பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

172

அரசியற் கருத்துக்கள்

களில் பலவாறாகச் சிறப்பிக்கப்பெற்றிருக்கின்றன. அக்காலத்திலும் பார்ப்பாருக்கு அரசியல் துறைகளில் ஏற்பட்டிருந்த அனுபவமும் பெருமையும், "பார்ப்பார்த் தப்பிய கொடுமை" (புறம் 34), "நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்" (புறம் 43) என்பன போன்ற பல அரிய சொற்களா லறியக்கிடக்கின்றன. இனி அரசனைச் சார்ந்துள்ள ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரசியலங்கங்கள் என்பது சிலர் கருத்து. ஆனால், அவை அரசனுடைய பதவியைக் குறிக்கும் பரிவாரங்களைத் தவிர வேறல்ல என்பர் மற்றொரு சாரார். திருக்குறளில் பொருட்பால் என்னும் பகுதியின் அரசியல் அங்கவியல் என்னும் இருபிரிவுகளிலும் நீதிமுறைகளைத் திருவள்ளுவர் விளக்கிச் செல்கிறார். சிறு நீதி நூல்கள் பல தமிழில் உண்டு. தவிரவும், சங்க நூல்களிலும், கம்பராமாயணம்போன்ற பேரிலக்கிய நூல்களிலும், அரசியல் துறைகளைக் குறித்த பல கருத்துக்களை ஆங்காங்கு நுணுகி ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும். உதாரணமாகப் புறநானூற்றில் காணப்படும் ஒரு சிறு பாடல் பின்வருமாறு: "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே - மன்னன் உயிர்த்தே மலர் தலை யுலகம் - அதனால், யானுயிரென்ப தறிகை - வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" (புறம்.186).

இந்தியாவில் முகம்மதியர் அரசாட்சி யேற்பட்டபின் அரசருக்கும் குடிகளுக்குமுள்ள தொடர்பு பல இடங்களில் அற்றுப்போயிற்று. இஸ்லாமிய அரசியல் கொள்கை, "இராச்சியம் முஸ்லிம்களுக்கே உரியது : ஏனையோர் ஐசியா என்னும் தனி வரியைச் செலுத்தித் தாழ்மையுடன் நடக்கவேண்டும்" என்பது. அதனாலேதான் விஜயநகர அரசர்கள் தலைமுறை தலைமுறையாக அவர்களுடன் போராடித் தென்னாட்டில் இந்து தருமம் தலைசாயாமல் காத்து வந்தனர். இத் தொழிலில் ஈடுபட்ட மன்னருள் பேர்பெற்ற கிருஷ்ணதேவராயர் தம்முடைய ஆமுக்தமால்யத என்னும் நூலில் ஸ்ரீ ஆண்டாள் கதையை விரித்துக் கூறுவதோடு தமது அரசியல் முறைகளையும் விவரமாக எடுத்துக் கூறியிருக்கிறார். மொகலாய சக்கரவர்த்தி அக்பர் மட்டுமே முஸ்லிம் கொள்கையை மாற்றி, இந்துக்களும் முஸ்லிம்களும் இராச்சியத்தில் சம உரிமைகளைப் பெறவேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. கே.ஏ.நீ.

13ஆம் நூ. முதல் 18ஆம் நூ.வரை: கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் முகம்மதியரது படையெடுப்பால் வட இந்தியாவில் நிறுவப்பட்ட ஆட்சிக் காலத்தில் தனிச்சிறப்புள்ள அரசியல் கோட்பாடுகள் ஒன்றும் வளரவில்லை. குழப்பமான அரசியல் நிலையொன்று இருந்தமையால்,பிற நாட்டவர்கள் இந்தியாமீது படையெடுப்பது எளிதாயிருந்தது. வெளிநாட்டாருடைய ஆக்கிரமிப்பினால் தங்களுடைய நலன்கள் கெடக்கூடுமே என்று அஞ்சிய ஆட்சியாளர்களே வெளிநாட்டுப் படையெடுப்புக்களை எதிர்த்தவர்கள். இப்போர்களில் பொது மக்களுக்கு எவ்விதமான அக்கறையும் இருந்ததாகக் கருத இடமில்லை.

முகம்மதியர் ஆட்சியில் சமய அடிப்படையில் மக்கள் பாகுபாடு செய்யப்பட்டுப் பிரித்தாளப்பட்டனர் என்பதற்கு ஐசியா என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டாகும். அக்பர் ஒருவர் தாம் இலௌகிக முறையில் ஆட்சி நடத்தியவர். அவருடைய பேரன் மகனான ஔரங்கசீப் மறுபடியும் சமயச் சார்பான ஆட்சியை நிறுவி, இந்துக்களின் பகைமையைத் தேடிக்கொண்டார். அலாவுதீன் கில்ஜி (1296-1316) தாம் செய்ததெல்லாம் மக்களுடைய நன்மையைக் கருதியே என்று கூறிக்கொண்டார். ஆனால் அவர் தமது அரசியல் அதிகாரத்திற்கு எல்லைவிதிக்கக் கூடியவர்கள் உண்டு என்று ஒப்புக்கொள்ளவில்லை. தாம் II-ம் அலெக்சாந்தர் என்றும், முகம்மது நபியென்றும் கூறிக்கொண்ட அலாவுதீன் தம் நண்பர்களுடைய அறிவுரைக் கிணங்கியே அப்பட்டங்களை நீக்கினார். முகம்மது பின் துக்ளக் (1325- 51) முதலிய எதேச்சாதிகாரிகளுடைய ஆட்சியினால் மக்கள் வருந்தி மடிந்தனரேயன்றிக் கொடுங்கோலுக்குப் பரிகாரம் காணவேண்டும் என்னும் விருப்பமோ, வலிமையோ, கொள்கையோ இல்லாமலே இருந்தனர்.

மொகலாயர் ஆட்சியில் அரசனுடைய அதிகாரங்களைப் பற்றியும் இராச்சியத்தின் கொள்கைகளைப் பற்றியும் புதுக்கருத்துக்கள் அக்பருடைய ஆட்சிக் காலத்தில்தான் தோன்றின (1556-1605). அக்பர் சமய அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல், இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஐக்கியப்படுத்துவதில் ஈடுபட்டார். ஆசியர்களையும் ஐரோப்பியர்களையும் ஐக்கியப்படுத்த விரும்பிய அலெக்சாந்தரைப்போல அக்பர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஐக்கியப்படுத்த விரும்பி, மான்சிங், டோடர்மால் முதலிய இந்துக்களைப் பெரிய பதவிகளில் அமர்த்தினார்; இந்துக்களுடைய பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டார்; எக்காரணத்தால் அவர் இக்கொள்கைகளைக் கையாண்டபோதிலும், இந்து-முஸ்லிம் ஐக்கியம் பெரியதோர் அளவில் அவர் காலத்தில் ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. தாமே கடவுளின் பிரதிநிதி என்று அக்பர் கூறிக்கொண்டது இந்து முஸ்லிம் கொள்கைகள் இரண்டிற்கும் பொருத்தமாயிருந்தமையால் அக்கூற்றில் மறுக்கத்தக்கதாக அக்காலத்தவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

வட இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பரவி வந்த காலத்தில் இஸ்லாமின் ஆதிக்கம் மாலிக்காபூரின் படையெடுப்புக்குப்பின் தென்னாட்டிலும் புகுந்து, இந்துக்களுக்குத் தாங்க முடியாத ஒரு நிலைமையை உண்டாக்கவே, இந்துக்களில் சிலர் விஜயநகர இராச்சியத்தை அமைத்தனர். விஜயநகர மன்னர்கள் இஸ்லாமிற்கு எதிராகவோ, அவ்விராச்சியத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு விரோதமாகவோ ஆட்சி நடத்தவில்லை என்று கூறப்படுமாயினும், அகமத்நகர், பாமினி முதலிய முஸ்லிம் இராச்சியங்களை அவர்கள் எக்காலத்திலும் எதிர்த்துக்கொண்டே வந்தனர் என்பதும், சுற்றியிருந்த முகம்மதிய இராச்சியங்களைத் தங்களுடைய இயற்கை எதிரிகள் என்று கருதினர் என்பதும் வரலாற்று உண்மையாம். விஜயநகர மன்னர்களில் தலைசிறந்தவரான கிருஷ்ணதேவ ராயர் தாம் இயற்றிய ஆமுக்தமால்யத என்னும் நூலில் பல அரசியல் கருத்துக்களையும் கூறியுள்ளார். இயற்கையாகவே ஒன்றற்கொன்று பகைமை கொண்டாடி வந்த இந்து - முஸ்லிம் இராச்சியங்களுக்கிடையே தலைக்கோட்டையில் நிகழ்ந்த போர் (1565) முஸ்லிம்களின் போர்க்கள வெற்றியை நிலைநாட்டிற்று.

அக்பருடைய அரசியல் நன்னோக்கம் அவருடைய பின் தோன்றல்களிடம் காணப்படவில்லை. ஔரங்கசீப் தமது ஆட்சியில் சமயப் பிரச்சினையை அளவிற்கு மிஞ்சிப் புகுத்தியது மொகலாய இராச்சியமே அழிவடையக் காரணமாயிற்று. நாட்டின் பல பகுதியினரும் முஸ்லிம்களுடைய ஒருதலைச் சார்பான ஆட்சியை எதிர்க்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மொகலாய ஆட்சியை எதிர்த்தவர்களில் மகாராஷ்டிரர்கள் முக்கியமானவர்கள்.

சிவாஜியின் (1664-80) தலைமையின் கீழ் மகாராஷ்டிரர்கள் அரசியல் நோக்கத்தால் மொகலாய