பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரேபியா

201

அரேபியா

முதலியன சில இடங்களில் காணப்படுகின்றன. அரபிக் குதிரைகள் வேகத்திற்கு உலகப் புகழ் பெற்றவை. இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் அரேபியாவில் பாரசீக வளைகுடாவிற்கருகே பாரேன் தீவிற்கடுத்து எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் தொழில் அமெரிக்கர் ஆதரவில் முன்னேற்றமடைந்துள்ளது.

அரேபியா

போக்குவரத்திற்கு ஒட்டகங்களே இன்றும் பயன்படுகின்றன. இப்பொழுது ஜெட்டாவிலிருந்து மக்காவிற்கும் மதீனாவிற்கும் மோட்டார் பஸ் உண்டு. ரியாதிற்கும் எண்ணெய்க் கிணறுகளுக்கும் ஆகாய விமானங்களிற் செல்லலாம். தென்மேற்கேயுள்ள யெமன் ஒரு சுதந்திர நாடு ; ஏடன் பிரிட்டிஷ் உடைமை. ஓமான் தென் கிழக்கேயுள்ள ஒரு சுதந்திர நாடு. சவுதி அரேபியா என்பதே அரேபியாவிலுள்ள மிகப் பெரிய அரசியற் பிரிவு. பரப்பு : சு. 10 இலட்சம் ச. மைல். மக்: சு. 95 இலட்சம் (1947). முக்கியமான நகரங்கள் : மக்கா, மக்: சு. 1,50,000 (1947) ; ரியாத் (சவுதி அரேபியாவின் தலைநகரம்) ; மக் : சு. 60,000 (1947) ; மதீனா, மக்: சு. 45,000; ஏடன், மக் : சு. 1,00,000 (1950). இங்குப் பல இந்தியர்கள் வியாபாரத்தை முன்னிட்டுச் சென்று வாழ் கின்றனர்.

வரலாறு : அரேபியாவின் மிகப் பண்டைய வரலாற்றை மிகுதியாக அறிந்துகொள்ள இயலவில்லை. அரபு இலக்கியங்களில் கூறப்படும் பண்டைய வரலாறு பெரும்பாலும் கதையென்றே கொள்ளற்பாலது. 19 ஆம் நூற்றாண்டில் தோண்டி எடுக்கப்பட்ட பல கல்வெட்டுக்களிலிருந்து, 3000 ஆண்டுக்கு முன்பும் அந்நாட்டில் பல நாகரிக இராச்சியங்கள் தோன்றி அழிந்திருப்பது தெரியவருகிறது. கி. மு. 1200-650 வரை மினேயன் இராச்சியம் யெமன் பிரதேசத்தில் ஆண்டு வந்தது. இதற்குப் பிறகு ஆண்டது பெயன் இராச்சியம். பெயன் ஆட்சியில் கி. மு. 10-7 ஆம் நூற்றாண்டு வரை முகாரிபுகளும், கி. மு. 650-115 வரை சாபா அரசர்களும், பிறகு இம்யாரித்துக்களும் ஆண்டனர். கி. பி. முதல் சில நூற்றாண்டுகளில் அபிசீனியர்களுக்கும் அராபியர்களுக்கும் சமயச் சார்பான பூசல்கள் சில நிகழ்ந்தன. கி. பி. 6ஆம் நூற்றாண்டில் பாரசீகர்கள் தென் அரேபியாவை வென்று, யெமன் பிரதேசத்தில் கவர்னர் ஒருவரை நியமித்தனர். அதே காலத்தில் அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் ஜப்னீடு என்னும் வமிசம் ஆண்டுவந்ததாகத் தெரிகிறது. இவர்கள் ஆண்டது காசன் என்னும் பிரதேசம். இவ்வரசர்களில் ஹரீது இபன்-ஜபாலா என்பவன் முக்கியமானவன். ஜஸ்டீனியன் என்னும் ரோமானியப் பேரரசன் ஹாதை அராபியர்களுடைய மன்னன் என்று அங்கிகரித்தான். கி. பி. 583-ல் ஹரீது இறந்தபிறகு அவ்விராச்சியம் பலவாகச் சிதறிற்று. 5ஆம் நூற்றாண்டிறுதியில் மத்திய அரேபியாவில் ஆகில்-அல்-முரார் என்பவனுடைய வமிசம் ஒன்று ஆண்டு வந்ததென்றும், ஒரு காலத்தில் அது மத்தியத் தென் அரேபியா முழுவதும் ஆண்டு வந்தது என்றும் தெரிகின்றது. இவ் வமிசங்களைத் தவிர வேறு ஒழுங்கான ஆட்சியொன்றும் அக்காலத்தில் அரேபியாவில் இல்லை. தென் அரேபியா, கிண்டாஹீரா, காசன் என்னும் இராச்சியங்கள் மட்டும் அமைதியான ஆட்சி நடத்திவந்தன. அவ்வமயத்தில் தோன்றிய முகம்மது நபி சமயத்தையும் நாட்டுப்பற்றையும் ஒருங்கே வளர்க்க விரும்பினார். அவர் ஒரு பெரிய மதத்தை நிறுவியதோடு அரேபியாவையும் ஒற்றுமைப்படுத்தினார். அவருக்கிருந்த பல அரசியல் பகைவர்களை வெல்லவேண்டியது அவசியமா யிருந்தமையால், அவரைப் பின்பற்றியவர்களும் ராணுவ முறையில் இயங்க வேண்டியதாயிற்று. 630-ல் மக்காவை முகம்மது கைப்பற்றினார். 632-ல் அவர் இறந்தபோது அரேபியா ஐக்கியமடைந்த ஒரு நாடாக விளங்கிற்று.

முகம்மதுக்குப் பிறகு முதல் கலீபாவாக வந்தவன் அபுபக்கர் (632-634) என்பவன். இவன் சமயப்பற்று மிகுந்தவன். இவனுக்குப் பிறகு வந்த ஓமார் (634644) பாரசீகர்களை வென்று, பஸ்ரா முதலிய நகரங்களை நிருமாணித்தான். சில ஆண்டுகள் தமாஸ்கஸ், எருசலேம் ஆகிய நகரங்கள் அராபியர் வசமாயின. 640-ல் அராபியர்கள் எகிப்தின்மேற் படையெடுத்து, அலெக்சாந்திரியாவைக் கைப்பற்றி, கைரோ நகரை நிருமாணித்தனர். அக்காலத்தில் பாரசீகம் முழுவதும் அரேபியாவிற்கு அடிப்ணிந்திருந்தது. உத்மான் (644-656) என்னும் கலீபா காலத்தில் ஆர்மீனியா, ஆசியா மைனர், கார்த்தேஜ் முதலிய இடங்களை அராபியர் வென்றனர். 655-661-ல் அலி என்னும் கலீபா ஆண்டான். இவன் காலத்தில் நாட்டில் கலகம் உண்டாகிச் சிப்பின் (Siffin) என்னுமிடத்தில் நடந்த போரில் இவன் தோல்வியுற்று முடிதுறக்க வேண்டியதாயிற்று. அப்போது ஏற்பட்ட உமாயிது வமிசம் தமாஸ்கஸைத் தலைநகராகக் கொண்டு (661) ஆண்டு வந்தது.

உமாயிது வமிச ஆட்சியின் முதற்பகுதியில் எப்போதும் நாட்டில் போரும் குழப்பமுமாகவே இருந்தது. அலிக்குப்பிறகு அவனது இரு மக்களான ஹசன், ஹுசேன் என்பவர்களுக்குள், நடந்த சண்டையில் ஹுசேன் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். உமாயிது வமிசம் கி. பி. 750 வரையில் ஆட்சி புரிந்தது!. இஸ்லாமியப் பேரரசு ஸ்பெயினிலிருந்து இந்தியாவரை பரவியிருந்ததாயினும், அரேபியா அப்பேரரசின் ஒரு மாகாணமாகவே இருந்துவந்தது. அன்றியும் 762-ல் அபுல் அப்பாஸ் என்பவன் கலீபாவாக ஆனவுடன் முஸ்-