பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலங்கார சாஸ்திரம்

215

அலங்காரப் பொருள்கள்

இதற்குப் பிறகு பெரும்பாலும் முன்சொன்ன ஆசிரியரைத் தழுவிப் பல நூல்கள் இயற்றப்பட்டன. அலங்காரங்களை விசேஷமாக விளக்கிய பிற்கால நூல்களுக்கு ஆதாரமாய் ஜயதேவர் சந்திராலோகம் என்ற நூலை 13ஆம் நூற்றாண்டில் இயற்றினார்.

தென்னிந்தியாவில் இதை வளர்த்த நூல்களுள் குறிப்பிட வேண்டியவை ஒட்ர தேசத்தில் எழுந்த ஏகாவளியும், சாகித்திய தர்ப்பணமும் ஆகும். ஏகாவளியை நரசிம்ம ராஜன் காலத்தில் 1300 அளவில் வித்தியாதரர் எழுதினார். இதிலுள்ள உதாரணங்கள் அனைத்தும் கவியை ஆதரித்த நரசிம்ம ராஜனைப் புகழ்வதாகும். இந்த முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் ஒவ்வோர் அரசன் சபையிலும் ஓர் அலங்கார நூல் எழுதப்பட்டது. காகதீய அரசன் வீரருத்திரனைப் புகழும் பிரதாபருத்திர யசோபூஷணம் இத்தகையதே. இது ஆந்திர தேசத்தில் 1300 அளவில் ஓரங்கலில் வித்தியா நாதர் என்பவரால் எழுதப்பட்டது. ஏகாவளி இலக்கிய நாடகத்தையும் சேர்த்துச் சாகித்திய தர்ப்பணம் என்ற நூல் விசுவநாதர் என்ற கவியால் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது மிகவும் நிலைபெற்ற நூலாகும். விசுவநாதர் காவியமென்பது ரசத்தை ஆன்மாவாகக்கொண்ட வாக்கியம் என்கிறார்.

16ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சைதன்னியரின் மதத்தைப் பின்பற்றிய சில அணியாசிரியர்கள் கிருஷ்ண பக்தியை முக்கியமாகக் கொண்டு, கண்ணன்பாலுள்ள சிருங்காரத்திற்கு மற்ற ரசங்களை அங்கமாகச் செய்து நூல்களை எழுதினர். இவர்களுக்குள் உஜ்வல நீலமணியையும், பக்தி ரசாம்ருதசிந்துவையும் எழுதிய ரூபகோ சுவாமியும், அலங்கார கௌஸ்துபம் எழுதிய கவிகர்ண பூரகோசுவாமியும் முக்கியமானவர்கள்.

தமிழ் நாட்டில் எழுந்த அணியாசிரியர்களுள் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீட்சிதர் என்ற மகா புருஷர் சிறந்தவர். இவர் சொற்களின் ஆற்றலைப் பற்றி விருத்தி வார்த்திகம் என்றும், நாடகத்தைப் பற்றி லக்ஷண ரத்னாவளி என்றும், அலங்காரங்களைப்பற்றி நுட்பமான சர்ச்சைகளைச் செய்யும் சித்திர மீமாம்சை என்ற முடிவு பெறாத நூலையும், ஜயதேவரின் சந்திராலோகத்தைத் தழுவி அலங்காரங்களை விளக்குவதும், அதிகமாகப் படிக்கப்படுவதுமான குவலயானந்தம் என்ற நூலையும் இயற்றினார். இவரிடம் வேறு காரணத்தால் சினங்கொண்டு, இவருக்கடுத்த தலை முறையில் காசியிலிருந்த ஆந்திரரான ஜகந்நாத பண்டிதர் அலங்கார சாஸ்திரத்திலேயே கடைசியாக எழுந்த தனிப்பட்ட அரிய கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டதான ரசகங்காதரம் என்ற முடிவு பெறாத நூலை இயற்றினார். லௌகிக மகிழ்ச்சிக்கு மாறுபட்டதான தனிப்பட்ட ஆனந்தத்தைப் பயக்கும் பொருளைத் தெரிவிக்கும் சொற்சிற்பமே காவியம் ஆகும் என இவர் இலக்கணம் கூறினார் என்பர். உயிரின் இயற்கைத் தன்மையான அறிவும் இன்பமும் விளங்குவதற்குத் தடையாயிருக்கும் ஆவரணமலமானது காவியத்தி னாலும் நாடகத்தினாலும் விலகும். அம்மல நீக்கத்தினாலே வெளிப்படும் சிதானந்தமே ரசம் என்று இவர் ரசானுபாவத்தை விளக்கினார். அணிகள் ஒன்றுக் கொன்று நெருங்கிய தொடர்புகொண்டு கணக்கற்று வளர்ந்ததனால் ஒன்றோடொன்று கலப்பில்லாமல் இவற்றிற்கு இலக்கணம் கூறுவது முக்கியமான காரியமாயிற்று. இதை ருய்யகர் முதற்கொண்டு அப்பைய தீட்சிதர் வரை பலர் நன்கு நிறைவேற்றியிருந்தாலும், தருக்க சாஸ்திர முறையைக் கையாண்டு இலக்கணங்கள் கூறியவருள் விசுவேசுவரரே முக்கியமானவர். இவர் இப்பணியைத் தம் அலங்கார கௌஸ்துபத்தில் ஆற்றியுள்ளார்.

இந்தச் சாஸ்திரத்திற்கு அலங்காரம் என்பதும் சாகித்ய மென்பதும் முக்கியமான பெயர்கள். ஆதியில் அலங்காரங்களே அதிகமாக இவ்வாராய்ச்சியில் ஆராயப்பட்டதால் அலங்கார சாஸ்திரமெனப்பெயர் ஏற்பட்டது.

அலங்காரங்கள் சொல்லணி, பொருளணி என இரு வகைப்பட்டதும், பொருளணிகள் மூன்றில் ஆரம்பித்து நூறுவரைக்கும் வளர்ந்ததும் ஒருவாறு மேலே சொன்னதிலிருந்து தெரியவரும். சொல்லணி ஓசையின்பத்தைத் தரும் ஒரே எழுத்தையோ, எழுத்துத் தொடரையோ ஒருதரத்திற்குமேல் உபயோகப்படுத்துவதாகும். இது அனுப்பிராசம், யமகம் என இருவகைப்படும். பொருளணியில் மிகவும் பிரசித்தமானதும் கவியின் கற்பனைச் சக்திக்கே அறிகுறியானதும் உவமை. உவமையை அடிப்படையாகக் கொண்ட அணிகள் உருவகம் முதலியன. இதுபோல வேற்றுமை (விரோதம்) கொண்டும், தொடராய்ச் சொல்வது, மிகைப்படக்கூறுவது, இரண்டு பொருள்படக் கூறுவது (சிலேடை) முதலியன மற்ற அலங்காரங்களை வளர்க்கும் அமிசமாகும். பார்க்க : அணி. வே. ரா

அலங்காரப் பொருள்கள் (Cosmetics) : உடலின்மேல் தேய்த்தோ, தெளித்தோ, ஊற்றியோ அதைத் தூய்மையாக்கவும், அழகுப்படுத்தவும், அதன் தோற்றத்தை மாற்றவும் உதவும் பொருள்கள் அலங்காரப் பொருள்கள் எனப்படும்.

வரலாறு : செயற்கையாகத் தோற்றத்தை அழகுபடுத்தும் வித்தை இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே கையாளப்பட்டு வந்துள்ளது. சாயங்களைக்கொண்டு உடலை அலங்கரிக்கும் பழக்கம் பெண்டிரைத் தவிர ஆண்களிடையேயும் இருந்ததைப் பழந்தமிழ் நூல்களிலிருந்து அறிகிறோம். செம்பஞ்சுக் குழம்பினால் கால்களை அலங்கரித்துக்கொள்வதும், நறுமணமுள்ளவையும் உடலுக்கு நலந்தருபவையுமான மருந்துகளைக் கொண்ட தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதும், பல மூலிகைகளைப் பொடித்துத் தயாரிக்கப்பட்ட நீராடற் பொடிகளைப் பயன்படுத்துவதும், வாசனைத் தைலங்களைத் தடவி மயிரை அலங்கரித்துக் கொள்வதும், கண்ணுக்கு மை தீட்டுவதும் பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிற் கையாளப்பட்டுவரும் பழக்கங்களாகும். மருதோன்றியினால் நகங்களுக்கு நிற மூட்டுவதும் பழங்காலப் பழக்கம். அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவையொத்த கீழ்நாடுகளில் தோன்றி, எகிப்திற்கும், மற்ற மேனாடுகளுக்கும் பரவியது எனக் கருதுகிறார்கள்.

ஐரோப்பாவில் ரோமானிய சாம்ராச்சியத்தில் ஆண்களும் பெண்களும் அலங்காரப் பொருள்களைப் பெரிதும் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்று உள்ளது. இடைக்காலத்தில் மற்ற நாடுகளிலும் இந்த வழக்கம் மிகுந்திருந்தது. அரச குடும்பத்தினரும், மற்றச் செல்வர்களும் கீழ்நாட்டிலிருந்து வந்த அலங்காரப் பொருள்களை மிக அருமையாக மதித்துப் பயன்படுத்தினர். தோலின் தோற்றத்தை அழகுபடுத்த அக்காலத்தவர் திராட்ச மதுவிலும் பாலிலும் குளிப்பதுண்டு. 17-ஆம் நூற்றாண்டில் அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கத்தைச் சட்டத்தினால் தடை செய்யும் அளவிற்குப் பரவிவிட்டது. தற்காலத்தில், அமெரிக்காவின் முக்கியமான ஐந்து தொழில்களில் இதுவும் ஒன்று. இரண்டாம் உலகப் போரின்போது இருந்த ஏற்றுமதிக் கட்டுப்பாட்டினால்