பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரம்

184

அரவிந்தர்

மாக மருத்துவம், வானவியல், கணிதவியல். ரசாயனம், பூகோளமாகிய துறைகளில் மிகுந்த முன்னேற்றத்தை உண்டாக்கினார்கள்.

அரபு மொழியிலுள்ள அற நூல்கள் அடக்கம், திருப்தி, பொறுமை ஆகியவற்றையே வற்புறுத்துகின்றன. தீயொழுக்கம் என்பது ஆன்மாவின் நோய் என்றே கருதப்படுகிறது. அரபியருடைய தலை சிறந்த தத்துவ சாத்திர நூல்களைத் தாஸாவூப் (அனுபூதிக் கலை) என்று கூறுவர்.

அரபு இலக்கியம் கி. பி. 1000-ல் உச்ச நிலை அடைந்திருந்தது. இஸ்லாத்துக்குமுன் தோன்றிய கவிதைகள் சொற்சுருக்கமும் பொருட்செறிவும் ஓதற்கு எளிமையும் உடையனவாயிருந்தன. பிறகு தோன்றிய கவிதைகள் அணிகள் நிறைந்து செயற்கை அழகு நிரம்பியனவாக இருந்தன. இந்தோ -ஆரிய நூல்களை மிகுதியாகப் பயின்றதன் பயனாக எதுகையும் உவமையும் நிறைந்திருந்தன. ஆயினும் பண்பாட்டிலும் பல பொருள்களைப் பற்றியனவாயிருப்பதிலும் இஸ்லாம் தோன்றியபின் உண்டான கவிதைகளே மிகச் சிறந்தன.

பாக்தாது 1258 ஆம் ஆண்டில் பாழ்படுத்தப்படவே, அத்துடன் அரபு விஞ்ஞான இலக்கிய முன்னேற்றம் குன்றியது. அப்படிக் குன்றிவந்த இலக்கியம் பின்னால் மேனாட்டு நாகரிகத் தொடர்ச்சி காரணமாக மறு மலர்ச்சி அடைந்து வருகிறது. ஆர். ஏ. ப.

அரம் மிகப் பொதுவாகப் பயனாகும் ஒரு தொழிற் கருவி. உலோகப் பரப்புக்களையும், மற்றக் கடினமான பரப்புக்களையும் அராவி மழமழப்பாக்க இது பயன்படுகிறது. நாகரிகமற்ற பழங்குடி மக்களிடையில் கடினமான கற்களையும், மீனின் பற்களையும் கொண்டு அராவும் வழக்கம் உள்ளது. பல தொழில்களில் அரம் முக்கியமான கருவியாக விளங்குகிறது.ஆகையால் இது தேவைக்கேற்றவாறு பல வடிவங்களிலும், அளவுகளிலும் அமைக்கப்படுகிறது. கடிகாரம் செய்பவனது அரம் அங்குல நீளமே உள்ளது. தொழிற்சாலையில் பயானாகும் பெரிய அரம் 3 அடி நீளமுள்ளது.

அரத்தின் பற்கள் அமைந்துள்ள வகையை யொட்டி அது பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இணையாக உள்ள பல பற்களை வரிசையாகக் கொண்ட அரம்

அர வகைகள்
இரட்டை வெட்டு அரம்,
ஒற்றை வெட்டு அரம், அராவி.

ஒற்றை வெட்டு அரம் (Singlecut File) எனப்படும். மிருது மிருதுவான உலோகங்களை அராவ இது ஏற்றது. இரட்டை வெட்டு அரத்தில் இரண்டு வரிசைப் பற்கள் ஒன்றன் குறுக்கே மற்றொன்றாகச் சாய்வாக அமைந் திருக்கும். இவ்வாறு அமைப்பதால் வரிசையாக அமைந்துள்ள நீண்ட பற்களுக்குப் பதிலாகச் சிறு பற்கள் தோன்றுகின்றன. இவ்வகை அரம் கடினமான பரப்புக்களை அராவ ஏற்றது. மூன்றாவது வகை அரம் அராவி (Rasp) என்று அழைக்கப்படும். அதில் பல கூரிய பற்கள் இடைவிட்டு அமைக்கப்பட்டிருக்கும். இது மரத்தை அராவ ஏற்றது. அரத்தின் பரப்புத் தட்டையாகவோ, வளைந்தோ இருக்கலாம். அரங்களைச் செய்யக் கரியின் விகிதம் அதிகமாக உள்ள உயர்ந்த ரக எஃகு பயன்படுகிறது. இதைச் செய்வதில் தேவையான வடிவிற்கு உருட்டப்பட்ட எஃகு தடி முதலில் எந்திரங்களால் குறிப்பிட்ட நீளத்திற்கு வெட்டப்படுகிறது. இத் துண்டங்களைப் பழுக்கக் காய்ச்சிச் சம்மட்டியால் அடித்துப் பற்களை அவற்றில் வெட்ட ஏற்றவாறு செய்யவேண்டும். சாணை எந்திரங்களால் துண்டங்களைத் தேய்த்து, அவற்றின் பரப்பை மழமழப்பாக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட துண்டங்களில் பற்களை வெட்டவேண்டும். முன்பு இதைக் கைதேர்ந்த வேலையாட்கள் கையினால் செய்து வந்தார்கள். ஆனால் இக் காலத்தில் இதற்கு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. பற்களை வெட்டியபின் அரமானது தேவையான வெப்ப நிலைக்குச் சூடேற்றப்பட்டுக் குளிர்ந்த நீரில் அவிக்கப்படுகிறது. இதனால் பற்கள் உறுதியாகின்றன.

ஓர் அரத்தைச் சரியான முறையில் உபயோகிக்கா விட்டால் அது மிக விரைவில் தேய்ந்து பாழாய்விடும். கூரிய பற்களைக் கொண்ட அரத்தைக் கொண்டு கடினமான வார்ப்பிரும்புப் பரப்பை அராவக் கூடாது; அதிக அழுத்தத்துடன் அராவுவதாலும் அரம் தேய்ந்துவிடும். அதைப் பரப்பின்மேல் வைத்து, முன்னால் நகர்த்தி அராவியபின், அதைச் சற்று மேலே தூக்கியே பின்னுக்குக் கொண்டுவர வேண்டும். உபயோகப்படுத்திய பின் அரத்தைச் சுத்தம் செய்து வைப்பது நலம்.

அரவங்காடு நீலகிரி மலையில் உதகமண்டலத்துக்குப் போகும் பாதையில் கூனூரிலிருந்து மூன்றாவது மைலில் உள்ள ஊர். அறுகம்புல் மிகுதியாகக் காணப்படுவதால் அறுகங்காடு என்று பெயர் பெற்று, அது மருவி அறவங்காடு, அரவங்காடு என்று ஆகியது என்பர் ; ரெயில்வே நிலையம் உடையது. அரசாங்கத்தின் திரிவெடித் தொழிற்சாலை உள்ளது.

அரவிந்தர் அருட் புலவர் ; யோகி; சிந்தனைச் சிற்பி. இவர் 15-8-1872-ல் கல்கத்தாவிற் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் கிருஷ்ணதன கோஷ் ஆவர். 1879 முதல் 1893 வரை பதினான்காண்டுகள் இவர் இங்கிலாந்திலேயே படித்து, கேம்பிரிட்ஜ் பட்டம் பெற்று வந்து, பரோடாக் கல்லூரித் துணைத் தலைவரானார். அப்போதே இவர் வங்கமும் ஆரியமும் கற்று இந்தியாவின் ஞானச் சுரங்கத்தில் இறங்கினார்; 1905 முதல் யோகம் பயின்றார். 1907-ல் கல்கத்தாவுக்கு வந்து, தேசியக் கல்லூரித் தலைவரானார். பிறகு வந்தே மாதரம் என்னும் வெளியீட்டின் ஆசிரியர் குழுவிற் சேர்ந்தார். அரவிந்தரின் எழுத்து, சுதேசி இயக்கத்திற்குப் புதிய உணர்ச்சியும் வேகமும் அளித்தது. அயர்லாந்தில் நடந்த இயக்கம் போலவே இந்திய சுதந்திரக் கிளர்ச்சியை நடத்த இவர் விரும்பினார். தன்னுதவி, நாட்டுத் தொழிலாக்கம், நாட்டுக் கல்வி வளர்ச்சி, ஒற்றுமை, தியாகம் என்னும் இவற்றால் விடுதலை பெறலாம் என்று இவர் விளக்கினார். அக்காலத்தில் காங்கிரசில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. ஒன்று கோகலேயின் மிதவாதக்கட்சி; மற்றொன்று திலகரின் தீவிரக் கட்சி. அரவிந்தர் திலகரின் கட்சியையே போற்றி, அச்சிலும் மேடை மேலும் கிளர்ச்சி செய்தார். அரசாங்கத்தார் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டி அலிபூர் சிறையில் வைத்தார்கள். சிறைவாசத்தை அரவிந்தர் தியானத்தில் கழித்து, ஆன்ம லாபம் அடைந்தார். “அரவிந்தர் பலாத்காரப் புரட்சியாளரல்லர்; தேசாவேசக்கவி; இந்திய தீர்க்கதரிசி; மானிட மரபின் அன்பன்” என்று சித்த ரஞ்சன் தாசர் விளக்கினார். நீதிபதி அரவிந்தரை