பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்பெரூனி

205

அல்மோரா

பொருள். நோயாளிகளுக்கு உத்தமமான உணவு. வெண்கருவை நீரில் நன்றாகக் குலுக்கி இறுத்து, அல்புமின் தண்ணீர் என்று டைபாயிடு முதலிய காய்ச்சல்களில் கொடுப்பதுண்டு.

அல்பெரூனி : அபுரிஹன் அல்பெரூனி என்பார் குவாரிசம் (Khwarizm) நாட்டில் பிறந்த பெரிய அரபு அறிஞர். இவர் சமஸ்கிருத மொழியைக் கற்று, அதில் தேர்ச்சி பெற்றார். விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, கணிதம், வானவியல், வரலாறு முதலிய பல கலைகளில் வல்லவர். கஜினி முகம்மதின் இந்தியப்படையெடுப்புக் காலத்தில் அவனுடன் இந்தியாவுக்கு வந்து பஞ்சாபில் வசித்து வந்தார். இந்துக்களின் பண்பாட்டை நன்றாகத் தெரிந்துகொண்டார். உபநிடதங்கள், பகவத்கீதை முதலிய தத்துவ நூல்களைப் படித்துப் பல துறைகளில் மேம்பாடடைந்திருந்த இந்தியப் பண்பாட்டை மெச்சிக் கிதாப்-உல்-ஹிந்து என்ற நூலை கி. மு. 1030-ல் எழுதினார். பதினோராம் நூற்றாண்டில் வட இந்தியாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கிதாப் மிகவும் பயன்படும் நூல். இவர் சமஸ்கிருத மொழியிலிருந்து பல நூல்களை அரபு மொழியில் பெயர்த்தார்.

இவர் முகம்மதுடன் போர் புரிந்த பல இந்து அரசர்களின் வீரத்தைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். சிறப்பாக இவருடைய மனத்தைப் பாடிண்டா, முல்தான் முதலிய இடங்களில் ஆட்சி புரிந்த இந்து ஷாஹி அரசர்களின் நீதி, கம்பீரமான தோற்றம், நடத்தை முதலியவை கவர்ந்தன.

அல்பெரூனி காலத்தில் வடமேற்கு இந்தியாவில், பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தார்கள். முகம்மதின் கொடிய செய்கைகளால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகைமை அதிகரித்ததாகவும், இந்து அறிஞர்கள் பஞ்சாப் நாட்டை விட்டுக் கீழ்ப் பிரதேசங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் அல்பெரூனி குறித்திருக்கிறார். தங்கள் பண்பாட்டுக்கு ஈடான பண்பாடு வேறு நாடுகளில் இருக்காது என்ற மனப்பான்மையை இந்துக்கள் கொண்டிருந்தது அவருக்கு வருத்தமாயிருந்தது வேறுபாடில்லாமல் மற்ற மதத்தினர்களின் மேன்மையையும், பண்பாட்டையும் போற்றி எழுதின அல்பெரூனி அக்காலத்துச் சிறந்த அறிஞர்களில் ஒருவர். கே. ஆர். வெ.

அல்-மான் சூர்(712-775) முகம்மது. நபியின் மாமனான அப்பாசின் குலத்தோன்றல்களான காலிபுகளில் இரண்டாவது மன்னன். இவனது ஆட்சிக் காலம் 754-775. இவன் முகம்மதிய அரசை நன்றாக நிலைபெற அமைத்தான். 762-ல் இவன் பக்தாது நகரை அமைக்கத் தொடங்கினான். இவன் பாரசீகர்களை ஆதரித்தான். பார்மிசைடுகள் இவனுடைய மந்திரிகளாயிருந்தனர்.

அல்-மான் சூர்(?-1002): ஸ்பெயினில் இடைக் காலத்தில் முகம்மதிய மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்களில் 11-ம் அல்-ஹகாம் என்னும் அரசனிடம் வேலை பார்த்து வந்தவன் அல்-மான் சூர். 11-ம் ஹீஷாம் என்னும் சிறுவன் அரசனாக இருந்தபோது இவன் இரண்டாந்தரப் படைத்தலைவனா யிருந்தான். அப்போது வட ஸ்பெயினிலிருந்த கிறிஸ்தவர்களை எதிர்த்து, இவன் படையெடுத்துச் சென்றான் ; திரும்பி வந்ததும் அரசனுடைய பிரதிநிதியை நீக்கிவிட்டுத் தானே அந்தப் பதவியை மேற்கொண்டான். சைனியத்தையும் இராச்சிய நிருவாகத்தையும் சரிவரத் திருத்தியமைத்தான். வட ஆப்பிரிக்காவிலிருந்த முகம்மதிய நாடுகளின் மீதிருந்த ஆதிக்கத்தை நீக்கிக்கொண்டான். புலவர்களையும் கலைஞர்களையும் போற்றி ஆதரித்தான். 991-ல் பிரதிநிதி பதவியைத் துறந்தான். இவன் ஸ்பெயினில் பதவி வகித்த முகம்மதிய ஆட்சியாளர்களில் சிறந்த ஒருவன்.

அல்மேசீ (Ulmaceae) : இதை அர்டிகேசீக் குடும்பத்தில் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தனர். இப்போது அல்மேசீ தனிக் குடும்பமாகக் கருதப்படுகிறது. இது இரட்டை விதையிலைத் தொகுப்பைச் சேர்ந்தது. இதில் மரங்களும், குற்றுச் செடிகளும் உண்டு. இலைகள் தனி ; மாறியமைந்தவை ; இரு பத்தியாக இருக்கும், இலையடிச் செதில் உண்டு. அது சிலவற்றில் காம்பின் இரு பக்கத்திலும் இருக்கும்; சிலவற்றில் காம்புக்கு உட்பக்கத்திலிருக்கும் (Intrapetiolar). பூக்கள் சிறியவை. இலைக்கக்கத்தில் கொத்தாக வளர்பவை. சாதாரணமாக இக் கொத்துக்களில் இருபாற் பூக்கள் இருக்கும் அல்லது இருபாற் பூக்களும் ஒருபாற் பூக்களும் கலந்திருக்கும். பெண் பூக்கள் சில சமயங்களில் ஒரு கொத்துக்கு ஒரே பூவாக இருக்கும். இதழ்கள் வட்டத்திற்கு நான்கு அல்லது ஐந்து ; இவை பிரிந்துமிருக்கலாம், அல்லது இணைந்து மிருக்கலாம். மகரந்தக் கேசரங்கள் இதழ்களத்தனை, அல்லது இரட்டித்த எண். சூலகம் இரண்டு சூலிலையுள்ளது; அறைக்கு ஒரு விதையுண்டு; கனி வெடிக்காதது. உள்ளோட்டுத் தசைக் கனி, அல்லது வெடியாச் சிறகுக் கனி(Samara). இக்குடும்பத்து மரங்களுள் ஒன்றான எல்ம் (Elm) உலகிற் சிறந்த மரங்களுள் ஒன்று ; ஐரோப்பா, வட ஆசியா, வட ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் வளர்வது. தென்னிந்தியாவில் உள்ளவை : 1. ஆயா (காஞ்சி, தபசி, வெள்ளாயா) ஹாலப்டீலியா இன்டெக்ரிபோலியா (Holoptelea integrifolia) பெரிய மரம். இலையுதிர்வது; பட்டை வெண்மையான சாம்பல் நிறமுள்ளது. புதிதாக வெட்டினால் நாற்றமடிக்கும். விறகுக்குதவும். 2. பீநாறி (கோடாலி முறுக்கி) செல்டிஸ் சின்னமோமியா (Celtis cinna' momea) மருந்துக்குதவும். 3. கொடி தான்றி (கி ரோனி யெரா ரெட்டிகுலேட்டா-Gironniera reticulata) பெரிய மரம்; பொறியியல் வேலைகளுக்குதவும். 4. அம்பரத்தி (ஓமன், முதலை) (ட்ரெமா ஓரியன்டாலிஸ்--Trema orientalis) கரி சுடுவதற்கு மிக ஏற்றது.

அல்மேடா, பிரான்சிஸ்கோ டி(சு. 1450-1510) போர்ச்சுகலுக்குச் சொந்தமான இந்தியப் பகுதியின் முதல் இராசப் பிரதிநிதி. இவர் மூர் சாதியினரோடு போரிட்டார். இராசப் பிரதிநிதியாவதற்கு முன்பே மடகாஸ்கர் தீவின் கிழக்குக் கரையைக் கண்டு பிடித்தார். கொச்சியில் தாம் வகித்துவந்த அதிகாரத்தை விட்டுவிட மனமின்றிச் சில காலம் போராடிய பின் ஆல்புகர்க் என்பவரிடம் இராசப் பிரதிநிதி உத்தியோகத்தை ஒப்படைத்துவிட்டு ஐரோப்பாவிற்குத் திரும்பினார். வழியில், கேப் டவுன் தற்போது இருக்குமிடத்தில் இறங்கித் தங்கியிருந்தார். அங்கு ஆப்பிரிக்கச் சுதேசிகளோடு ஏற்பட்ட ஒரு சண்டையில் கொல்லப்பட்டார் (மார்ச்சு 1, 1510). மு. ஆ.

அல்மோரா இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குமாவோன் பிரிவில் ஒரு ஜில்லா. இதன் தலைநகரும் இதே பெயருடையது; 5,520 அடி கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது. நகர மக்: 10,229 (1941). இந்நகரில் ராம்சே கல்லூரியும், தண்டும், ஆரோக்கியத்தலமும் இருக்கின்றன. அல்மோரா ஜில்லாவின் பரப்பு : 5,389 ச. மைல், மக்: 6,57,236(1941). இங்குத் தேயிலை பயிரிடப்படுகிறது.