பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

167

அரசியற் கருத்துக்கள்

கும் இவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பினும், பல வேற்றுமைகள் இருந்தன.

பூபண்டார்ப் (1632-94) ஒரு ஜெர்மானிய அறிஞர். அவர் இயற்கை நிலையைப் பற்றியும், சமூக ஒப்பந்தத்தைப் பற்றியும், ஹாப்ஸ் போலவே கருத்துக் கொண்டவர். அவர் அரசியல் ஆதிக்கம், சர்வதேசத் தொடர்பு, இவற்றைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சிகள் செய்தார்.

18ஆம் நூற்றாண்டு: இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தலைசிறந்த அரசியல் நூல் எதுவும் இயற்றப்படவில்லை. ஐரோப்பாவில் சர்வதேசச் சட்டத்திலும், இங்கிலாந்தில் சமூக ஒப்பந்தக் கொள்கையை எதிர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக மன்னனும் அரசாங்கமும் ஒன்றாக எண்ணப்பட்டதால் ஆதிபத்தியத்தின் தன்மையும் அதன் இருப்பிடமும் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஆராயப்படவில்லை. ஆனால் இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புரட்சிகரமான கொள்கைகள் இப்பொழுதே விதைக்கப்பட்டன. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருச்சபையையும், பிற்பகுதியில் அரசாங்கத்தையும் பிரெஞ்சு ஆசிரியர்கள் எதிர்த்தெழுதினர். பிற்பகுதியில் ஆங்கிலேய அரசியல் முறைகளும் கொள்கைகளும் ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றன.

18ஆம் நூற்றாண்டில் இயற்கைச் சட்டத்திற்குத் தனிப்பெருமை ஏற்பட்டது. இக்காலத்து அரசியல்வாதிகளுக்கு வரலாற்று உணர்ச்சி இல்லை. புராதனப் பழக்க வழக்கங்களிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஓங்கியதால், ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல அரசியல் சட்டங்களைவிடப் பொதுவான இயற்கைச் சட்டமே மேல் எனப் பலர் வற்புறுத்தினர். அரசாங்கம் தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுதல் தவறென்றும், மக்களின் இயற்கை உரிமைகள் பராதீனப்படுத்தப்படாதவை என்றும் கூறினர்.

இந்நூற்றாண்டில் கிறிஸ்தியன் தாமசியஸ் (Christian Thomasius 1655-1728), கிறிஸ்தியன் வால்ப் (Christian Wolff 1679-1754) என்னும் இரண்டு ஜெர்மானிய ஆசிரியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சிக்கு உதவினர். இத்தாலிய சட்ட நிபுணராயிருந்த வீக்கோ (Vico 1668-1744) என்பவர் இயற்கைச் சட்டங்கள் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் ஏற்றவை என்பதையும், பகுத்தறிவுக்கேற்றவை என்பதையும் ஒப்பவில்லை. இதற்கு மாறாக அரசியல் கருத்துக்களும் ஸ்தாபனங்களும் ஒரு நாட்டு மக்களின் பண்புகளுக்கு ஏற்பவும், தேவைகளுக்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மாறுதலடையுமெனக் கருதினார். வீக்கோவின் கருத்துக்களைப் பிறகு மான்டெஸ்க்யூ (1689-1755) ஏற்றுக்கொண்டார். வரலாற்று வாயிலாகச் சமூகப் பிரச்சினைகளைக் கருதும் பழக்கம் முதன்முதலில் வீக்கோவால் துவக்கப்பெற்றது.

இங்கிலாந்தில் போலிங்புரோக் பிரபு (Viscount Bolinghroke 1678-1751) என்பவரும் டேவிடு ஹியூம் (David Hume 1711-1776) என்பவரும் அரசியல் துறையில் நூல்கள் செய்தனர். போலிங் புரோக்கின் கொள்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தன. மேலும் அவர் தாம் கூறிய கொள்கைகளை நடைமுறையில் கையாளவில்லை. அவர் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரித்ததுமல்லாமல், மக்களுக்கும் மன்னனுக்கு மிடையே ஓர் ஒப்பந்தம் இருப்பதாகவும் நம்பினார்.

ஹியூம் ஒரு சிறந்த அறிஞர்; அன்றியும் அக்காலத்து அரசியற் கொள்கைகளில் பெருங்கிளர்ச்சியையும் உண்டாக்கினவர். அவர் சமூக ஒப்பந்தக் கொள்கையையும் மதமே அரசியலைவிடச் சிறந்ததென்ற கொள்கையையும் மறுத்து, அரசியற் கொள்கைகள் வரலாற்றையும், உளவியலையும் அடிப்படையாகக்கொண் டிருக்க வேண்டுமென்று கூறினார். மக்கள் இயற்கையாகத் தந்நலமும் பொறாமைக்குணமு முடையவர்களாதலால் அவர்களுக்குக் கட்டுப்பாடு தேவையாக இருக்கிறது. இக்கட்டுப்பாடு, சட்டங்கள் மூலமாகவும் நீதிபதிகள் மூலமாகவும் நிறைவேற்றப்படுமாதலால், இவற்றிற்கெல்லாம் அரசாங்கம் இன்றியமையாதது. எனவே அரசாங்கம் மக்கள் நன்மைக்குப் பயன்படுவதால் அவசியமானதேயன்றி, ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதில்லை என்றும், அரசாங்க அதிகாரம் நாட்டின் செல்வப் பங்கீட்டைப் பொறுத்தது என்றும் ஹியூம் கூறினார். இங்கிலாந்தில் காமன்ஸ் சபையின் அதிகாரம் பெருகுவதைக் கண்டு, அரசியல் சங்கங்களின் அவசியத்தையும், பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியத்தையும் பற்றி அவர் விளக்கினார்.

இச்சமயம் ஆங்கிலேயர்களிடையே ஜனநாயகக்கொள்கைகள் பரவி, அவர்கள் தங்கள் சட்டசபைப் பிரதிநிதிகளை அடக்கவும் ஆரம்பித்தனர். தனித்துவம் (த.க.) என்றும், பயன் முதற்கொள்கை (த.க.) என்றும் இரண்டு முறைகளில் இயற்கை உரிமைகள் பற்றிய கருத்து இங்கிலாந்தில் கையாளப்பட்டது.

இவ்விரண்டாவது முறையை மேற்கொண்டவர்களில் பெந்தாம் (1748-1832), ஆஸ்ட்டின் (1790-1859), ஜான் ஸ்டூவர்ட் மில் (1806-73) என்பவர்கள் சிறந்தவர்கள். இவர்கள் இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம், இயற்கைச் சட்டம், இயற்கை உரிமைகள் என்பவற்றைப் பற்றிக் கூறினார்கள்; அரசாங்கம் சமூக நலத்திற்காக ஏற்பட்டதால் அதற்கு முழு அதிகாரமும் இருக்கவேண்டும் என்றும், அதை எதிர்ப்பது சட்டப்படி முறையன்று என்றும் சொன்னார்கள். பெந்தாம் அரசியலையும் சட்டங்களையும் சீர்திருத்தும் வழிகளைத் தாம் இயற்றிய பல நூல்களில் விரிவாகக் கூறுகிறார். அவருக்குப் புராதனப் பழக்க வழக்கங்களிலும் தனி இனப் பண்பாடுகளிலும் பற்றில்லை. அரசாங்கத்திற்கு அளவிறந்த அதிகாரம் கொடுக்க வேண்டுமென்றும், அரசியல் அமைப்பு எழுதப்பட வேண்டியது அவசியமாயினும் அதைத் திருத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும் நம்பினார். தனி மனிதனின் உரிமைகளைக் காப்பது அரசாங்கத்தின் கடமையன்று. ஒவ்வோர் உரிமைக்கும் ஏற்ற கடமை இருக்கின்றது. அக்கடமையின் அளவை அதனுடைய பயனேயன்றி வேறெதுவுமில்லை. தனி மனிதனின் உரிமைகள் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டவை. அவை சட்ட உரிமைகள், அற உரிமைகள் என இரண்டு வகை. தனி மனிதனுக்கு மூன்று வகைக் கடமைகள் உள்ளன. அவை அரசியல், சமய, அறக்கடமைகளாம். அவனுக்குச் சட்டப்படி அரசாங்கத்தை எதிர்க்க உரிமையில்லை; சட்டப்படி அரசியலுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவே கடமைப்பட்டவன் என்று பெந்தாம் கூறினார். மேலும் ஜனநாயக ஆட்சியை மிகவும் போற்றி, அதற்குத் தேவையான ஆண்டுப் பிரதிநிதி சபை, வாக்குச் சீட்டு முறையில் தேர்தல், வயதுவந்தோர் வாக்குரிமை என்பவைகளை அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் கூறினார். பெந்தாம் கொள்கைகள் பலவற்றை அனுசரித்த ஆஸ்ட்டின் சட்டத்தைத் தெய்விகச் சட்டம், மானிடச் சட்டம் என்று இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளார். ஆதிபத்தியத்தைப் பற்றி இவர் வகுத்த முடிவுகள் அரசியல்