பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

166

அரசியற் கருத்துக்கள்

சீர்திருத்த எதிரியக்கக்காரர்கள் என்ற ரோமன் கத்தோலிக்கர்களாவர். இவர்கள் மதஸ்தாபனங்களின் ஊழல்களையும் பூசல்களையும் அகற்ற முயன்றதோடு, மன்னனின் ஆட்சி நிபந்தனைக்குட்பட்டிருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இயேசு சங்கம் அமைத்து ஊழியஞ் செய்த இக்னேஷியஸ் லயோலா (1491-1556) அரசாங்கம் மனித அமைப்பென்றும், இலௌகிக நன்மையைக் கருதியே தோன்றியுள்ளதென்றும் கூறினார். ஆனால், மத விஷயத்தில் கிறிஸ்தவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்தவரென்றும், ஒவ்வொரு நாட்டுச் சட்டத்தைவிட உயர்வுற்றது இயற்கைச் சட்டந்தானென்றும், ஈசன் உள்ளத்தில் தோன்றியதென்றும் இவர் விளக்கினார்.

இந்த இயக்கத் தலைவர்களிடையே சில நுண்ணிய அரசியல் அறிஞர்கள் தோன்றினர். அவர்களுள் ஜூவான் மரியானா (Juan Mariana 1536-1624),சூவாரஸ் (Suaraz 1548 - 1617), ராபர்ட் பெல்லார்மின் (Robert Bellarmin 1542-1621) ஆகியோர் முக்கியமானவர்கள், சில கருத்துக்களில் வேற்றுமை இருந்த போதிலும் இயற்கைச் சட்டம், அரசியல் ஒப்பந்தம், மன்னனின் அதிகாரத்தைக் குறைப்பது முதலான விஷயங்களில் இவர்கள் யாவரும் ஒரே கொள்கையைத் தான் கையாண்டனர். கே.க.

17ஆம் நூற்றாண்டு : 17ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளிலும் ஒப்பற்ற அறிவு வளர்ச்சி தோன்றிற்று. முதன் முதலாக மக்கள் எதையும் தீர ஆலோசித்து முடிவுக்குவரும் விஞ்ஞான ஆராய்ச்சி முறையை மேற்கொண்டனர். ஹாப்ஸ், லாக், மில்ட்டன் போன்ற புகழ் பெற்ற அரசியல் அறிஞர்கள் மனித வருக்கத்தின் அரசியல் அறிவு வளர்ச்சிக்கு உதவி செய்திருந்தபோதிலும், அவர்களும் சிறிது ஒருசார்பானவர்களே. ஸ்பினோசா (Spinoza 1632-77) என்னும் அறிஞர் ஒரு தனி முறையில் அரசியல் கொள்கைகளை ஆராய்ந்தார். ஸ்பினோசா எழுதிய அரசியற் கட்டுரைகள் என்னும் நூலில் அரசியற் கலையைச் சமநோக்குடன் ஆராயவேண்டுமென்று கூறியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில் அரசியல் துறையில் இம்மாதிரியான கொள்கையைக் கையாண்டவர்கள் ஹாரிங்டன், ஸ்பினோசா, பூபண்டார்ப் (Pufendorf) என்னும் மூவர்.

இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டில் அரசியல் நிலையில் போர் நீடித்து நடந்தது ஸ்டூவர்ட் மன்னர்களின் வரம்பிலா ஆட்சியைத் திருச்சபைகளும், பார்லிமென்டும் எதிர்த்தன. ஐரோப்பாவிலிருந்ததுபோல் இங்கிலாந்திலும் இதன் விளைவாக மதச்சிறுபான்மையோர், பொது மக்களுக்கே ஆதிக்கமும், உரிமைகளும் இருக்க வேண்டுமென்று வாதாடினர். இதற்கு நேர்மாறாக I - ம் ஜேம்ஸ், "மன்னனே வரம்பிலா அதிகாரி; எவருக்கும் அவனை எதிர்க்க உரிமை இல்லை" யென்று கூறினான். மன்னன் கடவுளுக்கும் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவனென்றும், மக்களுக்கும் நீதிக்கும் புறம்பானவன் என்றும் கருதினான். மற்றும் மன்னனுக்கும் மக்களுக்குமிடையே ஒருவித ஒப்பந்தமும் இல்லையென்றும், மக்களுக்குக் கடமைகள் உண்டேயன்றி உரிமைகள் இல்லையென்றும் கூறினான். அரசன் தனது முடிசூட்டு வாக்குறுதிக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். இதற்குத்தான் தெய்விக உரிமைக்கொள்கை (Divine Right Theory) என்று பெயர். இக்கொள்கைகளை ஆங்கிலிகத் திருச்சபை (Anglican Church) முழு மனத்துடன் ஆதரித்தது.

பேக்கன் (1561-1626) டியூடர் (Tudor) அரசாட்சியைப் போற்றியுள்ளார். ஹாப்ஸ் (1588-1679) எழுதிய லெவையதன் (Leviathan) என்னும் நூல் இங்கிலாந்தில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. திருச்சபை அரசாங்கத்தின் ஒரு பகுதி. அரசாங்கமே சமூக ஒப்பந்தத்தினால் உண்டாயிற்று. சமூகமும், அரசாங்கமும் உண்டாவதற்கு முன்னால் மனிதன் இயற்கை நிலையில் இருந்தான். இந்நிலையை ஹாப்ஸ் எல்லோரும் எல்லோரோடும் செய்யும் போர்நிலை (State of war of all against all) என்றும், அந்நிலையில் நீதிமுறையின்மையால் மனிதனுடைய வாழ்க்கையே தனிமையாகவும், கேவலமாகவும் இருந்ததென்றும் கூறுகிறார். இக்கொடுமையான நிலையிலிருந்து விடுபட மக்கள் ஒன்று கூடித் தங்கள் இயற்கை உரிமைகளை நாடாளும் அதிபதியிடம் கொடுத்து அரசியல் ஆட்சிக்குட்பட்டனர். இப் வொப்பந்தத்தைத் தனிமனிதன் மீறினால், முன்போல் அராஜகமும் அதன் தீய விளைவுகளுமே உண்டாகும் என்று விளக்கினார். பலமான ஆட்சிமுறைக்கு ஹாப்ஸின் கொள்கை ஊன்றுகோலாயிற்று.

இச்சமயத்தில் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரித்தவர்களில் மில்ட்டனும் (1608-74), லாக்கும் (1632- 1704) தலைசிறந்தவர்கள். இவர்களின் தத்துவங்கள் மக்களிடையே மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தன. மதத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையே தொடர்பு இருத்தல் கூடாது. சுதந்திரம் மக்களின் பிறப்புரிமையாதலால், மில்ட்டன் பொதுமக்கள் ஆதிக்கத்தை ஆதரித்தார். மில்ட்டனுக்குப் பொதுமக்கள் சபைகளின் உபயோகத்தில் நம்பிக்கையில்லை. அவர் பிரதிநிதி ஆட்சியைவிட ஜனநாயக ஆட்சியே மேன்மையானதென்று கருதினார். பொதுமக்கட்குச் சுதந்திரம் இருத்தல் வேண்டுமென்பதும், தகுதியுடையவர்களுக்கே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதும் அவர் கொள்கைகள். லாக் எழுதிய முக்கிய நூல் சிவில் அரசாங்கத்தைப் பற்றிய கட்டுரை (Essay on Civil Government) என்பது. சமூக ஒப்பந்தம். இயற்கைச் சட்டம், இயற்கைநிலை, அரசாங்கத்தைச் சில சமயங்களில் எதிர்க்கும் உரிமை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது அவர் அரசியல் இலட்சியம். இயற்கை நிலையில் மக்கள் சமாதான உள்ளமும், பரோபகார எண்ணமும் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அந்த நிலையில் எது இயற்கைப்படி நியாயம் என்பதில் ஐயம் தோன்றியபோது, அதைத் தீர்க்க ஒரு பொது அமைப்பு இல்லாமையால், மக்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளும்படி நேர்ந்தது. இவ்வொப்பந்தத்தினால் மக்கள் தங்கள் இயற்கை உரிமைகளை நிலைநாட்டிக்கொண்டனர். அவ்வரசாங்கம் நீதி தவறி, மக்கள் உரிமைகளைச் சிதைக்குமாயின், மக்களுக்கு அதை எதிர்க்க உரிமையுண்டு என்று லாக் நம்பினார். லாக் அரசியல் இலாகாக்களின் அமைப்பைப் பற்றியும், அவைகளின் பிரிவினை, அதிகாரம் முதலிய வற்றைப் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மன்னர்களின் வரம்பிலா ஆட்சிக்கு ஏற்றதாக இருந்தது. இந்தச் சூழ்நிலை பொதுவாக அரசியல் கருத்துக்கள் உருப்பெற உதவாத போதிலும் ஸ்பினோசா, பூபண்டார்ப் போன்ற அறிஞர்கள் இக்காலத்தில் சிறந்த நூல்களை இயற்றினர்.

ஸ்பினோசா ஒரு போர்ச்சுகேசிய யூதர். தாய்நாட்டில் மதக் கொடுமையும், அரசாங்கக் கொடுமையும் தாங்காமல் ஹாலந்தில் குடிபுகுந்தார். தம் தாய்நாட்டில் அனுபவித்த கொடுமைகள் ஸ்பினோசாவின் கொள்கைகளை உருவர்க்கின. சமய விஷயத்தில் அறநோக்கத்தையும், அரசியலில் பிரபுக்கள் ஆட்சியையும் இவர் ஆதரித்தார். சமூக ஒப்பந்தம், அரசியல் ஆதிக்கம், தனி மனிதனின் சுதந்திரம் போன்ற விஷயங்களில் ஹாப்ஸுக்-