பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரையர்

203

அல்தூசியஸ்

துறைகளிலும் ஆர்வம் இருந்தது. உயிர்ப் பொருள்களில் விளையும் ரசாயன மாறுதல்களைப் பற்றி இவர் ஆராய்ந்தார். அண்டத்தின் தோற்றத்தைப் பற்றிய சிந்தனையிலும் இவர் ஈடுபட்டார். பார்க்க : மின் பகுப்பு.

அரையர் : நாதமுனிகள் திவ்வியப் பிரபந்தத்தை வகுத்துப் பாட்டுக்களைக் கோயில்களில் ஓதுவதற்கு ஏற்பாடு செய்தார். இசையுடன் அவற்றைப் பாடவும், அவற்றின் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச் செய்கைகளைக் காட்டி நடிக்கவும் தம்முடைய உடன் பிறந்தாள் மக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் என்னும் இருவரையும் பழக்கினார். அவர்கள் இசைச் சுவையிலே துவக்குண்ட காயக சார்வபௌமர் என்னும் மேன்மை தோன்றும்படி அவர்களுக்கு அரையர் என்னும் பெயர் உண்டாயிற்று. அந்தப் பிரபுத்துவத்தைக் குறிக்கும் குல்லாவும், தொங்கல் பரிவட்டமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்குப் பிறகு, கோயில்களில் இந்தத் தொண்டு புரிவோர் அரையர் எனப்பட்டனர்.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று தலங்களில்தான் இப்போது அரையர்கள் உண்டு. உடையவர் என்னும் இராமானுசரை அடுத்திருந்த பெரியோர்களில் அரையர்கள் பலர் இருப்பதால் அக்காலத்தில் பல கோயில்களில் அரையர்கள் இருந்தனர் எனத் தெரிகிறது.

பூசைக்குரிய மந்திரமாயும் வேதாந்தப் பெருநூலாயும் உள்ள பிரபந்தத்துக்கு ஆண்களையே பாடுபவராயும் ஆடுபவராயும் நாதமுனிகள் வைத்தார். ஆசாரிய நிலையிலிருந்து ஸ்ரீசடகோபத்தை எழுந்தருளப் பண்ணி, ஆழ்வார்களுக்கும் அல்லாதவர்க்கும் அனுக்கிரகிக்க அரையர்களே அருகராயினர்.

அரையர்களுக்குத் தம்பிரான்மார் என்றும் பெயர். தம்பிரான்மார் சிறந்த தமிழ் விரகர்கள். மதுரகவியாழ்வார் அருளிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்னும் பதிகத்திற்குத் தம்பிரான்படி வியாக்கியானம் என்று ஒன்று உண்டு. மற்றைப் பிரபந்தங்களில் சிறப்பான பல இடங்களில் அரையர்கள் சேர்த்த தமிழ்ச் சூர்ணிகைகளும் உண்டு. அவையெல்லாம் அரையர்களின் குடும்ப மந்திரங்கள் போல இருந்து வருகின்றன. அவர்கள் பெருமானுக்கு அவற்றை விண்ணப்பிக்கையில் பிறர் கேட்கக்கூடும்.

இப்போது மார்கழித் திருநாளில் தினந்தோறும் சில பாடல்களுக்கு அபிநயமும், கம்ச வதம், இராவண வதம், இரணிய வதம், பெருமாள் புறப்பாடு, திருவாராதனம், அமுதங் கடைதல், வாமனாவதாரம், முத்துக்குறி என்ற சிலவற்றுக்கு நடிப்பும் நடக்கின்றன. நம்பாடுவான் என்பவர் கைசிகம் என்னும் பண்ணைப் பாடித் திருமாலை வழிபட்டு முத்தி பெற்ற நாளாகிய கார்த்திகை மாதத்து வளர்பிறை ஏகாதசியாகிய கைசிகத்தன்றும், திருநெடுந்தாண்டகம் பாடுவதற்காக நியமித்த அன்றும் இரண்டொரு பாட்டுக்கு அபிநயம் உண்டு. இந்தத் திருநாட்கள் திவ்வியப் பிரபந்தமாகிய அருளிச் செயலைப் பாடவும், அபிநயிக்கவும், நடிக்கவுமே சிறப்பாக ஏற்பட்டன. உடையவர் காலத்தில் நாள்தோறும் அருளிச் செயலைப் பெருமாளிடம் அபிநயித்துப் பொருள் விளக்குவதே அரையர்களின் போதுபோக்காகவும் கோயில் காரியமாகவும் இருந்தது.

அரையர்களின் அபிநயத்தையும் இசையையும் பற்றிப் பல கதைகள் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களில் காணலாம். எஸ். பா.

அரையஸ்(?-335) லிபியாவிலிருந்த கிறிஸ்தவ மத குரு; இவர் தமது சமயக் கோட்பாடுகளைக் கற்றறிய அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். அங்கு நல்ல நிலைமையை யடைந்தார். ஆனால் இவர் கொண்ட சமயக் கொள்கை புதிதாக இருந்தது. அதாவது இயேசு கிறிஸ்துவாகிய தேவ குமாரர் கர்த்தாவாகிய இறைவனினின்றும் வேறு பட்டவர் என்பது. அவ்வேறுபாடு இல்லை என்பது பண்டையர் கொள்கை. அதுவே ரோமாபுரியிலிருந்த போப்பினுடைய கருத்துமாகும். ஆகையால் அரையஸினுடைய கொள்கையை உடனே ஏனையோர் மறுக்கத் தொடங்கியதில் வியப்பில்லை. ஒரு பேரவை கூட்டிப் பல சமயப்புலவர்கள் அரையஸோடு வாதாடினார்கள். இயேசுவின் நிலை வேறுபட்டதாயினும் மாறுபடா நிலைமையைத் தம்மகனுக்கு இறைவன் அருளியுள்ளார் என்னும் கோட்பாடும் அரையஸிற்கு உண்டு. ஆனால் அப்பேரவையில் தம்மையும் மறந்து, இயேசுவும் அறக்குறைபாடுகட்கு உட்பட்டவர் என்று கூறிவிட்டார். போப் உடனே அரையஸையும் அவரைப் பின்பற்றியவர்களையும் சமய வரம்பினின்றும் அகற்றிவிட்டார். அரையஸ் தமது கொள்கைகளைத் திரட்டித் தாலியா என்னும் செய்யுள் நூல் மூலம் வெளியிட்டார். நாடு கடத்தப்பட்ட அரையஸ் டான்யூப் நதிக்கு வடக்கே போய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, பின்பு கி. மு. 335-ல் இறந்தார். பிறகு, கான்ஸ்டன்டைன் கூட்டிய நிசையா கவுன்சில் அரையஸின் கொள்கை தவறுடையது என்றும், அதைப் பின்பற்றுவோர்களைக் கண்டித்தும் தீர்மானம் செய்தது. காத்தியர்களின் மத குருவாக இருந்த உல்பிலா என்பவர் அரையஸ் கொள்கையைப் பின்பற்றியவர். இவருடைய முயற்சியால் டான்யூப் நதிக்கு வடக்கே இருந்த ஜெர்மானிய ஆதிக் குடிகள் அரையஸ் கொள்கையை மேற்கொண்டிருந்தனர்.

அல்செஸ்டிஸ் கிரேக்கப் புராணக் கதையில் தெசலி அரசன் அட்மிட்டனின் மனைவி. அவனுக்காக வேறு யாராவது தமது உயிரைக் கொடுத்தாலொழிய அவன் இறக்க வேண்டும் என்று விதியிருந்தது. அவனுடைய பெற்றோர் முதியவர்களாயினும், அவன் பொருட்டுத் தமது உயிரைக் கொடுக்க மறுத்துவிட்டனர். மனைவி அல்செஸ்டிஸ் தன்னுயிரைக் கொடுக்க ஒப்புக்கொண்டாள். அட்மிட்டஸ் உயிர்த்து எழ எழ, அல்செஸ்டிஸின் உயிர் போய்க்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் ஹெர்குலிஸ் வந்து யமனுடன் போராடி அவனை வென்றான். அல்செஸ்டிஸ் உயிருடன் எழுந்தாள். இந்தக் கதையை யுரிப்பிடீஸ் என்னும் கிரேக்கக் கவி நாடகமாக எழுதியிருக்கிறார்.

அல்சேஷியா பழைய ஆல்செஸ் மாகாணத்தின் புதுப் பெயர். பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையே உள்ளது. இப்பெயரையொட்டி லண்டன் நகரில் ஒரு பகுதிக்கும் இப்பெயர் இடப்பட்டது.

அல்டோனா ஜெர்மனியில் எல்பு ஆற்றின் வலது கரையில் உள்ள ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைனில் உள்ள ஒரு நகரம். மக் : சு. 2½ இலட்சம். 17ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கிற்குச் சொந்தமாயிருந்தது. 1860-ல் ஜெர்மனியர்கள் வசம் வந்தது. இங்குப் புகையிலை, எந்திரங்கள், பருத்தி, ரசாயனப் பொருள்கள் முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நல்லதுறை முகம் உண்டு.

அல்தூசியஸ் : ஜோஹானஸ் அல்தூசியஸ் என்னும் ஜெர்மன் அறிஞர் 1603-ல் அரசியல் முறைகளின் சுருக்கம் என்னும் நூலை இயற்றினார். அவர் இராச்சி-