பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலங்கார சாஸ்திரம்

214

அலங்கார சாஸ்திரம்

(பொருத்தம்) என்ற சிறப்பு, சாந்தம் என்ற ஒன்பதாவது ரசத்தின் தேவை, பெருமை முதலிய வேறு பல பிரச்சினைகளையும் ஆனந்தவர்த்தனர் ஆராய்ந்து, தம் நூலைச் சுவை தேறுவோருக்குக் கிடைத்த புதையல் போல் எழுதியிருக்கிறார்.

ஆனந்தவர் த்தனரின் தொனியைப்பற்றிய கொள்கை காவிய வுலகில் மட்டுமல்லாது சாஸ்திர வுலகிலும் ஒரு புரட்சியை விளைவித்தது. ஏனெனில் அதுவரையில் சொல்லிற்கு அபிதை, லட்சணை என்று இரண்டு ஆற்றல்களே உண்டென்று எல்லா சாஸ்திரங்களும் கொண்டிருந்தன. இவற்றைக் கடந்ததொரு பொருள் தோன்றுவதானால் அது சாஸ்திரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கும் அனுமானம் என்ற தர்க்க முறையின் மூலம் ஏற்படுவதாக இருக்கவேண்டுமே யல்லாது புதிதாக இதற்கென்று இல்லாத ஆற்றலொன்றைச் சொல்லிற்குக் கற்பிக்கக் கூடாது என்று பலர் வாதித்தும், ஆனந்த வர்த்தனரைக் கண்டித்தும் வந்தனர்.

ஆனந்தவர்த்தனரைப் பட்டநாயகர், மகிமபட்டர் ஆகிய இருவர் வன்மையாகக் கண்டித்தனர். பட்டநாயகர் பெரிய ஆராய்ச்சியாளர் என்பது இவர் தம் நூலில் விளக்கிய வேறு சில பிரச்சினைகளிலிருந்து தெரிகிறது. உதாரணமாகச் சட்டத்திற்கும், விருத்தாந்தத்தைத் தெரிவிக்கும் நூலிற்கும் உள்ள வேறுபாட்டை இவர் ஆராய்கிறார். சட்டத்தில் (வேதத்தில்) சொல்லிற்கே முதன்மை. விருத்தாந்த நூலில் (ஆக் கியானத்தில்) பொருளுக்கே முதன்மை. காப்பியத்திலே சொல்லும் பொருளும் எந்த வகையில் அழகுபடக் கவியால் தரப்படுகின்றனவோ, அவ்வழகிய வகை (வியாபாரம்) முக்கியமாகும். முகுளபட்டர் என்றவரும் தொனியை ஒப்புக்கொள்ளாது இலக்கணையோடு நின்ற ஆசிரியர். இவர் எழுதிய சொல்லாற்றல் நூல் அபிதா விருத்தி மாத்ருகா என்பது. குந்தகர் என்ற மற்றோர் ஆராய்ச்சியாளர் வக்ர-உக்திக்கு ரசம், தொனி, இவற்றிற்கு அவசியமான ஔசித்தியம் எல்லாவற்றையும் இணைத்து, வக்ரோக்தி ஜீவிதம் என்ற தம் நூலை எழுதினார். சாகித்தியம், ரீதி முதலிய பழைய மரபுகளுக்கு இவர் தம் விளக்கத்தின் மூலம் புத்துயிர் அளித்தார். முகுளபட்டரின் சீடரான பிரதீகாரேந்துராஜர் உத்படரின் காவ்யாலங்கார சாரசங்கிரகத்திற்கு உரை எழுதி, அதில் இலக்கணை யென்ற ஆற்றலே போதுமானது என்று கருதினார். ரசத்தை அனுபவிக்கும் விஷயத்தில் பாவிகம் என்ற குணத்தின் உதவியைப்பற்றி இவர் சொல்லியிருப்பது முக்கியமான கருத்தாகும்.

தொனிக் கொள்கையை மறுப்பவர்களுக்கு விடையளித்துத் தொனிக் கொள்கையை நன்கு உறுதிப்படுத்திய மகான் ஒருவர் காச்மீரத்தில் பத்தாம் நூற்றாண்டில் தோன்றினார். காச்மீர சைவாசாரியருள் தலைசிறந்தவரும், சைவசமயத்தில் கணக்கற்ற நூல்கள் எழுதியவருமான அபிநவகுப்தர் என்னும் இவர் நாட்டிய சாஸ்திரத்துக்கு ஓர் உரை எழுதிப் பின் தம் குருவாகிய தோதர் எழுதிய காவிய கௌதுகம் என்ற அலங்கார நூலிற்கு ஓர் உரை இயற்றி, மூன்றாவதாக இந்துராஜர் சொல்லிக் கொடுத்தபடி த்வன்யாலோகத்திற்கும் லோசனம் என்ற ஓர் உரை எழுதினார். அவ்வுரையில் தொனியை விசேஷமாக ஆராய்ந்து, எதிர்ப்பிற்கு மறுப்புக்களைத் தந்து, ஆங்காங்குக் காவிய, தத்துவ ஆராய்ச்சிகளின் சீரிய கொள்கைகளையும் விளக்கங்களையும் தந்து, அலங்கார இலக்கணத்தில் ஆனந்தவர்த்தனரைப் போல் முதன்மை இடத்தைப் பெற்றார்.

தொனியை அனுசரித்தும் ஆதரித்தும் பின்னால் காச்மீரத்தில் எழுதியவருள் அபிநவகுப்தரின் சீடர் க்ஷேமேந்திரர் குறிப்பிடத்தக்கவர். கவி பாட விரும்புபவனுக்கு வழிகளையும் அவர் காட்டியுள்ளார். காவியத்திற்கு ரசந்தான் ஆன்மா. ஆனால் ஔசித்தியம் ஒன்றே அதைச் சரிவரக் காப்பியத்தில் நிருவகிக்கக் கூடுமானதால் ஔசித்தியம் காப்பியத்தின் உயிர் ஆகும். ரசத்தைக் காண்பிக்கும்போது பாத்திரங்களின் கண்களும் நடத்தையும் ரசத்திற்கு ஒட்டியிருக்க வேண்டும். கவியின் நடை, அவர் கையாளும் அலங்காரம் ஆகிய எல்லாம் ரசத்திற்குப் பகையின்றி அதை விளக்கு வதாயிருத்தலே இப்பொருத்தமாகும். மம்மட பட்டர் 11ஆம் நூற்றாண்டில் எழுதிய காவியப் பிரகாசத்தில் நாடகத்தைத் தவிர மற்ற அமிசங்கள் அனைத்தும் தொனி மரபைத் தழுவி விளக்கப்பட்டுள்ளன. இதற்குச் சுமார் 70 உரைகள் இயற்றப்பட்டுள்ளன என்பதிலிருந்து இதை எவ்வளவு முக்கியமான நூலாகக் கருதி வந்தனர் என்பது விளங்கும். அணிகள் ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் கூறி, ஆராய்ந்து, அவற்றினிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி ருய்யகர் என்றவர் அலங்கார சர்வஸ்வம் என்ற நூலை இயற்றினார். பின்னால் இதுபோல் அலங்காரங்களை விளக்கிய நூல்களுக்கெல்லாம் துணையாக உள்ள நூல் இதுவே.

காச்மீரத்திற்கு வெளியே இந்தச் சாஸ்திரத்தை வளர்த்தவருள் முதலில் கான்யகுப்ஜ அரசரின் அவையைச் சார்ந்த ராஜசேகரரைச் சொல்லவேண்டும். இவர் காலம் 9வது நூற்றாண்டின் இறுதி, 10வது நூற் றாண்டின் துவக்கம். இவர் ஆனந்தவர்த்தனர் சொன்னதையும், மற்ற எல்லா விவரங்களையும் ஒன்று சேர்த்து, ஆங்காங்குப் பல அமிசங்களைப் புதுமாதிரியில் விளக்கி, காவியமீமாம்சை என்ற மிகப் பெரிய நூல் ஒன்றைத் தொகுத்தார். ஆனால் இதன் முதலிலுள்ள ஓர் அத்தியாயமே இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. இவர் அவந்திசுந்தரி என்ற தம் மனைவியின் அபிப்பிராயங்களை ஆங்காங்குச் சொல்லியிருக்கிறார்.

மாளவத்தில் முதலில் தொனியைப் புறக்கணித்து, ரசத்தைப் பழங் கொள்கைப்படி விளக்கிய நூல்கள் எழுதப்பட்டன. இவற்றுள் 10ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்த தனஞ்சயன் நாடக வகைகளை மட்டும் விவரித்து எழுதிய தசரூபகம் முதன்மை பெற்றது. பிற்காலத்தெழுந்த நாடக இலக்கண நூல்களெல்லாம் இதைத் தழுவினவையே. இந்நூலில் சாந்தம் ஒரு ரசமாகக் கொள்ளப்படவில்லை. 11ஆம் நூற்றாண்டில் ஆண்ட போஜராஜன் சரஸ்வதீ கண்டாபரணம், சிருங்காரப் பிரகாசம் என்ற இரு நூல்களை எழுதினான். போஜன் சமரச மார்க்கத்தை அனுசரித்துப் பழைய கொள்கைக்கும் தொனிக்கும் விரோதமின்றி ஒரு கலப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறான். ரசம் என்று சொல்லப்படும் தத்துவம் ஒன்றே; சிருங்காரம், வீரம் என்று பல பெயர்களால் இது வழங்கப்படுவது இதனுடைய இறுதி நிலையல்ல; நடு நிலையில் ஏற்படும் தோற்றங்கள் ; இந்நடுநிலையில் தோன்றும் ரசத்தோற்றங்கள் எட்டு, ஒன்பது மட்டுமல்ல; எல்லா உணர்ச்சிகளுமே இந்த நடுநிலையில் ரசமெனப்படலாம்; இவை எல்லாம் சிருங்காரம் என்ற ஒரு தத்துவத்தில் ஒன்றுபடுகின்றன. இங்கே சிருங்காரம் என்றால் ஆண் - பெண் காதல் அன்று; ஒவ்வொரு உயிருக்குள்ளும் உள்ள தன்னைப் பற்றியதும் தன் சிறப்பிற்கெல்லாம் வித்தாயிருப்பதுமான அபிமானம், 'தான்' என்றதோர் உணர்ச்சி. இஃதில்லாமற் போனால் ஒருவரும் நாகரிகமுள்ளவராயிருக்க முடியாது ; சிருங்கம் என்றால் உச்சி; அதற்கு மனிதனைக் கொண்டுபோவதால் சிருங்காரம் உள்ளத் தேர்ச்சியின் உயர்வேயாகும்.