பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிச்சந்திரன்

189

அரிச்சித்திரம்

விடக் கூடியதுமான இம்மேனாட்டுப் பொருள்களையே ஓர் அளவுகோலாகக் கொண்டு அறிய முடிகிறது. இங்குக் கண்ட இந்திய நாட்டுத் தொல்பொருள்களுக்கு (Antiquities) இவ்வாறு கால அட்டவணையொன்றைத் திட்டமாக வரையறுக்க இயன்றதால் இனி நிகழும் தென்னாட்டு அகழ் வாராய்ச்சிகளில் காண இருக்கும் இதுபோன்ற பொருள்களுக்கு இவற்றை ஒப்பக் காலங்களை அறுதியிட இயலும். இதுவே அரிக்கமேட்டில் நிகழ்ந்த சிறு அகழ்வாராச்சியின் சிறப்பாம். மற்றும் சங்க நூல்களின் வாயிலாகத் துறைமுகங்களையும் அங்கு நடந்த அயல் நாட்டுக் கடல் வாணிபச் சிறப்புக்களையும் பற்றிப் படித்தறிந்தோமேயன்றி, அவற்றின் சான்றுகளையும் தடையங்களையும் ஐயமறக் கண்டதில்லை. தமிழர் வேண்டி நின்ற இச்சான்றுகளையும் கையாளப்பட்ட பொருள்களையும் ஒரளவு பொதுகைப்பட்டினமே தமிழர்க்கு முதன்முதலாகக் காட்டியுள்ளது. இதுவன்றி இங்குக் கிடைத்த மட்கலவோடுகள் சிலவற்றின்மேல் கீறியெழுதியுள்ள சொற்கள் தமிழ், பிராகிருத மொழிச் சொற்களானாலும், பிராமி எழுத்துக்களாலேயே எழுதப்பட்டிருப்பது பற்றியும், இதுபோலத் தென்னாட்டு மலை முழைஞ்சுகளில் காணப்படும் அக்காலத்துத் தமிழ்மொழிக் கல்வெட்டுக்களும் பிராமி எழுத்துக்களாலேயே யிருப்பது கொண்டும், கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னுமான நூற்றாண்டுகளில் தமிழும் அக்காலத்துப் பாரத நாட்டு மற்ற மொழிகளைப் போலப் பிராமி லிபியில் எழுதப்பட்டமை விளங்கும். கே. ஆர். ஸ்ரீ. (தமிழ் எழுத்துக்களைப் பற்றிய கருத்துக்களுக்கு எழுத்து-தமிழ் எழுத்து என்னும் கட்டுரை பார்க்க).

அரிச்சந்திரன் வாய்மைக்கு இலக்கியமானவன்; அயோத்தி மன்னன் ; திரிசங்குவின் மகன். வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நேர்ந்த போட்டியால் இவனை விசுவாமித்திரர் பொய்யனாக்க முயன்றார். முதலில் வேள்விக்காக இவனிடம் பொன்பெற்று, அப்பொன்னை இவனிடமே வைத்துச் சென்றார். பிறகு, நாட்டைத் தானமாகப் பெற்றுத் தாம் முதலில் வாங்கி இவனிடம் வைத்த பொன்னும் நாட்டுத் தானத்திலேயே சேர்ந்துவிட்டதால், வேறு பொன் தரவேண்டுமென வற்புறுத்தினார். இன்றேல், வாங்கி வைத்த பொன்னை இல்லை யென்று கூறவேண்டும் என்றார். அரிச்சந்திரன் தன் மனைவி மக்களையும் தன்னையும் விற்று, விசுவாமித்திரருக்கும் அவர் அனுப்பிய தரகனுக்கும் பொன் கொடுத்தான். மேலும், விசுவாமித்திரர் செய்த சூழ்ச்சிகளால் தன் மகன் பாம்பு கடித்திறந்தபோதும், தன் மனைவி காசி மன்னன் மகனைக் கொன்றதாகப் பழி சாற்றப்பட்டபோதும் கலங்காமல் இருந்தான். தன்னை அடிமை கொண்ட வீரவாகு என்னும் தோட்டியின் ஆணைப்படித் தன் மனைவியை வெட்ட ஓங்கிய வாள் அவள் கழுத்தில் மாலையாக விழுந்தது. எனவே, 'சத்தியம் தலைகாக்கும்' என்னும் பழமொழி எழுந்தது என்பர். இவன் மனைவி சந்திரமதி ; மகன் லோகிதாசுவன். அமைச்சன் சத்தியகீர்த்தி. (பாரதம்)

இவன் வருணனைக் குறித்துத் தவம் புரிந்து, மகன் பிறந்தால் அவனை வேள்வியிலே யாகப் பசுவாகத் தருவதாக வேண்டிக் கொண்டானென்றும், பின்னர், பிறந்த மகனைப் பலியிட மனம் வராமல் மயங்கி யிருந்தானென்றும், அதனால் வயிற்றிலே கட்டியுண்டாகி வருந்தினான் என்றும், உண்மையுணர்ந்த மகன், அசிகிரதன் மகனான சுனச்சேபனை விலையாகப் பெற்று, வேள்விப் பசுவாக்கி, வருணனை மகிழ்வித்துத் தந்தையின் துயரை மாற்றினானென்றுங் கூறுவர்

அரிச்சித்திரம் (Etching) உலோகத் தகட்டில் அமிலத்தைக்கொண்டு அரித்து உண்டாக்கப்படுவதாகும். செதுக்குச் சித்திரமும் (Engraving) உலோகத் தகட்டில் வரைவதே. ஆனால் அது ஊசியைக் கொண்டு தகட்டைச் செதுக்குவதால் உண்டாவதாகும். அரிச்சித்திரத்தில் வரைகள் அமிலத்தினாலேயே உண்டாகின்றன.

அரிச்சித்திரத்தை உலோகத்தில் வரைவது போலவே கண்ணாடியிலும் வரையலாம். ஆனால் சித்திரத்தைக் கொண்டு பல பிரதிகள் பெற வேண்டுமானால், செப்புத் தகட்டைப் பயன்படுத்துவார்கள். செப்புத் தகட்டை நன்றாகத் தூய்மைசெய்து, அதன் மீது அரக்கு, மெழுகு, பிசின் முதலியவற்றைப் பூசி, 'அரிகளம்' (Etching ground) உண்டாக்குவார்கள். அதை மெழுகுவர்த்திச் சுடரின்மீது பிடித்து, அதற்குப் புகை ஊட்டுவார்கள். அப்படிச் செய்தால்தான் சித்திரம் நன்றாகக் கண்ணுக்குத் தெரியும். அதன்பின் ஓவியர் தாம் வரைய விரும்பும் சித்திரத்தை அந்தக் களத்தின்மீது கிராமபோன் ஊசியைப்போன்ற உறுதியான ஊசியினால் வரைவார். இதனால் வரைகள் உள்ள இடங்களில் மட்டும் அரிகளம் கீறப்பட்டு உலோகப் பரப்பு வெளியே தெரியும்.

ஓவியர் முதலில் கடுதாசியில் ஓவியத்தை வரைந்துவிட்டுப் பின்னர் அதை அரிச்சித்திரமாக ஆக்க விரும்பினால், அவர் ஒரு மெல்லிய கடுதாசியில் சீமைச் சுண்ணாம்பைத் தடவி, அதன்மீது சித்திரத்தை வரைந்து, அந்தக் கடுதாசியை அரிகளத்தின்மீது வைத்துக்கொண்டு, அந்தச் சித்திரத்தின்மீது ஊசியால் வரைந்து, களத்தின் மீது சித்திரம் காணுமாறு செய்வார். ஊசியானது உலோகத்தின்மீது படாவண்ணமே வரைவார். அதன்பின் தகட்டை அமிலம் நிறைந்த தட்டிற்குள் வைப்பார். பலவிதமான அமிலங்கள் உபயோகிக்கலாமாயினும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவன ஹைடிரோகுளோரிக் அமிலமும், நைட்டிரிக அமிலமுமாகும். ஆதியில் டச்சுக்காரர்களே இத்தகைய சித்திரம் வரையத் தொடங்கியதால் ஹைடிரோகுளோரிக அமிலமும் பொட்டாசியம் குளோரேட்டும் கலந்த நீரை 'டச்சு நீர்' என்று கூறுவர்.

தகட்டை அமில நீரில் இட்டதும் களம் கீறப்பட்ட இடங்களில் அமிலம் இறங்கி உலோகத்தை அரிக்கும். சித்திரத்திலுள்ள மெல்லிய கோடுகள் அரிக்கப்பட்டதும், தகட்டை வெளியே எடுத்து, அந்தக் கோடுகள் உள்ள இடத்தைப் பிரன்ஸ்விக் கறுப்பு என்னும் மெருகெண்ணெயைக்கொண்டு மூடிவிட்டு, மறுபடியும் அமில நீரில் இடுவார்கள். இவ்வாறு பலமுறை இட்டும் எடுத்து மூடியும் எல்லாக் கோடுகளும் தேவையான ஆழங்களுக்கு அரிக்கப்படுமாறு செய்வார்கள். சித்திரம் திருப்திகரமாக அரிக்கப்பட்டதும் தகட்டை எடுத்துத் தண்ணீரில் கழுவிவிட்டுக் கர்ப்பூரத் தைலத்தைக் கொண்டு களப்பொருளை நீக்குவார்கள்.

செதுக்குச் சித்திரத் தகட்டைக்கொண்டு பிரதிகள் எடுப்பது போலவே, அரிச்சித்திரத் தகட்டைக்கொண்டும் பிரதிகள் எடுப்பார்கள். தகட்டின்மீது ஒட்டக்கூடிய மையைத் தடவித் துணியைக்கொண்டு துடைத்தால், மையானது அரித்த பள்ளங்களில் மட்டும் நிரம்பி நிற்கும். ஈரமான கடுதாசியைத் தகட்டின்மீது வைத்து அழுத்தினால் மை கடுதாசியில் சிறிது மேடாகத் தோன்றும். இவ்வாறு கடுதாசியில் சித்திரத்தைப் பெற்று