பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைட்டிஸ்

226

அவசரச்சட்டம்

ஒருபடித்தான ஊடகத்தில் அலைகள் நேர்கோட்டில் பரவும். அவ்வாறு பரவும் அலையின் பாதையில் ஒரு தடையை வைத்தால், அலையானது அத்தடையைச் சுற்றி வளைந்து பின்பக்கத்திலும் ஒருவாறாகப் பரவும். இவ்விளைவு விளிம்பு மாற்றம் (Diffraction) எனப்படுகிறது. படத்தில் தோ என்னும் தோற்றுவாயிலிருந்து

விளிம்பு மாற்றம்

விரியும் அலையானது என்னும் தடையை அடையும்போது அதன் விளிம்பிற் குக் கீழே உள்ள பகுதியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சிற்றலைகள் தோன்றிப் பரவுகின்றன. இவ்வாறு பரவும் சிற்றலைகளின் இடையே இணைதல் நிகழ்கிறது. இதன் விளைவாகத்தடைக்குக் கீழேயும் சிறிது தொலைவுவரை அலையின் விளைவு தெரியும். ஆகையால் தடையினால் அலையே சிறிது வளைந்து வருகிறது எனலாம். இவ்வளைவு நீள அலைகளில் அதிகமாகவும், சிற்றலைகளில் குறைவாகவும் இருக்கும். ஒளியலைகளில் நிகழும் விளிம்புமாற்றம் ஒளியலைக் கொள்கை என்ற கட்டுரையில் விவரிக்கப்படுகிறது.

அலைகளில் நிகழும் மூன்றாம் விளைவான துருவகரணம் குறுக்கலைகளில் மட்டுமே தோன்ற முடியும். கயிற்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையை அசைத்தால், அதில் குறுக்கலைகள் தோன்றுகின்றன. இப்போது கயிற்றை மேலும் கீழுமாகவோ, இடமும் வலமுமாகவோ, சாய்வாகவோ பல திசைகளில் அசைத்து, அத்திசைகளுக்கேற்ற அலைகளைத் தோற்றுவிக்கலாம். ஆனால் செங்குத்தான குறுகிய சந்து ஒன்றின் வழியே கயிற்றைச் செலுத்திப் பிடித்துக் கொண்டால், முன்போலக் கயிற்றில் எல்லாத் தளங்களிலும் அலைகளைத் தோற்றுவிக்க முடியாது. கயிற்றைச் சந்திற்கு இணையாக மேலுங்கீழுமாக அசைத்தால் மட்டும் அலைகள் தோன்றி முன்னேறும். இப்போது இந்த அலைகள் செங்குத்துத்தளத்தில் துருவகரித்துள்ளன எனக் கூறப்படும். இவ்விளைவு துருவகரணம் எனப்படும். குறிப்பிட்டதொரு தளத்தில் மட்டும் தோன்றக் கூடிய இந்த அலைகள் தளத்தில் துருவகரித்த அலைகள் எனப்படும். இதைப் போலவே வட்டமாகத் துருவகரிக்கும் அலைகளும், நீள்வட்டமாகத் துருவகரிக்கும் அலைகளும் உண்டு. பார்க்க : அலையியற் கொள்கை.

அலைட்டிஸ் (Alytes) ஐரோப்பாவிலுள்ள ஒரு

அலைட்டிஸ்

சாதித் தேரை. சாதாரணமாகத் தேரை, தவளை முதலியவை முட்டையிட்ட பிறகு அதைப் பாதுகாப்பதில்லை. சில வகைகளில் மட்டும் தங்கள் சந்ததியைக் கவனிக்கும் இயல்பூக்கம் காணப்படுகிறது. அலைட்டிஸ் அத்தகைய ஒரு சாதி. இதில் பெண் இடும் முட்டை பிசின் போன்ற பொருளில் பொதிந்து ஒரு மாலை போல் வரும். அந்த முட்டைமாலையை ஆண் தன் பின் கால்களில் சுற்றிக்கொண்டு, ஈரத்தரையில் குழி தோண்டி அதில் புதைந்து கொள்கிறது. இராக் காலங்களில் வெளியில் வரலாம். நீரில் முட்டைகளை அவ்வப்போது நனைத்தும் வரும். முட்டைகள் கரு வளர்ச்சி முடிந்து லார்வா நிலையடையும் சமயத்தில் வெளியே வந்து குளம் முதலிய நீர் நிலையில் சேரும். அங்கு அந்த லார்வாக்கள் முட்டையைச் சூழ்ந்திருக்கும் கோழையைவிட்டு நீங்கி, நீரில் நீந்தி வளர்ந்து உருமாறி அலைட்டிஸ் ஆகும். எல். எஸ். ரா.

அலைபரப்பி (Transmitter) : பார்க்க : ரேடியோ ஒலிபரப்பி.

அலைவாய் முருகன் படைவீடுகளில் ஒன்று. பார்க்க : திருச்செந்தூர்.

அலோபதி (Allopathy) என்பது பண்டைக் காலமுதல் மேனாட்டில் நடந்துவரும் வைத்திய முறைக்கு வழங்கிவரும் பெயராகும். இந்தப் பெயரைக் கொடுத்தவர் ஜெர்மன் நாட்டிலிருந்த ஹானிமன் என்பவர். அவர் நோய்ச் சின்னங்களை ஒத்த சின்னங்களை நோயில்லாதவரிடம் உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்துச் சிகிச்சை செய்தபடியால் தமது வைத்திய முறைக்கு ஹோமியபதி (ஹோமேர்-ஒத்த, பதி-சிகிச்சை முறை) என்றும், பண்டைக்கால முதல் வழங்கிவந்த வைத்தியமுறை நோய்ச் சின்னங்கட்கு வேறுபட்ட அல்லது எதிர்த்த சின்னங்களை உண்டாக்கும் மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்வதாகக் கருதியபடியால் அம்முறைக்கு அலோபதி (அலோ-வேறு பட்ட, பதி-சிகிச்சை முறை) என்றும் பெயரிட்டார். இந்த அலோபதி முறையே தற்காலத்தில் பொதுவாக உலக மெங்கும் வழங்கிவரும் விஞ்ஞான வைத்திய முறையாகும். மூலிகைகளைக் கொண்டும், ஆயுதங்களைக் கொண்டும், மின்சாரம், எக்ஸ்கதிர், தேகப்பயிற்சி போன்றவற்றைக் கொண்டும் செய்யப்பெறும். பலவிதமான சிகிச்சைகள் எல்லாம் அலோபதி முறையுள் அடங்கும். அலோபதி என்னும் மேனாட்டு வைத்திய முறையின் தத்துவத்தையே இந்திய நாட்டிலுள்ள ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி ஆகியவைகளும் உடையனவாகும்.

அவசரச்சட்டம் (Ordinance) : சட்டசபையால் இயற்றப்படாமல் ஆட்சியிலுள்ள அதிகாரிகள் ஓர் அவசர நிலைமையை முன்னிட்டுப் பிறப்பித்து, உடனே அமல் செய்யும் உத்தரவுகளுக்கு அவசரச் சட்டங்கள் என்று பெயர். இங்கிலாந்தில் இடைக்காலத்தில் இவ்வகைச் சட்டங்கள் அரசனால் பிறப்பிக்கப்பட்டன. பல காரணங்களால் அந்நாட்டில் பிற்காலத்தில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் முறை குறைந்து வந்துள்ளது. இங்கிலாந்தில் இவ்வகைச் சட்டங்களைத் தற்காலத்தில் கவுன்சில் உத்தரவுகள் என்று கூறுகின்றனர். இவற்றை மந்திரிசபையே இயற்றுகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது ஏற்பட்ட அவசரச் சட்டங்கள் பல. தேசிய இயக்கத்தை அடக்கவும், போர்க்கால அவசரத்தை முன்னிட்டும் பல அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியாவில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இவற்றைச் சட்டசபை கூடிய