பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரணிடுதலும் முற்றுகையும்

180

அரணிடுதலும் முற்றுகையும்

இன்னொரு நேர் குத்தான சுவர் எழுப்பப்பட்டது. இது எதிர்ச்சுவர் எனப்படும். குழியினால் விளையும் தடை இதனால் இன்னும் அதிகமாகியது. குழியிலிருந்து வெட்டி யெடுக்கப்பட்ட மண்ணை மறுபுறத்தில் கொட்டிச் சரிவு குறைவான மேடொன்றை அமைத்தார்கள்.

கொத்தளங்கள் கொண்ட அரண்
ரா : ராம்பர்ட்
சு : சுவர்
எ : எதிர்ச் சுவர்
கு : குழி
மூ : மூடிய வழி
ச : சரிவு மேடு

இது சரிவு மேடு (Glacis) எனப்படும். முற்றுகையிடும் படையினர் இதன்மேல் வரும்போது கோட்டைக்குள்ளிருப்போர் அவர்களை நோக்கி எளிதில் சுட ஏற்றவாறு இம்மேடு அமைந்திருந்தது. இச்சரிவு மேட்டிற்குப் பின்னால் சிறுவழி யொன்றைத் தரை மட்டத்தில் அமைத்து முற்றுகையிடப்படும் படைகள் குழியைத் தாண்டிவந்து எதிரிகளைத் தாக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டது. எதிரிகள் இதைத் தாக்காதவாறு மூடப்பட்டிருந்ததால் இது மூடிய வழி (Covered Way) எனப்படும். இம்முறை ஐரோப்பிய நாடுகளில் சுமார் மூன்று நூற்றாண்டுகள் வரை வழக்கத்தில் இருந்தது. காலஞ் செல்லச் செல்ல இதன் அமைப்புப் பெரிதும் சிக்கலானதாயிற்று.

அரணிடும் முறையிலும், முற்றுகைக் கலையிலும் தேர்ச்சியும் அனுபவமும் மிக்க அறிஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுள் வாபன் (Vauban 1633-1707) என்ற பிரெஞ்சுப் பொறியிய லறிஞர் குறிப்பிடத் தக்கவர். இவர் தமது அரசரான XIV-ஆம் லூயிக்குப் பல கோட்டை அரண்களை அமைத்ததோடு 48 முற்றுகைகளை வெற்றிகரமாக நடத்தினார். இவர் அமைத்த கோட்டைகளில் 1700-ல் அமைக்கப்பட்ட லில்லி கோட்டை புகழ்பெற்றது. இது கொத்தளங்கள் கொண்ட வெளிச்சுவர்களையும், குழிக்கு வெளியே உள்ள முக்கோண வடிவமான மதில்களையும், பக்கங்களிலிருந்து வெளியே சுட ஏற்ற நிலவறைகளையும் படிக்கட்டுக்களையும் கொண்டது.

துப்பாக்கிகளும் பீரங்கிகளும் சீர்திருத்த மடைந்த பின், இன்னும் அதிகத் தொலைவுகளுக்கும், அதிக வேகமாகவும் சுட முடிந்தது. ஆகையால் ஓரிடத்தைப் பாதுகாக்க எதிரிகளை இன்னும் தொலைவிலேயே தடுத்து நிறுத்தும் அவசியம் ஏற்பட்டது. இதற்காகப் பிரதம கோட்டையைச் சுற்றிலும் ஆங்காங்குத் தனித் தனியே சிறு கோட்டைகளை அமைத்துப் பகைவர்களை முதலில் எதிர்க்க ஏற்றவாறு அவற்றைச் செய்யும் முறை தோன்றியது. இந்த முறைக்கு வாபன் காரணமானார் எனலாம். சுமார் 10 கோடி ரூபாய் செலவில் பாரிஸ் நகர அரண்களும் கோட்டைகளும் இம் முறையையொட்டி மாற்றி யமைக்கப்பட்டன. இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளும் இம்முறையைக் கையாளத் தொடங்கின.

வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் முதன்முதலில் கிடங்குகளையும், துருப்புக்களின் இருப்பிடங்களையும் அழிக்கக் குண்டுகளை எறிவது வழக்கமாக இருந்தது. ஆனால் பீரங்கிகளின் திறமை அதிகமானபின் கோட்டைகளைத் தகர்க்கவும் அவை பயன்பட்டன. முற்றுகை யிடப்பட்டவர்களின் பீரங்கிகளை முதலில் அழித்துப் பின்னர் மதிற்சுவர்களைத் தகர்ப்பது இன்னும் சிறந்த முறை என்று தெளிவாகியது.

முற்றுகைக் கலையிலும் வாபன் பெரு மாறுதல்களைச் செய்தார். அரணைத் தகர்க்கும் பீரங்கிகளைச் சரிவு மேட்டின்மேல் அமைத்துக் கோட்டைக் குழியில் பல பதுங்கு குழிகளை (Trenches) இணையாக வெட்டிப் படிப்படியாகச் சுவரை அடைந்து தாக்கும் முறையை அவர் கையாண்டு பெருவெற்றி அடைந்தார். இத்தகைய பதுங்கு குழிகளை வெட்டுவது ஆபத்து நிறைந்த வேலையாகையால் நல்ல பயிற்சி பெற்ற வீரர்களே இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 19ஆம் நூற் றாண்டின் இடைப்பகுதிவரை இந்த முறைகளே கையாளப்பட்டன. கிரிமியன் போரில் செவஸ்ட போல் முற்று கையின்போதும் இதே முறைகள் கையாளப்பட்ட போதிலும், முற்றுகையிடப்பட்டவர்களும் இதே முறைகளைக் கையாண்டு, பகைவர்களை வெற்றியுடன் தாக்கலாம் என்ற முக்கியமான படிப்பினை இதில் தெளிவாகியது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பீரங்கிகளின் சுடுந்திறனும், வீச்சும் அதிகமாகியதோடு, வளைவான பாதைகளில் குண்டு வீசும் ஹவிட்ஸர் முதலிய புதுப்படைக் கலங்களும் தோன்றிவிட்டன. இதனால் கோட்டைகளில் பீரங்கிகளைப் பயன்படுத்துவது அவசியமா என்ற வினாவே எழுந்துவிட்டது. ஏனெனில் கோட்டைக்குள் இருக்கும் பீரங்கிகளை எதிரிகள் மிக விரைவில் கண்டறிந்து அவற்றை அழிக்க முடிந்தது. பீரங்கிகளை மறைவாக அமைத்து, ஒருமுறை அவற்றை ஓரிடத்திலிருந்து சுட்டவுடன், வேறிடத்திற்குத் தள்ளிச் சென்று அமைக்கும் முறையும், வலிவான கூண்டுகளுக்குள் அவற்றைப் பாதுகாத்துவைக்கும் முறையும் தோன்றின.

அதே சமயத்தில் தோன்றிய தற்காலத் துப்பாக்கியும் முற்றுகைக் கலையில் சில மாறுதல்களைத் தோற்றுவித்தது. திருத்தமும் வீச்சும் மிக்க இத்துப்பாக்கிகளின் உதவியால் பீரங்கிகளின் தாக்குதலையும் சமாளித்துவிடலாம் என்பதை 1877-ல் நடைபெற்ற பிளேவ்னா (Plevna) முற்றுகையின்போது துருக்கிப் படைகள் தெளிவாக்கின. 1844-ல் ஜெர்மானியர் வெடி பஞ்சைப்பயன்படுத்தி, வியக்கத்தக்க நாசம் விளைவிக்கும் குண்டுகளைத் தயாரித்து, வலிவானசுவர்களையும் எளிதில் தகர்த்தார்கள். இவர்களது வெற்றி நிலையாக. அரணிடுதலில் இனிப் பயனே இராது என்ற கருத்தைத் தோற்றுவித்தது. இந்த மாறுதல்களால் கோட்டை அரண்கள் மேலும் விரிவடைந்தன. பீரங்கிகளுக்குக் கவசத்தினால் பாதுகாப்பு அளிக்கும் முறை பெருகியது. இதனால் கோட்டையே கவசந் தாங்கியதோ என்னும் அளவிற்குக் கவசத் தகடுகள் பயன்பட்டன. இம் முறைக்கு எதிராகப் பீரங்கிகளுக்குக் கவசப் பாதுகாப்பு அளிப்பதைவிடப் படைப் பாதுகாப்பு அளிப்பதே சிறந்தது. என்ற கருத்து இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்தது. இந்த முறைகளால் அரணிடப்பட்ட ரஷ்யத் துறைமுகமான போர்ட் ஆர்தர் 1904-ல் ஜப்பானியரால் முற்றுகையிடப்பட்டபோது ஐந்து மாதங்கள் வரை வலிவான பீரங்கிகளின் தாக்குதல்களையும், ஹவிட்-