பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

171

அரசியற் கருத்துக்கள்

ஒருவனை ஏற்படுத்தி, அவனுக்குக் கூலியாக நிலவரியும் வேறு வரிகளும் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அப்பொழுதே அரசனுடைய உதவிக்காகப் பிரமன் தன் ஒளியினின்று தண்டம் (செங்கோல்) ஒன்றைப் படைத்து, அதை நடத்தும் முறையை விளக்கும் தண்டநீதி என்னும் நூலையும் இயற்றினான். இந்தத் தண்டம் தருமத்தின் உரு ; உபநிஷத்துக்களில் எங்கும் நிறைந்ததாகக் கூறப்பட்ட பிரமத்தின் அமிசம்; இதன் வலியே அரசன் வலி; இதற்கிணங்கியே குடிகள் சமாதானமாக வாழ்கிறார்கள். ஆனால், அரசன் முறை தவறினால், தண்டம் அவனுக்கு உதவாமல் போவதன்றி, அவனைக் குடும்பத்துடனே நாசமாக்கிவிடும்; வேனன் என்னும் கொடிய அரசன் பிராமணர் மந்திரங்களால் ஏவப்பட்ட புல் ஆயுதங்களால் இறந்துபட்ட கதையும் இக்கருத்தையே வற்புறுத்துவதாகும்.“

பொதுவாக இராச்சியங்கள் அரசராலேயே ஆளப்பட்டுவந்தபோதிலும், சில காலங்களிலும் சில நாடுகளிலும் அரசனில்லாத குடியரசு நிலவியிருந்தது. இவைகளைச் சங்கம், கணம், அரட்டம் என்னும் பெயர்களால் குறிப்பிடுவர். இவை முக்கியமாக வட இந்தியாவில் இமயமலைச் சாரல்களிலும், கோசல நாடு, மிதிலை நாடு, பஞ்சாப், சிந்து முதலிய பகுதிகளிலும் நிறைந்திருந்தன. இவைகளைக் குறித்து ஒரு தனி அத்தியாயம் சாந்தி பருவத்தில் உண்டு. இவைகளின் முக்கியக் குறைகள் ஒற்றுமைக் குறைவும், முக்கியமான ஆலோசனைகளையும் உபாயங்களையும் இரகசியமாக வைத்துக்கொண்டு நிறைவேற்ற இயலாததுமே என்று இந்த அத்தியாயம் குறிக்கும். கௌடிலியன் தனது நூலில் அரசர்கள் இந்தக் கணராச்சியங்களைச் சீர் குலைத்துத் தம் வசப்படுத்திக்கொள்வதற்கான பல சூழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறான்.

அரசன் தனது பட்டாபிஷேக சமயத்தில் எல்லோரையும் சமமாகக் காப்பாற்றுவதாகவும், வருணாச்சிரம தருமங்களையும், சாதி, குலம், தொழில், ஊர் முதலியவற்றின் பரம்பரை வழக்கங்களையும் காப்பாற்றுவதாகவும் வாக்களிப்பதுண்டு. இதற்கேற்பத் தமிழ்நாட்டுச் சாசனங்கள் பலவற்றில் அரசன் தரும மகாராஜன் எனப்படுகிறான். மனு முதலிய பண்டையோர் வகுத்த தருமத்திற்கு முரண்பட்ட சட்டம் யாதொன்றும் அரசன் இயற்றக்கூடாது; அப்படித் தவறாக இயற்றினால் குடிகள் அந்தச் சட்டங்களை அவமதிக்கலாம். ஆனால், கௌடிலியனுடைய நூலில் மட்டும் அவசியமானபோது அரசனுடைய ஆணை பழைய வழக்கங்களையும் மாற்றலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது; இதற்குக் காரணங்கள் மௌரிய சாம்ராச்சியத்தின் புதுமையும், அதன் விசேஷ் ஆட்சித்திறனும், அக்காலத்தில் சிரியா, எகிப்து முதலிய நாடுகளில் கிரேக்க அரசர்கள் நடத்திவந்த ஆட்சிமுறைகளுமே என்பது ஊகிக்கப்படுகிறது. கௌடிலியன் பழைய இந்திய சாஸ்திரங்களையும் தன் காலத்து வேற்றுநாட்டுப் பழக்கங்களையும் சேர்த்து ஆராய்ந்து தன் நூலை யியற்றியதாகக் கூறி யிருப்பதும் இதையே வற்புறுத்தும்.

இராச்சியமென்பது ஏழு உறுப்புக்கள் அடங்கியது. அவையாவன: அரசு, அமைச்சு, நட்பு, பொக்கிஷம், நாடு, அரண்,படை என்பன. “படைகுடி கூழமைச்சு நட்பரணாறு முடையா னரசரு ளேறு“ என்பது திருக்குறள் (381). அரசன் சிறுவயதில் கல்வி பயின்று, நன்னடை வாய்ந்து, பெரியோரையும் கற்றாரையும் மதித்து, நீதிமுறை தவறாது அரசியல் நடத்தவேண்டும். தன் உதவிக்காகத் தகுந்த அமைச்சரை வேண்டிய அளவில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அமைச்சரில் அக்காலத்திலும் இரு திறத்தாருண்டு. முதலாவது மந்திரிசபையின் அங்கத்தினர், தற்காலம் காபினெட் (Cabinet) மந்திரிகளெனப்படுவர். முக்கியக் காரியங்களில் அவர்கள் யோசனைப்படியே அரசன் நடப்பது நல்லது; ஊரில் இல்லாமல் வெளி வேலையில் அமர்ந்திருக்கும் மந்திரிகளின் கருத்தைக் கடித மூலம் அறிய வேண்டுவது அரசன் கடமை என்பது கௌடிலியன் கருத்து. மற்றொருவகை அமைச்சர் மந்திரிசபையின் தீர்மானங்களை நிறைவேற்றுபவர். இவ்விருதிறத்தாரையே மந்திரி சசிவர், கரும சசிவர் என்று முறையே கி.பி.150-ல் ஒரு சாசனம் குறிப்பிடுகிறது. பொதுவாக அரசனுக்கு அண்டைநாட்டரசன் பகைவனாகவும், அவனுக்கு அடுத்த அரசன் நட்புப் பூண்டவனாகவும் இருப்பானென்பது நீதிநூற் புலவரின் கருத்து. இதற்கிணங்கவே, அயல்நாட்டரசனுடன் உறவு முறைகள் பொதுவாக நடத்தப்பட்டு வந்தன. ஓர் இராச்சியமும் அதைச் சூழ்ந்து அதனுடன் இவ்வாறு உறவாடிக்கொண்டிருக்கும் நாடுகளும் சேர்ந்தது ஒரு மண்டலமெனப்படும். மேலும் ஓரரசன் எப்பொழுதும் பிற நாடுகளை வெல்லும் நோக்கத்துடனே இருத்தல் நலமெனக் கருதப்பட்டது. இதனால் விளைந்த போர்கள் பல. எப்போதும் குறையாத பொக்கிஷமே அரசனுக்கு முக்கிய வலி; குடிகளுக்குத் துன்பமின்றி எளிதாக வரி வசூலிப்பது சிறந்தது. கௌடிலியன் காலத்தில் அரசாங்கமே வரி வசூலிப்பதைத் தவிரப் பல தொழில்களையும் வர்த்தகத்தையும் நடத்தி லாபமடைந்ததாகக் கூறலாம். வரி ஏற்படுத்தி வசூலிக்கும் அதிகாரம் அரசனுக்கு மட்டுமல்லாமல், ஊர்ச்சபைகள், தொழிற் சங்கங்கள் முதலிய ஸ்தாபனங்களுக்கும் உரித்தாகும். நாட்டின் வளமும், குடிகளின் செல்வமுமே அரசனுடைய மேன்மைக்கும் செல்வாக்குக்கும் அடிப்படையாம். ஆகையால், நீர்வளம், நிலவளம் முதலியவற்றைப் பெருக்கும் வழிகளை அரசன் கையாளவேண்டும்; தொழில்களும் வாணிபமும் ஓங்கி வளரவேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும். உள் நாட்டின் அமைதிக்கும், வெளிப்பகை தன்னை மிஞ்சாதிருப்பதற்கும் வேண்டிக் கோட்டை கொத்தளங்களை அமைத்து, அவைகளைக் காத்து, வேண்டியபொழுது போர் புரியவும் வேண்டிய படைகளை ஏற்படுத்திக் கொள்ளுவதும் அரசனுடைய முக்கியக் கடமை. கோட்டைகளின் வகைகள், படைகளின் விதங்கள், படைக்கலங்கள், படைவகுக்கும் வழிகள் முதலிய பல பொருள்களைப்பற்றி நீதிநூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

முற்கூறப்பட்ட பழைய நூல்களைத் தவிர, பிற்காலத்தில் ஏற்பட்ட நூல்கள் பல உண்டு. புராணங்களில் நீதி விஷயங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. சிறப்பாக அக்கினி புராணத்தில் இவற்றைக் காணலாம். பஞ்ச தந்திரமும் இதோபதேசமும் நீதிகளைக் கதைகள் வழியாக எளிதில் விளக்கிச் செல்கின்றன. காமந்தகீய நீதிசாரம் பொதுவாகக் கௌடிலிய அர்த்த சாஸ்திர முறையைத் தழுவிய நூல். சோமதேவ சூரி கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றிய 'நீதி வாக்கியாமிருதம்' என்ற நூல் சமண முறையில் அரசியல் வழிகளை விவரிக்கும். பிற்கால நீதி நூல்களில் மிக்க பேர் பெற்றுள்ளது சுக்கிர நீதி சாரம்.

சங்க காலந்தொட்டு உள்ள தமிழ் நூல்கள் பலவும் இதேமாதிரியான கருத்துக்களையே பலவாறாக எடுத்துக் கூறுகின்றன.

தமிழ்நாட்டின் சிறப்புக்களில் ஒன்று ஆதிகால முதலே இங்கு நன்றாக நிலைபெற்றிருந்த கிராம ஆட்சி. மன்றமும் பொதியிலும் புறநானூறு முதலான நூல்-