பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலகியல்

210

அலகியல்

நீளத்தை ஓர் அங்குலம் என யாவரும் கொள்ள வேண்டும் என்றும் முடிவாகியுள்ளது.

நீளத்திட்டங்களை ஒப்பிடல் : நீளத்திட்டங்களை ஒப்பிடுகையில் சட்டங்களை வளையாமல் இருக்குமாறு அவற்றை உருளைகள் தாங்கி நிற்கச் செய்ய வேண்டும். முன்னர் எட்டு உருளைகளின்மேல் சட்டத்தை வைத்து வளையாமலிருக்கச் செய்தார்கள். ஆனால் சட்டத்தின் நீளத்தில் 0.577 பங்கு உள்ள தொலைவில் இரு உருளைகளை அமைத்து, அவற்றின்மேல் சட்டத்தைச் சமச் சீராக வைத்தாலே போதுமானது என்பது பின்னர் அறியப்பட்டது. இவ்விரண்டு உருளைகள் வைக்க வேண்டிய இடங்களுக்கு எயரி தானங்கள் என்று பெயர்.

வரைத்திட்டங்கள் : வரைகளின் இடையே உள்ள தொலைவைத் திட்டமாகக்கொண்ட வெவ்வேறு நீளத் திட்டங்களை ஒப்பிடப் படத்தில் காட்டியுள்ள ஒப்புமானி (Compa1ator) பயனாகிறது.

ஒப்புமானி

ஓர் உறுதியான அடித்தளத்தின் மேலுள்ள இரு தண்டவாளங்களின் மேல் இரட்டைச் சுவர்கள் கொண்ட தொட்டி யொன்று அமைக்கப்படுகிறது. ஒப்பிடவேண்டிய சட்டங்கள் இரண்டையும் அவைகள் வளையாதவாறு தனி உருளைகளின் மேல் இணையாகத் தொட்டிக்குள் அமைப்பார்கள். தொட்டியின் நீளத்திற்கு இணையாக நகரும் மைக்ராஸ்கோப்புகள் இரண்டு இருக்கும். இந்த அமைப்பில் ஓர் உறுப்பு நகர்வதால் மற்ற உறுப்புக்கள் பாதிக்கப்படாாமலிருக்க அவற்றைத் தனித்தனி அஸ்திவாரங்களின்மேல் அமைப்பதும் உண்டு.

தொட்டியை அதன் நீளத்திற்குக் குறுக்கே உள்ள தண்டவாளங்களின் மேல் நகர்த்தித் தொட்டிக்குள் இருக்கும் சட்டங்களை ஒவ்வொன்றாக மைக்ராஸ்கோப்புகளின் கீழ் வருமாறு செய்யலாம். தொட்டியின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் நீரை நிரப்பி மாறாத வெப்பநிலையில் வைக்கலாம்.

தொட்டியை நகர்த்தி, ஒரு சட்டம் மைக்ராஸ்கோப்புகளின்கீழ் வருமாறு செய்து, மைக்ராஸ்கோப் புகளின் தொலைவைச் சரிப்படுத்தி, 0 அங்குலவரையும் 30 அங்குலவரையும் அந்தந்த மைக்ராஸ்கோப்புகளில் இணைந்துள்ளவாறு செய்யப்படுகின்றன. பிறகு தொட்டியை நகர்த்தி, இரண்டாவதுசட்டம் மைக்ராஸ்கோப்பு களின்கீழ் வருமாறு செய்து, அதன் வரைகள் மைக்ராஸ் கோப்புகளில் இணைய, மைக்ராஸ்கோப்புகளை எவ்வளவு தூரம் நகர்த்தவேண்டும் என்று கண்டு, அளவீடுகள் செய்யப்படுகின்றன. சட்டங்களைத் திருப்பி வைத்து, இன்னும் சில அளவீடுகள் செய்து, பிறகு சட்டங்களை மாற்றிவைத்து முன்போல் 4 அளவீடுகள் செய்யப்படுகின்றன. இந்த எட்டு அளவீடுகளின் சராசரியிலிருந்து சட்டங்களின் நீளங்களின் வேறுபாடு கணக்கிடப்படும்.

முனைத்திட்டங்கள் : சட்டத்தின் முனைகளின் தொலைவைத் திட்டமாகக்கொண்ட நீளத்திட்டத்தை ஒப்பிட அது இரு பிடிகளினிடையே வைக்கப்படுகிறது. இவற்றுள் ஒரு பிடி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். அல்லது ஒரு மைக்ரோமீட்டருடன் பொருத்தப்பட்டு நகருமாறு அமைந்திருக்கும். இரண்டாவது பிடியைச் சிறிது தூரம் நடத்தலாம். இந்த இயக்கத்தை ஒரு முள்ளின் உதவியால் அளவிடலாம். ஒப்பிட வேண்டிய திட்டச் சட்டத்தை இப்பிடிகளினிடையே பொருத்தி அளவீடுகள் செய்யப்படுகின்றன.

திட்டச் சட்டங்களின் முனைகள் நன்றாக மெருகிடப்பட்டிருந்தால், அரை-வெள்ளிப்பூச்சுப் பூசப் பெற்ற சமதளமான கண்ணாடிப் பரப்புக்களினிடையே அத்திட்டச் சட்டங்களை வைத்து, ஒளியை அவற்றின்மேல் படுமாறுசெய்து, இணைதல் விளைவால் தோன்றும் வளையங்களை அளந்து திருத்தமான அளவீடுகளைச் செய்யலாம்.


வரைத்திட்டங்களையும் முனைத்திட்டங்களையும் ஒப்பிடல் : வரைகளின் தொலைவைத் திட்டமாகக் கொண்ட சட்டத்தையும், முனைகளின் தொலைவைத் திட்டமாகக் கொண்ட சட்டத்தையும் ஒப்பிடவும் நேரலாம். அப்பொழுது வரைச்சட்டத்தைவிட நீளம் குறைவான நீளமுடைய முனைச்சட்டம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார்கள். இந்தச் சட்டத்துடன் இரண்டு முனைகளிலும் இரண்டு கட்டைகள் இணைக்கப்படுகின்றன. சட்டத்தின் முனையும் கட்டையின் முனையும் சீரான சமதளங்களாக இருந்தால் அவ்விரண்டிலும் சிறிதளவு திரவத்தைத் தடவி, ஒன்றை ஒன்று தொடவைத்துச் சிறிது சுருக்கித் தள்ளி அழுத்தினால், அவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று மிகவும் பலமாக ஒட்டிக் கொள்ளும். இப்படி இணைக்கப்படும் ஒவ்வொரு

திட்டங்களை ஒப்பிடல்

கட்டையின் நீளமும், எடுத்துக் கொண்ட முனைச்சட்டத்தின் நீளமும் சேர்ந்தால் திட்டச் சட்டத்தின் நீளத்திற்கு ஏறக்குறையச் சரியாக இருக்கும். இந்தக் கட்டைகள் ஒவ்வொன்றிலும் நடுவில் ஒரு கோடு வரைந்திருக்கும். இரு முனைகளிலும் இரு கட்டைகளை இணைத்து, அக்கட்டைகளில் உள்ள கோடுகளை உபயோகித்தால், முனைச்சட்டத்தை வரைத்திட்டமாக மாற்றலாம். அப்படியில்லாமல் ஒரு முனையில் ஒரு கட்டையை மட்டும் இணைத்தால் அதை முனைத்திட்டமாக மாற்றலாம். வரைத்திட்டமாக மாற்றி ஒப்பிடவேண்டிய வரைத் திட்டத்தினுடன் ஒப்பிட்டும், பிறகு முனைத்திட்டமாக மாற்றி ஒப்பிடவேண்டிய முனைத்திட்டத்தினுடன் ஒப்பிட்டும் பார்த்தால், அவ்விரண்டு நீளங்களின் வேறுபாட்டைத் திட்டமாகக் கணக்கிடலாம்.

வருங்கால நீளத்திட்டம் : காலப்போக்கில் மாறாமலும், வேறு வகைகளில் சேதமடையாமலும் உள்ள இயற்கையான ஒரு நீளத்திட்டத்தின் தேவையை நெடு நாட்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். 1827ஆம் ஆண்டிலேயே பாபினே (Babinet) என்னும் பிரெஞ்சு அறிஞர் ஒளியின் அலை நீளத்தை மாறாத நீளத்திட்ட-