பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவயவச் சீரியல்

232

அவயவச் சீரியல்

எலும்பு முறிவு பூட்டிற்கு அருகிலிருந்தால் பூட்டு நன்றாக அசையாது. சுவாசப்பைகளில் இரத்தம் உறைந்து மூச்சுத் திணறலாம். இருமினால் இரத்தம் வரலாம். 2. எலும்பு முறிவுக்கு உடனே கட்டுக் கட்டி அசையாதிருக்கச் செய்யாவிட்டால் மச்சையிலுள்ள கொழுப்பு இரத்தத்துடன் சேர்ந்து மூச்சுத் திணறலையும் சுரத்தையும் உண்டாக்கும். 3. படுத்திருப்பதாலும், கட்டுக் கட்டுவதால் உண்டாகும் அழுத்தத்தாலும் புண் உண்டாகலாம். இது ஆறுவதற்கு நீண்ட நாளாகுமாதலால் புண் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 4. புண்ணில் கிருமிகள் சேர்ந்தால் ஊனழுகல் (Gangrene) உண்டாகும். அதற்காகப் புண்ணை நான்கு பக்கங்களிலும் வெட்டி எடுத்துப் புண் இல்லாத பிளவுபோல் தைக்கிறார்கள். பென்சிலின், சல்பானி லமைடு என்பவற்றை 4 மணிக்கு ஒரு தடவையாக மாற்றிக் கொடுக்கிறார்கள். 5. மது அருந்துபவர்க்கும் கடின வேலை செய்பவர்க்கும் எலும்பு முறியும்போது கையாட்டம், சன்னி, சித்தப்பிரமை உண்டாகலாம். 6. சதைகள் இரத்த ஓட்டமில்லாமல் சுருங்கிப்போவ துண்டு. இது கடுமையானது.

இவ்விதமான சிக்கல்கள் ஏற்படாமல் கவனிக்க வேண்டும். எலும்பு முறிந்தவுடன் கவனித்துச்

இரத்த ஓட்டமில்லாமல் வற்றிய முன்கை

சேர்த்து வைத்துக் கட்டின பின் 12 மணி நேரத்திற்குள் இரத்த ஓட்டம் நன்றாய் நடக்கிறதா என்று கவனிக்கவேண்டும். விரல்கள் வீக்கமில்லாமல் ஆட்டக் கூடியனவாகவும், உணர்ச்சி யுள்ளனவாகவும் இருக்குமாறு கவனித்துக்கொள்ளு தல் வேண்டும்.

பூட்டிற்கு முன்பாக இரத்த ஓட்டமில்லாமல் எலும்புபோல் முரடு கட்டிக் கொண்டு பூட்டினுடைய அசைவுக்குக் கேடு உண்டாகலாம். இது பொதுவாகக் குழந்தைகளிடம் முழங்கை எலும்பு முறிவினால் உண்டாகும். எலும்பு முறிந்த இடத்தைத் தேய்ப்பதாலும், பிறர் அதை அசைப்பதாலும் உண்டாகும். முறிவை அசைவில்லாமல் கட்டி வைத்துப் பிறகு நோயாளியே மெதுமாக அசைக்கவும், தேய்க்காமலிருக்கவும் செய்தால் இந்தச் சிக்கல் ஏற்டாது.

எலும்பு முறிவுக்கு முதல் உதவி : வீக்கம் வருமுன் சிகிச்சை செய்வது நல்லது. எக்ஸ்கதிர்ப் படம் எடுப்பது நலம். நோவு இல்லாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் புரோகேயின் 1% மருந்து ஊசி குத்தவேண்டும். அல்லது ஈதர் மயக்க மருந்து கொடுத்து முதல் உதவிக் கட்டைக் கட்டவேண்டும். புண் ஏற்பட்டிருந்தால் சுத்தமாகக் கழுவித் தைக்கவேண்டும்.

அசைவில்லாமல் செய்வதற்காகப் பாரிஸ் சாந்துக் கட்டுப் போடலாம். இழுப்பு அல்லது சன்னி வராமலிருப்பதற்கு ஊசி குத்தவேண்டும். எலும்புகள் சேர 8-12 வாரம் செல்லும். கட்டுக்கட்டின 12 மணி நேரத்துக்குள் கால், கை விரல்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். விரல் குளிராமலும், நிறம் மாறாமலும், அசைவுள்ளதாகவும் இருக்கவேண்டும். வீக்கம் உண்டாகாதிருப்பதற்காக அடிபட்ட பாகத்தை உயர்த்தி வைக்கவேண்டும்.

மூட்டு விலக்குகள் : மூட்டின் உறை கிழிவதாலும், அல்லது உறையில் நச்சு நீர் ஊறிப்போவதாலும் உண்டாகும் தசைகளின் இழுப்பால் மூட்டு விலகிவிடுகிறது. முதுகில் அடி விழுவதாலும், ஆழமில்லாத நீரில் தலைகீழாகக் குதிப்பதாலும் முதுகெலும்பு விலகும். இதனால் கைகால் தளர்ந்து மலச்சிக்கலும் மூத்திர அடைப்பும் உண்டாகும். ஈதர் மயக்க மருந்து கொடுத்து மூட்டை உள்ளே தள்ளவேண்டும். மூட்டு விலகாதிருப்பதற்காகக் கட்டுப்போடவேண்டும். வீக்கமும் கிழிவுகளும் ஆறுவதற்கு இரண்டு வாரமாகும். நோயாளி முதலில் தசைகளையும் விரலையும் ஆட்டவும், பிறகு மூட்டை அசைக்கவும் செய்யவேண்டும்.

விளையாட்டு விபத்துக்கள் : கிரிக்கட்டு, ஹாக்கி விளையாடுவோருக்கு முழங்கால் மூட்டின் பூட்டிற்குள் இருக்கும் சவ்வு கிழியலாம். அது ஒட்டிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து பெயரலாம். இவ்வாறு நேர்ந்தால் நடக்க முடியாது, விளையாட முடியாது. மூட்டிற்குள் நீர் வைக்கும். மூன்று வாரம் நடக்காமல் நான்குதலைத் தசை (Quadriceps) தளர்ச்சியடையா திருக்குமாறு பயிற்சி செய்ய வேண்டும்.

க்ஷய நோய் : க்ஷயக் கிருமிகள் எலும்பிலோ அல்லது மூட்டுச்சுரப்புச் சவ்விலோ (Synovial Membrane) சேர்ந்துகொள்வதுண்டு. தந்துகிகள் அறுந்து விடும். உடம்பில் கொதிப்பும் இரத்தக் குறைவும் பசியின்மையும் நிறைக் குறைவும் உண்டாகும். பொதுவாக இது தடுக்கக்கூடிய நோய். பெரும்பாலும் முதுகெலும்பில் உண்டாகும். முதலில் நோவு உண்டாகும். குனியக் கஷ்டமாயிருக்கும் எக்ஸ் கதிர்ப்படம் எடுத்துப் பார்க்கவேண்டும். நோவும் முதுகுப் பிடிப்பு மிருந்தால் உடனே சிகிச்சை செய்ய வேண்டும்.. இந்த க்ஷயநோய் தோள்பட்டைப் பூட்டு, முழங்கை மூட்டு, மணிக்கட்டு, கைவிரல் எலும்புகளின் பூட்டு, மார்பு எலும்பு, முழங்கால் பூட்டு, கணுப்பூட்டு, கால்கை சிற்றெலும்புகள், கால்விரல் எலும்புப் பூட்டு இவை களில் உண்டாகும்.

பொதுவாகக் காற்று, ஒளி, சத்தான உணவு நிறையக் கிடைக்கும்படி செய்யவேண்டும். நோயுள்ள உறுப்பை அசையாமல் வைக்கவேண்டும். இதற்காகத் தக்க பத்தை, பாரிஸ் சாந்து முதலியவைகளைப் பயன்படுத்தவேண்டும். பூட்டை அசைக்கவோ, தேய்க்கவோ, மடக்கவோ கூடாது. பொதுவாக உடம்பின் மேற்பகுதியிலானால் ஒன்றரை ஆண்டிலும், கீழ்ப் பகுதியிலானால் இரண்டு மூன்று ஆண்டுகளிலும் குணமாகும். நான்கு திங்கட்கு ஒரு முறை எக்ஸ் கதிர்ப்படம் எடுத்துப் பார்த்து வரவேண்டும். ஸ்ட்ரெப்டோமைசின் மருந்தை அரை கிராம் நாடோறும் ஊசிகுத்தி, கால் சியம் பாஸ் என்னும் மருந்தையும் கொடுத்து வந்தால் உடம்பு விரைவாகத் தேறுகிறது. கட்டு எடுத்தபின் ஐந்து ஆண்டுகள்வரை அடிக்கடி கவனிக்கவேண்டும். மூட்டில் நோய் வராதிருப்பதற்குப் பலவித ஆப்பரேஷன்கள் செய்வதுண்டு. சிகிச்சை சரியாகச் செய்தால் 90% குணமடைவார்கள். பார்க்க : க்ஷயம்.

இடுப்பு வலி வயதானவர்களுள் 50% பேர்க்கு நேரிடுவதுண்டு. சிறுவயதில் ஏற்பட்டால் முதுகு எலும்பில் க்ஷயம் உண்டா என்று சோதிக்கவேண்டும். இல்லையானால் நரம்புத் தண்டில் தசைப் பெருக்கம் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். முதுகின் தசைகள் வலிமையற்றிருப்பது, வயிற்றின் தசைகள் வலிமையற்று முதுகின் தோலுக்குக்கீழ்க் கரடு கட்டியிருப்பது, எலும்புகள் திரும்பியிருப்பது போன்ற பல காரணங்களால் இவ்வலி ஏற்படும். இது பொதுவாக மிகுந்த கடினமான தொழில் செய்வார்க்கே நேர்கிறது. சைக்களிலிருந்து அல்லது சருக்கி வீழ்ந்தவர்க்கும் நேரும்.