பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

175

அரசியற் கருத்துக்கள்

யிருந்தது. ஆயினும் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவு காந்தியத்திற்கே இருந்தது குறிப்பிடத்தக்கது.

1930க்குப் பிறகு இந்திய அரசியலில் தோன்றிய முக்கியமான கருத்துக்கள் சோஷலிசமும் கம்யூனிசமும் ஆம். இவற்றினிடையே கொள்கையளவில் வேறுபாடு இருக்க முடியாதாயினும் செயல் முறையில் வேறுபாடு உண்டு. உலகயுத்த காலத்தில், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளில் பரவியிருந்த பாசிசம், ரஷ்யக்கம்யூனிசம், அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகம், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியக் கொள்கை, அக்கொள்கையை எதிர்த்துக் கீழ்நாடுகளில் எங்கும் தோன்றிய தேசியக் கிளர்ச்சி முதலிய கருத்துக்கள் எல்லாம் இந்திய அரசியல் வாதிகளின் மன நிலையை ஊக்கின. யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார நிலைமையும் சோஷலிசக் கருத்துக்களுக்கு ஓரளவு ஆதரவு தேடிற்று. 1947-ல் ஆங்கில ஆட்சி நீங்கியபிறகு காங்கிரசின் முக்கியத் திட்டமாகிய அன்னியராட்சி ஒழிப்புக்கு அவசியமும் நீங்கிற்று; சமூக, பொருளாதாரத் துறைகளில் அரசியல் கட்சிகளின் நாட்டம் சென்றமையின், பொருளாதாரத் திறமையை வற்புறுத்திக் கூறும் சோஷலிசக் கருத்துக்கள் அதிகமாக நிலவத் தொடங்கின.

1948-லிருந்து 1950 வரையில் இந்திய அரசியலமைப்பை நிருணயிக்கப் பணி செய்துவந்த அரசியல் நிருணய சபையார் பிரிட்டிஷ் பார்லிமென்டின் ஜனநாயக முறையைப் பின்பற்றி இந்திய அரசியல் நிருவாகத்தை அமைக்க முற்பட்டமை, பார்லிமென்டு முறையில் அவர்களுக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்திற்று. இவ்வரசியலமைப்புச் சட்டத்தில் சமூக, பொருளாதார அடிப்படை உரிமைகளைப்பற்றிக் கூறியிருப்பது சென்ற ஒரு நூற்றாண்டாகவே இந்தியாவில் ஏற்பட்டுவந்த அரசியற் கோட்பாட்டு வரலாற்றின் பரிணாம் முடிவு என்று கூறலாம்.

அரசாங்க நிலையில் பார்லிமென்டு ஜனநாயக முறை நடைமுறையில் இருந்து வருகிறதென்பது உண்மையேயாயினும், இட சாரிக் கருத்துக்கள், வல சாரிக் கருத்துக்கள் என இருவகை அரசியற் கருத்துக்கள் நிலவத் தொடங்கியுள்ளன. பெரிய அளவில் இப்பிளவு உருக்கொள்ளவில்லையாயினும், 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை ஓர் அளவையாகக் கொண்டு காண்போமாயின் இப்பிளவு நன்கு ஊன்றியிருப்பது தெரிய வரும். வே.தி.

தமிழ் அரசியற் கருத்துக்கள்: தமிழ் நாட்டில் முற்காலத்தில் நடைபெற்றது முடியரசு. நாட்டில் வாழும் குடிகளுக்கு அரசனே உயிர் என்னும் கருத்தைப் பழைய தமிழ் நூல்களிற் காணலாம். பசியும் பிணியும் பகையும் நீக்கிக் குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்புடையவன் அரசன். குடிகளைத் துன்புறுத்தும் பகைவர் நாட்டின் உள்ளேயும் இருப்பர்; வெளியேயும் இருப்பர். நாட்டின் உள்ளேயிருந்துகொண்டு, கொலையுங் கொள்ளையுங் கொடுமையும் புரிவோரை அடியோடு அழித்தல் அரசன் கடமை. பசும்பயிர் செழித்து வளர்வதற்காக அதனிடையே முளைக்கும் களையைப் பறித்தெறிதல் போன்று, நாட்டிலே குடிகள் நலமுற்று வாழ்வதற்காக அரசன் கொடியவர்களைக் கொன்று ஒழித்தல் வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து (திருக் குறள் 550). கள்வர்க்குக் கொலைத்தண்டனை விதித்தல் முறையாகக் கருதப்பட்டது.

இவ்விதம் பகைவரது கொடுமையாலும் பசிநோய் முதலியவற்றாலும் குடிகள் வருந்தாமற் பாதுகாப்பவன் அரசனே யாதலால் காவலன் என்னும் பெயர் அவனுக்கு அமைவதாயிற்று. காவலன் என்பவன், தன்னாலும் தன் பரிசனத்தாலும் பகைவராலும் கள்வராலும் பிறவுயிர்களாலும் உண்டாகும் அச்சத்தை நீக்கி, அறத்தைக் காப்பவன் என்று சேக்கிழார் கூறுகின்றார். (பெரிய. திருநகரச் சிறப்பு: 36). எனவே, மற்றப் பகையைப் போக்கி, அறப்பயனை நாட்டில் விளைப்பவனே காவலன் ஆவான். 'அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்' என்பது பழமொழி. மன்னன் அறநெறி தவறாமல் ஆண்டால் மழை தப்பாமல் மழை பெய்யும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. மழை பொய்த்தாலும், விளைவுகுறைந்தாலும், அரசனை உலகம் பழிக்கும் என்று புறநானூறு (35) கூறும்.

நீதி செலுத்தும்பொழுது இன்னான் இனியான் என்று அரசன் பார்ப்பதில்லை ; குலத்தையும் குடிப்பிறப்பையும் கருதுவதில்லை. சோழ நாட்டை ஆண்ட மனுச் சோழன் ஒரு பசுவின் கன்றைக் கொன்ற அரசிளங் குமரனைத் தன் அருமை மைந்தன் என்றும் பாராமற் கொன்று நீதியின் செம்மையை நிலைநிறுத்தினான். இச்சோழனைப்போலவே பாண்டியன் நெடுஞ்செழியனும் தான் ஆராயாமற் கோவலனைக் கொன்றதற்காகத் தன்ணுயிரை விட்டான். பாண்டி நாட்டில் "வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது" என்று புகழ்ந்தான் சேரன் செங்குட்டுவன்.

இத்தகைய மன்னருக்கு நன்னெறி காட்டும் பொறுப்புடையவர்கள் அமைச்சர்களே யாவர். அமைச்சரை உள்ளிட்ட ஐம்பெருங்குழுவினர் அரசாங்கத்தில் பணி செய்தனர். மன்னரே தமக்கேற்ற அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். நாட்டில் வாழும் குடிகளுள் நல்லறிவும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களே பெரும்பான்மையாக அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்கள் என்பது தெரிகிறது. "அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்று பாண்டியன் நெடுஞ்செழியன் (புறம்.183) கூறுகிறான். இவ்வாறு அரசன் ஆராய்ந்தெடுத்த அமைச்சர்கள், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளை ஆராய்ந்து, தெளிந்து, நேர்மையாக மன்னனிடம் எடுத்துரைப்பார்கள் ; அரசன் தம் கொள்கையைக் கொள்ளுவானோ அன்றித் தள்ளுவானோ என்று ஐயுற்று நெஞ்சம் குலைய மாட்டார்கள். இவ்வாறு இடித்துரைக்கும் அமைச்சரைத் துணைக்கொண்ட மன்னனை எவரும் கெடுக்க முடியாது என்றும், அன்னாரைத் துணைக்கொள்ளாத அரசன் நெறியல்லா நெறிச் சென்று கெடுவான் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (447, 448) அறத்தை அடிப்படையாகக்கொண்ட அரசு நல்லமைச்சரை நாடும்; மறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு போலி அமைச்சரைப் பொறுக்கிக் கொள்ளும்.

குடிகளைக் காப்பாற்றும் மன்னனைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதினர் தமிழ் நாட்டார். இறைவன் என்ற சொல் கடவுளையும் குறிக்கும், அரசனையும் குறிக்கும். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்றார் வள்ளுவர். எல்லோருக்கும் அரசனே தெய்வம் என்றார் குமரகுருபர அடிகள்."நாடாளும் அரசனிடம் தெய்வ ஒளி உண்டு; உலகத்தைக் காப்பது அவ்வொளியே" என்பது தமிழ் நாட்டார் கொள்கை. நம்மாழ்வாரும் " திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே " என்றுரைத்தனர். ஆகவே, "அரசனே அச்சந் தீர்ப்பவன்; அறங்காப்பவன்; முறை செய்பவன் ; குறைதீர்ப்பவன்;

அவனே இறைவனாகும்" என்பவை பண்டைத் தமிழர் அரசியற் கொள்கைகள்.