பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலங்கார சாஸ்திரம்

212

அலங்கார சாஸ்திரம்

கள் கையாளப்படுகின்றன; சொல்லினிமை பயக்கும் ஓசையணிகளும் (சப்த அலங்காரம்) பொருளணிகளும் (அர்த்த அலங்காரம்) காணப்படுகின்றன.

சமஸ்கிருதத்தில் முதற் காப்பியம் என்று கருதப்படும் வால்மீகி ராமாயணத்தில் காப்பிய முறைகளும் அணிகளும் உணர்ச்சிகளும் மலிந்து கிடக்கின்றன. முக்கியமாய், இரு கிரவுஞ்சப் பறவைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவற்றுள் ஒன்றை அடித்து வீழ்த்திய வேடனின் கொடுஞ்செயலைக் கண்டு மனம் உருகி, வால்மீகி ரிஷி எதைச் சொன்னாரோ, அது காவிய இலக்கணங்கள் எல்லாம் பொருந்தியதான முதல் சுலோகமாக ஏற்பட்டது என்ற கதையும் அலங்கார ஆராய்ச்சியில் தலையமிசமாய் விளங்குகிறது. காப்பியத்திற்கு உயிரூட்டும் முக்கியமான தத்துவம், ரசம், உணர்ச்சி என்று ஆராய்ச்சியாளரால் வகுக்கப்பட்ட கொள்கைக்கு மூலமும் இராமாயணத்திலேயே குறிக்கப்பட்டதாய்க் கருதப்படுகிறது. இராமாயணத்தைப்போலவே காப்பியமாய்க் கருதப்படும் மகாபாரதத்திலும் சொல்லின் இனிமை, பொருள் பொலிந்திருக்கும் தன்மை முதலிய குணங்களை வியாசர் கூறுகிறார். கி. பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பே அலங்கார சாஸ்திரத்திற்கு இலக்கான பெருங்காப்பியங்களும், அதற்கு உறுப்புக்களான சில அமிசங்களும் காணப்படுகின்றன.

வேதத்திற்குப் பொருள் உரைத்தவருள் ஒருவரான யாஸ்கர், நிருக்தம் என்ற நூலில் உவமையணியைக் குறிக்கும் சொற்களையெல்லாம் தொகுத்திருப்பதோடு, தம்முன்னிருந்த, கார்க்கியர் கூறிய உவமையின் இலக்கணத்தையும் பிரிவுகளையும் தந்திருக்கிறார் ; யாஸ்கர் எழுதியது சுமார் கி. மு. 700-ல். பின் கி. மு. 500 அளவில் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினி, உவமையணியின் உறுப்புக்களைச் சொல்லியிருக்கிறார். வேதாந்த சூத்திரங்களில் வேதவாக்கியங்களை ஆராயும் போது உவமை, உருவகம் என்ற இரண்டு அணிகளும் கூறப்படுகின்றன. பரத முனிவர் 36 அத்தியாயங்கள் கொண்ட தம் நாட்டிய சாஸ்திரத்தில், 15 முதல் 18ஆம் அத்தியாயம் வரையில் அலங்கார சாஸ்திர விஷயங்களை விளக்குகிறார். பின்னால் சிறப்புற்ற சாந்தமென்ற ஒன்பதாவது ரசத்தைப் பரதர் குறிப்பிடாது, சிருங்காரம், வீரம், ஹாஸ்யம், ரௌத்திரம், கருணம், பயானகம், அற்புதம், பீபத்ஸம்' என்ற எட்டு ரசங்களைச் சொல்லுகிறார். பின்னர் இவ்வெட்டிற்கும் உரியனவாக எட்டு உறுதியான மனோநிலைகள், இம்மனோ நிலையில் ஒருவர் இருக்கும்போது ஏற்படும் உணர்ச்சி அலைகளான 33 சஞ்சாரி பாவங்கள், இந்நிலைகளிலிருக்கும்போது உணர்ச்சி மேம்பாட்டால் உடலில் ஏற்படும் மாறுபாடுகளான 8 சாத்வீக பாவங்கள் ஆகிய இவற்றை வருணிக்கிறார். தொல்காப்பியத்திலுள்ள மெய்ப்பாட்டியலையும் பரதநாட்டிய சாஸ்திரத்தின் இப்பகுதிகளையும் ஒத்து ஆராயலாம். பரதர் சொல்லும் அணிகளுள் சொல்லணி, பொருளணி இரண்டும் உண்டு. சொல்லணியில் பல பிரிவுகளுடன் யமகமும், பொருளணிகளுள் உவமை, உருவகம், தீபகம் என்ற மூன்றும் உதாரணங்களுடன் விளக்கப்படுகின்றன. பரதருக்குப் பிறகு எழுதப்பெற்ற இரண்டு அலங்கார நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன ; இவை தனியாக அலங்காரத்திற்கென நாட்டியத்தை விலக்கிக் காப்பியத்தை மட்டும் வருணிக்கும் முதனூல்கள். இவை பாமகர் எழுதிய காவ்யாலங்காரம், தண்டி எழு திய காவ்யாதர்சம் என்பன. இவ்விரு ஆசிரியரும் பின்னெழுந்த ஆசிரியர்களால் அலங்கார சாஸ்திரத்தின் மூல புருஷர் என்று போற்றப்படுபவர்கள்.

பாமகர் தம் நூலின் பெயருக்கேற்ப, இலக்கணமும் உதாரணமும் கூறி, அலங்காரங்களை விரிவாய் விளக்குகிறார். சப்த-அலங்காரத்தில் அனுப்ராசம், யமகம் இரண்டையும், அந்த அலங்காரத்தின் 7 வகைகளையும் சொல்லுகிறார். 37 அணிகளையும் உருவகம், தீபகம், உவமை என்று பரதர் தந்த மூன்றிலிருந்து துவக்கி, விளக்கி, இவ்வணிகள் பரதருக்குப்பின் வளர்ந்த முறையை இவர் நன்கு சுட்டிக் காட்டுகிறார். இவற்றைத் தவிர 3 அணிகளைப் பிறர் கூறுவதாயும், தாம் அவற்றை அணிகளாவதற்கு வேண்டிய எழிலற்றவையாகக் கருதுவதாயும் சொல்லுகிறார். பண்டைய அலங்கார நூல்களில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, ரசமும் உணர்ச்சியும். இவற்றை நாடகத்தின் மூலம் நடிகர் நேரே நமக்குத் தருவதால், இவை நாடகத்திற்கே இயற்கையாக உரியவை எனலாம். ஆனால் நாம் படித்தே சுவைக்கப்படுவதான காப்பியத்திலோ அச்சுவைகளை யெல்லாம் சொல்லின் மூலமே நாம் அனுபவிக்கவேண்டி யிருப்பதால், சுவை(ரசம்) காப்பியத்தில் சொல்லிற்கு அழகை ஏற்று உறுப்பாக அமையும். ஆதலால் எட்டு அல்லது ஒன்பது சுவைகளும் ரசவத்அலங்காரம் என்ற அணிவகுப்பைச் சாரும். அணிகளுக்குப் பொதுவாயுள்ள இலக்கணம் என்ன என்பதையும் பாமகர் கூறுகிறார். உலகில் நாம் பேசும் பேச்சு மிகவும் சாமானியமான முறையில் இருக்கிறது ; காப்பியத்திலோ அதே சொல்லும் பொருளும் தனித்த அழகுடன் காணப்படுகின்றன. ஆகையால் அலங்காரம் என்பது உலக இயற்கையைத் தாண்டிக் கவிகளால் மொழியில் அழகுபட ஏற்றப்படுவது எனலாம்.

பாமகர் தமது நூலைக் கி. பி. 700 அளவில் எழுதியிருக்கலாம். அவருடைய நூலுடன் நெருங்கிய தொடர்பும், ஒற்றுமை வேற்றுமைகளையும் கொண்ட, நூல் தென்னிந்தியாவில் காஞ்சியில் பல்லவருடைய ஆதீனத்தில் தண்டி எழுதிய காவ்யாதர்சம். தென்னாட்டில் இலங்கைவரைக்கும் அலங்காரத்திற்கு முதனூலாசிரியராக இவர் கொண்டாடப்பட்டது, இவருடைய நூலைத் தழுவித் தமிழில் எழுந்த தண்டியலங்காரம் என்ற நூலிலிருந்தும், கன்னடத்தில் எழுந்த கவிராஜமார்க்கத்திலிருந்தும், சிங்களத்தில் எழுந்த ஸிய-பஸ்-லகார என்ற நூலிலிருந்தும் தெளிவாகும். காவ்யாதர்சம் 4 அத்தியாயங்களைக்கொண்டது. முதலில் காவியத்தின் பொது விலக்கணம் பிரிவு முதலியனவும், இரண்டாவதில் 35 பொருள் - அணிகளும், மூன்றாவதில் சொல்-அணியான யமகத்தின் வகைகளும், கடினமான சித்திர காவிய பந்தங்களும், நான்காவதில் காப்பிய இழுக்குக்களும் கூறப்படுகின்றன. ஐந்தாம் அத்தியாயம் ஒன்று மிருந்ததாகத் தெரிகிறது.

தண்டிக்கும் பாமகருக்கும் முக்கியமான வேற்றுமைகள் இரண்டு : காப்பிய நடை தனித்ததோர் அழகுடன் உலக நடையிலிருந்து வேற்றுமைப்பட்டிருப்பதால், காப்பியம் முழுவதுமே வக்ர-உக்தி என்றார் பாமகர். ஆனால் தண்டியோ இயற்கைக்கு அதிகமாக மாறுபடாத சுபாவவர்ணனை என்பதைத் தனியே விலக்கி, காப்பியச் சொல்லைச் சுபாவ-உக்தி, வக்ர-உக்தி என்று இரு பிரிவுகளாக்கி, முதற் பிரிவில் சுபாவ-உக்தி அல்லது இயற்கை நவிற்சி என்ற அணி ஒன்றையும், வக்ர-உக்தி என்ற பிரிவில் உவமை முதலாய அணிகள் அனைத்தையும் வகுத்துக் கூறினார்.

அக்காலக் கவிகள் கையாண்ட நடையையொட்டி, அக்காலத்தில் காப்பியங்களை வைதர்ப்பம், கௌடம் என்று இருவிதமாகப் பிரித்துப் பேசிவந்தனர். தட்சிணத்தில் விதர்ப்ப தேசத்தில் கவிகள் மிகைப்படக்