதரித்தனர். ஆகவே, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோருக்கு ஒரு அடைக்கலமாக ஹாலந்து விளங்கியது.

மன்னனின் ஆதிக்கத்தைக் குறைக்கக் கருதி வாதாடியவருள் இராஸ்மசு என்பவர் (1466-1536) ஒரு பேரறிஞர். தலைமுறையாய் வரும் மன்னனாட்சியால் நிகழும் தீங்கையும், மக்களின் பிரதிநிதிச் சமூகங்களால் கிட்டும் நன்மைகளையும்பற்றி இவர் எடுத்து விளக்கினார். மேலும், அரசியல் ஒப்பந்தக் கொள்கைகள் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவின. ஹாட்மென் (1524-90) போன்றவர் இக்கொள்கையைக் கையாண்டுவந்தனர். மன்னனாட்சியைக் கண்டித்து எழுதிய அறிஞர்களில் புகழ் பெற்றவர் ஆல்தூசியசு (1557- 1638) என்பவர். அவர் அரசியல் ஒப்பந்தக் கொள்கையை நன்கு விளக்கினார். “மக்களுக்கும் மன்னனுக்கும் ஒப்பந்தம் உண்டு. அன்றியும் நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒப்பந்தத்தின்மேல்தான் அமையவேண்டியது” என்று கருதினார். இது கூட்டுமுறைக் கொள்கையை வலுப்படுத்தியது. மேலும், மன்னனின் அதிகாரம் மக்களிடமிருந்து வருவதேயன்றிக் கடவுளிடமிருந்தன்று என்று ஊக்கமாய் வற்புறுத்தினார்.

மன்னன் நிலைக்குப் பாதகமாக 16ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்களுள் மிக்க ஊக்கமுடையவர்கள் சமயச்-